தூய பார்வை – தூய வாழ்வு | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 11 ஆம் வாரம் –  வெள்ளி

2 அரசர் 11: 1-4, 9-18, 20
மத்தேயு 6: 19-23 

 
 தூய பார்வை – தூய வாழ்வு

 
முதல் வாசகம்.


 இன்றைய முதல் வாசகமானது சற்று நீளமானது. ஏறக்குறை 15 வசனங்களை உள்ளடக்கியது. யூதாவின் அரசன் அகசியா இறந்தபின், அவரது தாய் அத்தலியா அரசாட்சியைக் கைப்பற்றுவதற்காக அரச குடும்பத்தின் வாரிசுகளை அழிக்க முயன்றாள். ஆனால் அகசியாவின் மகனான யோவாசை அவரது அத்தை (ஆகாசின் சகோதரி) யோசேபா மறைத்து ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் ஆலயத்தில் பாதுகாத்தாள்.
ஏழாம் ஆண்டில் தலைமைக் குருவான யோயாதா, படைத்தலைவர்களுடன் உடன்படிக்கை செய்து யோவாசை மக்களின் முன் கொண்டு வந்து அரசனாக முடிசூட்டினார். மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து புதிய அரசனை வரவேற்றனர்.
இதைக் கண்ட அத்தலியா “துரோகம்! துரோகம்!” என்று கூச்சலிட்டாள். ஆனால் யோயாதாவின் கட்டளையின்படி அவள் அரண்மனைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டாள். பின்னர் ஆண்டவருக்கும் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது.
அதன்பின் மக்கள் அன்னியர் தெய்வமான பாகால் கோவிலை இடித்து, அதன் பலிபீடங்களையும் சிலைகளையும் அழித்தனர். நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியது; மக்கள் அனைவரும் புதிய அரசன் யோவாசின் ஆட்சியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் என்று ஆசிரியர் கூறுகிறார்.

நற்செய்தி.

இப்பகுதியில் இயேசு, அழிந்து போகக்கூடிய உலகச் செல்வங்களை இவ்வுலகில்   சேர்த்துவைக்காமல், அழியாத விண்ணகச் செல்வங்களைச் சேர்த்துவைக்கும்படி அறிவுறுத்துகிறார். ஏனெனில் ஒருவரின் செல்வம் எங்கு இருக்கிறதோ, அவரது இதயமும் அங்கேயே இருக்கும் என்று கூறுகிறார்.
மேலும், கண் உடலின் விளக்கு என இயேசு விளக்குகிறார். ஒருவரின் கண் தூய்மையாகவும் நல்லதாகவும் இருந்தால், அவரது முழு வாழ்வும் ஒளியால் நிறைந்திருக்கும். ஆனால் கண் தீயதாக இருந்தால், அவரது வாழ்வு இருளால் நிறைந்திருக்கும். எனவே, மனிதன் தனது மனதையும் பார்வையையும் இறைவனை நோக்கி நேர்மையாக வைத்திருக்க வேண்டும் என்று உலகினருக்கு எடுத்தியம்புகிறார். 

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், இறைவன் தம் வாக்குறுதியின்படி தாவீதின் அரச வழிமரபை எப்படி  பாதுகாத்தார் என்பதை அறிந்தோம்.  தீமை மற்றும் அநியாயம் செய்ய விழைவோரின் திட்டமும் செயலும் வெற்றிபெறாது என்பதற்கு இன்றைய முதல் வாசகம் நல்லொரு படிப்பினையாக உள்ளது.   
 
நற்செய்தியில் இயேசு, “உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்” என்று கூறுகிறார். உலகச் செல்வங்கள் அழிந்துபோகும்; ஆனால் இறைவனில் சேமிக்கப்படும் ஆன்மீகச் செல்வம் நிலைத்திருக்கும். மேலும், “கண் உடலின் விளக்கு” என்று கூறி, தூய்மையான பார்வையும் நேர்மையான இதயமும் அவசியம் என்பதை உணர்த்துகிறார்.
 
நாம் செல்வத்தையும், பொருள் உடைமைகளையும் கனவு காண்பதும் அதற்காக அல்லும் பகலும் உழைப்பதும் இயல்பு.  ஆனால், நாம் இவ்வுலகில் செல்வத்தையும், பொருள் உடைமைகளையும் அடைய முயற்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கள்வியை நம்மில் எழுப்பத் தவறுகிறோம். ஆண்டவர், “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம்’ என்றுதான் அறிவுறுத்துகிறார். இங்கே ‘சேமித்து வைத்தல்’ மைய செய்தியாக உள்ளது.


இவ்வுலகில் வீடு வாசல் வாங்க வேண்டாம் என்பது ஆண்டவரின் படிப்பினை அல்ல. ஒன்றிருக்க மேலும் மேலும் சேர்க்க வேண்டாம் என்கிறார். எது நமக்கு அடிப்படை என்று கருதுகிறோமோ அதில் அல்லது அவற்றில் மட்டும் நமது கவனம் இருக்க வேண்டும். மேலும், மேலும சேர்க்க நினைப்பதும் உழைப்பதும் பேராசையின் விளைவாகும். 


இயேசுவின் இந்தப் போதனையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதற்கான ஒரு காரணம், பொருள் வசதிகளால் நமக்கு இங்கு பாதுகாப்பு உண்டு என்று நம்புவதாகும். நாம் பெரும்பாலும் செல்வத்திலும் பேரிலும் புகழிலும் அடுத்திருப்பவரை மிஞ்சப் பார்க்கிறோம். அதில்தான் வெற்றி என்று நினைக்கிறோம். எனவே, எளிமையும் பற்றின்மையும் கொண்ட ஒரு வாழ்க்கை இன்னும் பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பதை நம்புவதற்குப் போராடுகிறோம். 


இயேசு நம்மை வறுமைக்கு அழைக்கவில்லை, மாறாக செல்வத்தின் மீதான அளவுக்கு மீறிய பற்றிலிருந்து விடுபடும்  வாழ்க்கைக்கு அழைக்கிறார்; ஏனெனில், நமது உண்மையான பாதுகாப்பு கடவுளிடமே உள்ளது. 


நிறைவாக, கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும் என்கிறார் ஆண்டவர்.   ஆம், ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே, என்ன சொன்னாலும் கண் தேடுதே....’ என்ற ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருகிறது. நல்லது கெட்டது அனைத்தும் நமது பார்வையில் அடங்கியுள்ளது.  
ஆகவே,   “என் செல்வம் எது? என் இதயம் எங்கே உள்ளது?” என இன்று நாம் நம்மையே கேட்டுக்கொள்வோம்: நமது இதயமும் பார்வையும் இறைவனை நோக்கி இருந்தால், நமது வாழ்க்கை ஒளியால் நிறைந்து, இறைவனின் அமைதியையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கும்.

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16:26) 

இறைவேண்டல்.

அன்பு ஆண்டவரே, அழிந்துபோகும் உலகச் செல்வங்களில் அல்லாமல், விண்ணகச் செல்வங்களில் என் இதயத்தை நிலைநிறுத்த அருள் தாரும். ஆமென்


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image