அதிசயக் கல் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
வாழ்க்கை பல வாய்ப்புகளை வழங்குகிறது.
வாழ்க்கை பல மாற்று வழிகளைக் காட்டுகிறது.
வாழ்க்கை தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி,
வளர்ச்சி பெறுவோம். வெற்றியடைவோம்.
வாய்ப்பு, வசதியும் எப்போதுமே வராது.
வரும்போது நழுவ விட்டுவிட்டவர்கள், வருத்தப் படுகிறார்கள்.
வரமாகக் கருதி பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற நூலகம் ஒன்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஏறக்குறைய 95 சதவீதம் நூல்கள் தீக்கிரையாகின. எஞ்சிய சில நூல்கள் வழிபோக்கர் சிலரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இளைஞன் ஒருவன், முன் மற்றும் பின் அட்டைகள் எரிந்து எஞ்சிய நிலையில் இருந்த ஒரு நூலை எடுத்துச்சென்றான். அந்நூலின் நடுவில், அடிக்கோடிட்டு 'மிக முக்கியம்' என்று குறிப்பிட்டிருந்த பின் வரும் பகுதியைப் படித்தான். “அதிசயக்கல் ஒன்று இருக்கிறது. பார்ப்பதற்குக் கூழாங்கல் போன்று தோற்றமளிக்கும் அந்தக் கல் தான் தொடுகிற அனைத்துப் பொருட்களையும் தங்கமாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது. கடற்கரையில் காணப்படும் மற்ற கூழாங்கற்களுக்கும் இந்த அதிசயக் கல்லுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு. கடற்கரையில் உள்ள எல்லாக் கூழாங்கற்களும் தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், இந்த அதிசயக் கல் மட்டும் கொஞ்சம் இதமான சூடாக இருக்கும்.”
இந்தப் பகுதியைப் படித்தவுடன் அந்த இளைஞன் தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியை விற்றுக் கடற்கரைப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கே கூடாரம் அமைத்துத் தங்கினான். கடற்கரையில் இருந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்தான். தொட்டுப்பார்த்தான். குளிர்ச்சியாக இருந்தது. அவ்வாறு குளிர்ச்சியாக இருந்ததால், மீண்டும் அதனை எடுக்காமல் இருக்க, கடலுக்குள் வீசி எறிந்தான். இவ்வாறே தொடர்ந்து செய்துகொண்டே இருந்தான். ஆனால், அதிசயக்கல் அகப்படவில்லை. நாள்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடமாயின.... பயனில்லை. கடற்கரையில் உள்ள கூழாங்கற்கள் தீரும் நிலை.
திடீரென தான் எடுத்தக் கல் சற்று இதமாக இருப்பதாக ஒரு நினைப்பு. ஆனால், உண்மையிலே அந்தக் கல் இதமான சூடாகத்தான் இருந்தது. ஆனால், அந்த இளஞ்சூட்டை அவன் உணரும் முன்பே, தான் வீசி எறிந்து, எறிந்து பழக்கப்பட்ட அனிச்சைச் செயலால் அந்த அதிசயக் கல்லையும் கடலுக்குள் தூக்கி எறிந்து விட்டான்... பிறகு நினைத்து வருத்தப்பட்டான், புலம்பினான், அங்கலாய்த்தான். பலனில்லை. நழுவியது... நழுவியதுதான்.
வாய்ப்பும் இந்த அதிசயக்கல்லைப் போன்றதுதான். கையில் கிடைக்கும்போது தன்னுணர்வுடன் இருந்து பயன்படுத்தவேண்டும். வரும் வாய்ப்புகளை வரமாகக் கருதவேண்டும். தவறவிட்டு வருத்தப்படுவதைவிட, பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும். வாய்ப்பு நம் வாழ்வுக் கதவுகளைத் தட்டும்போது திறந்து வைப்போம். வெற்றியும் சேர்ந்து உள்ளே வரட்டும்.