தாகம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

தரணரியில் வாழும் மாந்தருக்காக
தன்னுயிர் ஈந்த இறைமகன்
தனிப்பெரும் தலைவனாக 
தன்னெஞ்சறிந்து தவிப்போடு சொன்ன வார்த்தை "தாகமாயிருக்கிறேன்." 
இது வெறும் உதடுகள் உதிர்த்த வார்த்தையன்று.

'நா வறண்டுபோன தாகமுமன்று. உடல், உள்ளம், ஆன்மா இவற்றில் ஏற்பட்ட தணியாத தாகம். மானிட மக்களின் அனைத்து நிலைகளிலும் நிறைவைக் காண இயேசு கொண்டிருந்த தாகத்தின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை.

தன்னைப் பின்சென்ற மக்களுக்கு, உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தாகம் (மாற். 8:2,3).

பிரிந்துபோன ஆடுகளைத் தேடிச்சென்று தன் மந்தையோடு இணைக்கவேண்டுமென்கிற வேட்கை. (. 10: 16).

நான் உன்னோடு தங்க வேண்டும்' என்று சொல்லி, தேடிச் சென்று மீட்கிற ஆன்மிக தாகம் (லூக். 19:5).

 உள்ள வறட்சியின் வெளிப்பாடே தந்தை மகன் இருவரின் உரையாடல். தன் மக்களுக்காக பேசுகிற செப வேட்கை (யோவா. 17).

இந்தத் தாக வேட்கை நமக்கும் இருக்க வேண்டும். சமுதாயத்தில் நடைபெறுகின்ற அநீத செயல்களைக் கண்டு, நாம் மிக எளிதாக முறையிடுகிறோம். துன்ப, துயரங்களைக் கண்டு முணுமுணுக்கிறோம். செய்யத் தவறிய நன்மைத் தனங்களுக்காக நம்மையே நாம் சமாதானப் படுத்திக்கொள்கிறோம். இச்சூழல் இன்றும் தொடர்கதை."தியோடர் ரூஸ்வெல்ட்" என்பவர் நியூயார்க்கின் செய்தியாளரான ஜேக்கப் ரீஸ் என்பவர் எழுதிய, 'வாழ்வின் மறுபக்கம்' என்ற நூலை வாசித்தார். சாதாரணமாக நாம், நம் வாழ்க்கையின் மறுபக்கத்தில் உயர்ந்தவர்களாகவும், பணம் படைத்தவர்களாகவும், அதிகார வர்க்கத்தினர்களாகவும், ஆடம்பரம், புகழ் இவற்றால் நிரப்பப்பட்டவர்களாகவும் எண்ணுகிறோம்.

ஆனால், அந்நூல் சமுதாயத்தின் செல்வச் செழிப்பு மிக்கவர்களை வர்ணிக்கவில்லை. மாறாக, நகரச் சூழலிலிருந்து வேறுபட்ட சேரியையும், அதன் ஏழ்மை நிலையையும் சுட்டிக்காட்டியது. ரீஸ் விவரிக்கின்ற இந்த வாழ்க்கை நிலையினர் இன்றும் நம்மிடையே உள்ளனர் என்பதை எழுதியிருந்தார். இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உள்ளுணர்வுடன் செயலாக்கத்தில் இறங்கினார். உடனே ரீஸ் பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால், ரீஸ் அங்கில்லை. மனந்தளராத ரூஸ்வெல்ட், "உங்கள் நூலை வாசித்தேன். உதவி செய்ய வருகிறேன்” என்று ஒரு தாளில் எழுதி அவர் மேசையில் வைத்துவிட்டு வந்தார். ரூஸ்வெல்ட், 'நான் உங்கள் நூலை வாசித்தேன். அதைப்பற்றி கலந்துரையாட வருகிறேன்' என்றோ, 'நூல் நன்றாக உள்ளது. எனவே, பரிசளிக்க வருகிறேன்' என்றோ எழுதவில்லை. மாறாக, ஏழை எளிய மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற வேட்கையால் தூண்டப்பட்டு உதவிசெய்யச் சென்றார்.

"எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியாது, ஆனால், எதையாவது ஒன்றைச் செய்யமுடியும். ஏனெனில் எல்லாவற்றையும் செய்ய முடியாத என்னால் எதையாவது ஒன்றைச் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது” 19ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர் எட்வர்ட் ஹேல் கூறியதை மேற்கோள் காட்டி பிறரன்புச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறரன்புச் செயல்களில் நாம் கொண்டிருக்கிற தாக வேட்கைதான் உண்மையான செபமும், தவமும், நோன்புமாகும்.

இயேசு கொண்டிருந்த, ரூஸ்வெல்ட் கொண்டிருந்த தாக வேட்கை நம்மிலும் இருக்கட்டும். வேட்கையைத் தணிக்க பிறரன்புச் செயல்களில் ஈடுபடுவோம். அப்போதுதான் நிறைவைக் காண முடியும்.

"இதய தாகம் என்னுள் நிறைய
இறைவா என்னுள்ளம் நிறைவைத் தேடி 
தாக வேட்கை கொண்டுள்ளது -
வேட்கை தீர ஏழை எளியவரோடு 
என்னை இணைத்திடு இறைவா!       - புனித அகுஸ்தினார்