நன்மையில் திளைத்து நற்செயலை நம் அடையாளமாக்குவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதுவும் நமக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில், பிடித்தமான துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் நமது ஆவலாக இருக்கிறது. அப்படி ஆவல் நம்மில் எழுந்துவிட்டது என்றால் நாம் அதில் தீவிரமாய் பணியாற்ற வேண்டும். நமக்குள் எழும் வெறியும், தாகமும் மட்டும்தான் நாம் முன்னேற்றப் பாதையை நோக்கி நடக்க நமக்கு உதவும். நம்மில் பலருக்கு அதிகாலையில் எழுவது என்பது இயலாத காரியமாக தோன்றுகிறது.

ஆனால் அது நம்மால் இயலும் என்பதை நம் ஆழ்மனதிற்குள் பதிக்காத காரணத்தால்தான் நம்மால் இயலாமல் போகிறது என்பதுதான் உண்மை. பள்ளிக்கு செல்லும் நமது குழந்தைகளுக்கு தினமும் காலையில் எழுந்து படிப்பது கடினமாக தோன்றினாலும் தேர்வு சமயங்களில் அவர்களால் எப்படி எழும்ப முடிகிறது? தேர்வுகளில் எவ்வாறு முழுத்தேர்ச்சியை அடைய முடிகிறது? நாம் தீவிரமாக ஒன்றைச் செய்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்துவிட்டால் நம்மால் எல்லாம் முடியும் என்பதுதான் உண்மை. பல சமயங்களில் நாம் நமது குறிக்கோளை நோக்கி ஓடுவதை விடுத்து, நமக்கு போட்டியாளராக இருக்கும் நபரை எப்படி வீழ்த்தலாம் என்றும், அவர்கள்மேல் பொறாமை உணர்வு கொண்டு எழுவதும்தான் நம்மில் பலருக்கு குறிக்கோளாகவே இருக்கிறது. போட்டி உணர்வு நம்மில் இருப்பது தவறில்லை. ஆனால் அதுவே பொறாமையாக மாறிவிடக்கூடாது என்பதை மனதில் பதித்து நமது சாதனையை நோக்கி பயணத்தை தொடர்வோம். 

இன்றைய காலக்கட்டத்தில் நாம் எதில் தீவிரம் காட்டுகிறோம் என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில், மற்றவர்களை ஒன்றுமில்லாமல் அழிப்பதில், மற்றவர்கள்மேல் காழ்ப்புணர்வு கொள்வதில், சதா காலமும் மற்றவர்களைப்பற்றி புறணி பேசுவதில் எதற்கெடுத்தாலும் குதர்க்கமாக பேசுவதில், நமக்கு பிடித்த தலைவர்களுக்காக கூட்டம் சேர்ப்பதில், இப்படியாக தேவையில்லாத வி~யங்களில்தான் தீவிரமாய் இருக்கிறோம்.

ஒரு நிமிடம் நின்று நிதானித்து சிந்தித்துப் பார்த்தால் இவையெல்லாம் தேவையற்றவை என்பது நிச்சயம் நமது புத்திக்கு உரைக்கும். அப்படியும் உரைக்கவில்லை என்றால் நாம் எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்வியை நாம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும்.

முதலில் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு வாழ்வோம். வாழ்வை வளமாக்குவோம். அதுவே நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து கொள்வோம். நமக்குள் எழும் வெறியும், தாகமும் மட்டும்தான் நாம் முன்னேற்றப் பாதையை நோக்கி நடக்க நமக்கு உதவும்.

Tamil Survey Popup Image