உயிர்ப் புன்னகை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

புது விடியல், புது வாழ்வு, புது உறவு, புதுப்படைப்பு, இப்படி 'புது', 'புதிய' என்ற வார்த்தைகள் நம் அனைவர் முகத்திலும் ஒரு புன்னகையை இழையோடச் செய்கின்றன. தெளிந்த பார்வையையும், நம்பிக்கையையும் தருகின்றன.

மங்கிப்போன பார்வைகள்..... 
இருண்டுபோன பாதைகள்... 
அஸ்தமித்துவிட்ட உறவுகள்...
அடிமைப்பட்ட வாழ்க்கை
கவலை நிறைந்த சூழல்....
குழம்பிப்போன மனநிலை..... 
தளர்த்திவிட்ட உடல் நோய்கள் 
தாங்க முடியாத வேதனைகள்...

இந்த எல்லாவிதமான எதிர்மறை நிகழ்வுகளையும் மேற்கொள்ள வாழ்வில் புதுவிடியல் காண ஒரே ஒரு புன்னகை போதும்...

ஆம், புன்னகை உறவுக்கு உயிர் கொடுக்கிறது.
உறவை நிலை நிறுத்துகிறது.
வெளிச்சம் நிறைந்த விடியலைத் தருகிறது.

டான் ரிச்சி என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் மிகச் சிறந்த குடிமகனுக்கான விருதினைப் பெற்றார். தன்னுடைய புன்னகை மூலம் இந்தச் சாதனையைப் பெற்றிருக்கிறார். ஆம், ரிச்சி சிட்னியில் உள்ள கேப் என்று சொல்லப்படும் (தற்கொலைப் பள்ளத்தாக்கு) இடத்தில் 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வந்தார். இந்த இடத்தில் வாரத்திற்கு ஒரு தற்கொலையாவது நடக்கும். 'இந்த இடம் ஆபத்தானது' என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், தற்கொலை செய்ய வருபவர்களைத் தடுத்து, அவர்களுக்குக் காவல் தூதராகச் செயல்பட்டதால், சிறந்த குடிமகன் விருதைப் பெற்றார்.

ஒவ்வொரு நாள் பொழுது விடியும்போதும், ரிச்சி எழுந்து தன் அறையின் சன்னல் திரைகளை விலக்கி, எதிரே உள்ள மலை முகட்டை நோக்குவார். தங்கள் வாழ்வின் முடிவைத் தேடி யாராவது வந்திருக்கின்றார்களா என்று நோக்குவார். அவர் அப்படி யாராவது நிற்பதைப் பார்த்தால், விரைவாக ஓடிச் செல்வார். அவர்களை அழைத்துப் புன்னகையோடு அவர்களிடம் பேசுவார்.

அவர்களின் துன்பத்தை, நோய்களை, வேதனைகளை, விரக்திகளை, வெறுமைகளை மனமுவந்து கேட்பார். அவரின் புன்னகை நிறைந்த முகம் தரும் உறவால், தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள், கொஞ்சம் யோசிக்கத் தொடங்கும் போதே அவர்களைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தேநீர் கொடுத்து உபசரிப்பார். அவர்களுக்கு அறிவுரைகளோ, ஆலோசனைகளோ, தீர்ப்புகளோ எதுவும் சொல்லமாட்டார். அவர்களின் பகிர்வுகளை உள்வாங்கி வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவார். இதனால் அநேகரின் வாழ்வில் புதுவிடியலை ஏற்படுத்தித் தந்தார். மீண்டும் விடுதலை வாழ்வு வாழ அவர்களுக்கு வழிசெய்து கொடுத்தார். இந்த உயர்ந்த மனிதருக்குத்தான் ஆஸ்திரேலிய அரசு 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த குடிமகனுக்கான விருதை வழங்கியது. அப்போது அவர் சொன்னது, "எனது இந்தப் புன்னகையால் பலரின் வாழ்வுக்கு விடியல் தரமுடியும். இந்தப் புன்னகையால் எல்லாரையும் என் நண்பர்களாக்க முடியும்”.

உள்ளத்தில் உள்ள அனைத்து விதமான அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டோம் என்றால், நம் முகத்தில் எப்போதும் மலர்ச்சியும், புன்னகையும் தவழ்ந்திருக்கும். அதுவே நம்மைப் புதிய விடியலுக்கு அழைத்துச் செல்லும், பலருக்கும் வழிகாட்டும்.

இரக்கம் நிறைந்த புன்னகை புதுவிடியலைத் தரும்.
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தும். 
பசித்தோரை நலன்களால் நிரப்பும். 
அடிமை நிலையினரை உரிமை வாழ்வுக்கு
அழைத்துச் செல்லும்.
நோயுற்றோரைக் குணப்படுத்தும்...
ஆம்...
உறவுக்கு உயிர் கொடுக்கும் 
இந்தப் புன்னகையால்
விடுதலை பெறுவோம் -புது 
விடியல் காணுவோம்.