தரிசனம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

தரிசனம்''உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில்
தெய்வம் தரிசனம்
உலகாளும் தேவன் நெறி வாழும் இதயம்
தெய்வம் தரிசனம்
மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம்
தெய்வம் தரிசனம்
நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் 
தெய்வம் தரிசனம்
உறவோடு வாழும்போது....
உள்ளதைப் பகிரும்போது...
உண்மை வழி நடக்கின்றபோது...
உலகப் படைப்புகளை மதிக்கின்றபோது...


நமக்குள் எழுகின்ற மகிழ்ச்சியின் சிலிர்ப்பும், உணர்வும்தான் இறையனுபவம். இந்த அனுபவத்தின் வழி நமக்கு இறைவனின் தரிசனம் கிடைக்கிறது. தரிசனம் என்பது இரு உள்ளங்கள் சந்திக்கின்ற நிகழ்வு. இந்த நிகழ்வால் நம் வாழ்க்கை மாறுகின்றது.

ஆபிரகாமுக்கு கிடைத்த தரிசனத்தால் விசுவாசம் நிலைநிறுத்தப்பட்டது.

மோசேவுக்குக் கிடைத்த தரிசனத்தால் செங்கடல் கடப்பு நிகழ்வு உருவானது.

மரியாவுக்குக் கிடைத்த தரிசனத்தால் நம் அனைவருக்கும் மீட்பு கிடைத்தது.

“அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரிடம், சாலி என்ற பெண்மணி ஓடிச் சென்று, “என் மகன் எப்படி இருக்கிறான்? அவனை நான் பார்க்கலாமா?" என்று கேட்டார். மருத்துவர் சற்றுத் தாழ்ந்த குரலில், “மன்னிக்கவும், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம். ஆனால்... பயனில்லை” என்றார்.

'கடவுளே நீ எங்கு இருக்கிறாய்? இந்தச் சிறுவயதிலேயே என் மகனுக்குப் புற்றுநோயைக் கொடுத்து அவனைக் கொன்று விட்டாயே' என்று உரக்கக் கத்தினார் சாலி.

“உங்கள் மகனுடன் சிறுது நேரம் இருக்க விரும்புகிறீர்களா?' என்று மருத்துவர் கேட்க, 'ஆம்' என்று தலையாட்டினார் சாலி. ஒரு செவிலியப் பெண்ணுடன் அவரை உள்ளே அனுப்பினார் மருத்துவர். ஏனெனில் தான் இறந்தவுடன் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்துவிடும் படியாக அவன் தன் உடலை தானம் செய்திருந்தான். தன் மகனின் உடலை ஒப்படைத்துவிட்டு, கனத்த இதயத்துடன் வீட்டிற்கு வந்த சாலி வெறுமையாயிருந்த தன் மகனின் அறைக்குள் நுழைந்தார். அப்போது அவரது கண்களில் அந்தக் கடிதம் தென்பட்டது:

“அன்புள்ள அம்மா!

நீங்கள் என்னை இழக்கப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உங்களை மறந்துவிடுவேன் என்றோ. அன்பு செய்வதை நிறுத்திவிடுவேன் என்றோ நினைக்க வேண்டாம். எப்போதும் ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்துக்கொண்டே இருப்பேன். என்றாவது ஒருநாள் நாம் இருவரும் சந்திப்போம். நீங்கள் விரும்பினால் ஓர் ஆண் பிள்ளையைத் தத்தெடுத்துக் கொள்ளவும். அவன் உங்கள் தனிமையைப் போக்குவான். அவனுக்கு என் அறையையும், என் ஆடைகளையும் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் கொடுக்கவும். அல்லது ஒரு பெண் பிள்ளையைத் தத்தெடுக்க விரும்பினால், அவளுக்கென்று அவள் பயன்படுத்தும் விதமாக அனைத்தையும் வாங்கிக் கொடுக்கவும். நான் இருக்கும் இந்த இடம் மிக அழகானது. விரைவாகவே தாத்தா, பாட்டியைச் சந்திப்பேன். அவர்கள் எனக்கு இந்த இடத்தைச் சுற்றிக் காண்பிப்பார்கள். வானதூதர்கள் எல்லாம் எவ்வளவு அழகாகப் பறந்து செல்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அம்மா உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாம் படித்ததில் பார்ப்பது போன்று இயேசு இல்லை. எவ்வளவு பிரகாசமாக, அழகாக இருக்கிறார்! அவர் என்னைக் கடவுளிடம் அழைத்துச் சென்றார். நான் அவருக்கு மிகவும்!. முக்கியமானவன்போல, அவர் காலடியில் அமர்ந்து அவருடன் பேசினேன்.

நான் உங்களுடன் பேசவேண்டும் என விரும்பிக் கடிதம் எழுத வேண்டும் எனச் சொன்னபோது, அவர் எனக்குச் சில தாள்களையும், தன்னுடைய சொந்த பேனாவையும் கொடுத்து எழுதச் சொன்னார். நான் எழுதும் இந்தக் கடிதத்தை கபிரியேல் தூதர் உம்மிடம் வந்து கொடுப்பார். நான் எழுதியதை யாராலும் பார்க்கவும், படிக்கவும் முடியாது. உமக்கு மட்டுமே அது தெரியும். அம்மா. இந்தப் பேனாவை திரும்பவும் கடவுளிடம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அம்மா ஒன்று சொல்ல மறந்து விட்டேன். என் புற்றுநோய் மறைந்துவிட்டது. எனக்கு வலியில்லை, துன்பமில்லை. கடவுள் அவருடைய தூதர் வழியாக என்னை எடுத்துக்கொண்டார். நான் அவருக்கென்று படைக்கப்பட்ட சிறந்த படைப்பு. அவர் தரிசனம் கிடைத்துவிட்டது.

                                                                                               அன்புடன்,

                                                            கடவுள், இயேசு மற்றும் நான்.

கடவுளை முகமுகமாய்க் கண்டு அவர் காலடி அமர்ந்து இன்புற்ற அந்தச் சிறுவனின் அனுபவமே இறையனுபவம். நாம் அனைவரும் இறைவனுக்கென்றே இவ்வுலகில் பிறந்த சிறந்த படைப்புகள். அதை உணரும்போது இறையனுபவம் பெறுகின்றோம். இறைவனைத் தரிசிக்கின்றோம்.

நோய்வாய்ப்படும்போது.... 
இயலாமையில் இருக்கும்போது....
இறக்கும் தருவாயில்... 
இருப்பதைப் பகிரும்போது.....

என எல்லாச் சூழலிலும் ஏற்படும் அனுபவம் நமக்கு மகிழ்ச்சியை அளித்தால் அதன்வழி, நாம் இறைவனைச் சந்திக்கின்றோம். அதுவே தெய்வ தரிசனம். அதையே தினம் தினம் தேடுவோம்.