மெழுகுவர்த்தி | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
மெழுகுவர்த்தி
மென்மையான ஒளியை
இருளில் மேன்மையாய் வழங்கும் தியாகத்தின்
திருஉருவம்!
ஒரு மெழுகுவர்த்தி
பல மெழுகுவர்த்திகளை ஏற்றினாலும் அதன் சிறப்பு குறைவதில்லை!
இருளை விரட்டப் பிறரையும் தன் உன்னதப் பணியில் சேர்த்துக்கொள்வதில் அதற்குப் பேரானந்தமே!
தன்னைக் கரைத்துப் பிறரை மகிழ்விக்கும் மெழுகுவர்த்தி பிறர் வாழ்வு ஒளிர தன்னைப் பலியாக்கும் தற்கையளிப்பின் தன்னிகரற்ற தியாகச் சுடர்!
மெழுகுவர்த்தி எரிந்து ஒளிதர நெருப்பு அவசியமாவது போல, நம் வாழ்வு ஒளிர பிறர் உதவி தேவையன்றோ!
'திரியாகிய நான்தான் எரிகிறேன் என்றாலும் நீ ஏன் அழுகிறாய்?' என்று வியப்புடன் மெழுகைக் கேட்டது திரி!
'எனக்குள் இருக்கும் உன் வேதனை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் நான்' என்றதாம் மெழுகு! இதுவன்றோ உண்மை அன்பு!
இருளில் இருக்கும் போது மட்டுமே என்னை நீங்கள் தேடுகிறீர்களே என எனக்கு வருத்தமில்லை; துயரத்தில் துணை நிற்க நான் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்கிறது மெழுகுவர்த்தி!
உங்கள் பிறந்தநாளில் என்னை ஊதி அணைத்து அல்ல;
ஏற்றி வைத்து வாழ்வைக் கொண்டாடுங்கள். உங்கள் வாழ்வு ஒளிமயமாகட்டும்!
வாழ்க வளமுடன் நலமுடன் 🔥🔥🔥