5 லட்சம்? | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
பிறப்புக்கும் இறப்புக்கும் சிறப்பு இருக்கும் பட்சத்தில் அதுதான் புதுவாழ்வு - இறைவனில் புதுவாழ்வு.
புதுவாழ்வின் தொடக்கமாகக் கொடுக்கப்பட்டது. காலம் என்னும் கொடை. வாழ்வு நீட்டிப்பு என்ற கொடை. இங்கு நாம் கடந்த கால அனுபவங்களைப் பாடமாக்கிக்கொள்ள வேண்டும். புதியவற்றை நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடந்தகால மணித்துளிகளை நாம் எவற்றால் நிரப்பியிருக்கிறோம்? பணம், பதவி, பட்டம், புகழ், இப்படி என்றால், அது வீண். இவற்றைக்கொண்டு நாம் ஒரு மணித்துளியைக் கூட வாங்க முடியாது. ஒவ்வொரு மணித்துளியையும் மகிழ்ச்சியால் நிரப்புவோம். புதுவாழ்வின் தொடக்கமும் இதுதான்.
ஒரு கருமி ஐந்து இலட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தான். அவன் தமது பணத்தை எந்தவிதமாக, சிறந்த முறையில் முதலீடு செய்யலாம் என யோசித்து, தோற்றுபோக... ஒரு முடிவு செய்தான். ஒரு வருடம் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த விரும்பினான். ஆவலுடன் அதை எதிர்பார்க்கவும் செய்தான். அப்போது திடீரென்று மரண தேவதை அவனுடைய வாழ்க்கையை எடுத்துச் செல்வதற்காக அவன்முன் தோன்றியது.
இன்னும் சிறிது காலம் தம்மை வாழ அனுமதிக்க வேண்டுமென்று கருமி மரண தேவதையிடம் கெஞ்சினான். வேண்டினான்; ஆயிரக்கணக்கான விவாதங்களை நடத்தினான். ஆனால், மரண தேவதை அவனது கெஞ்சல்கள் எதையும் காதில் வாங்கவில்லை; மனம் இரங்கவும் இல்லை. மீண்டும் கருமி, “எனக்கு மூன்று நாள்கள் மட்டும் வாழ்வு கொடுங்கள்” என்று கெஞ்சினான். மரண தேவதை அதற்கு கொஞ்சமும் சம்மதிக்காமல் அவனைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. "எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தாருங்கள். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். நான் அதிக வியர்வை சிந்திக் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த இந்தப் பணம் முழுவதையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான். அதற்கும் மரண தேவதை சம்மதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் போராடி மரண தேவதையிடமிருந்து ஒரே ஒரு சிறிய சலுகையை மட்டும் போராடிப் பெற்றுக்கொண்டான். அதுதான் கீழே கொடுக்கப்பட்ட குறிப்பை எழு எழுத தேவைப்பட்ட சில மணித்துளிகள்.
“இந்தக் குறிப்பை காண நேரிடுகிற நீங்கள் யாராக இருந்தாலும், உங்களிடம் வாழ்வதற்குத் தேவையானப் பணம் இருந்தால் போதும். சொத்துகளைக் குவிப்பதற்கும், மேலும் மேலும் பணத்தைச் சேகரிப்பதற்கும் உங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்."
வாழ்க்கையை நன்றாக அனுபவித்து, இரசித்து, பிறருக்கு நன்மை செய்து மகிழ்ச்சியோடு வாழுங்கள். எனது ஐந்து இலட்சம் ரூபாயால் எனக்கு ஒரேயொரு மணி நேர வாழ்க்கையைக்கூட வழங்கமுடியவில்லை.””
இந்த மணித்துளியும் வாழ்வின் கொடையாக இறைவன் நமக்குக் கொடுத்தது. இந்த மணித்துளிகளை உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையால் நாம் நிரப்பிக்கொண்டால், நிமிடங்கள் தானாக வந்துசேரும், அந்த நிமிடங்கள் நாள்களாகி நம்மை மீண்டும், மீண்டும் புத்துயிர்பெறச் செய்து புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லும். நாம் தொலைத்த மணித்துளிகளை நமது பணத்தால், பலத்தால், பதவியால், புகழால் எந்த விதமான உயர் மதிப்புள்ள சொத்துகளாலும் வாங்க முடியாது. காலத்தை இழந்தவர்கள் வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள்.
கடவுளின் சாயல் -நாம்
கடவுளின் சக்தி -நாம்
கடவுளின் சாதனம் நாம்
கடவுளின் பிம்பம் - நாம்
கடவுளின் பிரதிபலிப்பு - நாம்
கடவுளின் பிரசன்னம் - நாம்
கடவுளின் பிரதிநிதி -நாம்
எனவே, இருக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழும் ஒவ்வொரு நாளும்
விரவப்படும் ஒவ்வொரு காலமும்
நிறுவப்படும் ஒவ்வொரு நிகழ்வும்
நம்மில் புதிய மாற்றத்தை உருவாக்கட்டும்.
தீயவற்றிலிருந்து நல்லவற்றிற்குப் பிறப்போம். நல்லவற்றிலிருந்து மிக நல்லவற்றிற்குப் புதிதாகப் பிறப்போம்.
