தாகம் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil
தாகம்
தண்ணீருக்கானது மட்டுமல்ல;
மனிதரின் பல்வேறு தேவைகளுக்கானது.
தணியா தாகம் கொண்டு அலைவோர் தரணியில் எத்தனை பேர்?!
'நான் தாகமாயிருக்கிறேன்' என்னும் இயேசுவின் தாகம் அன்புக்கானது; அமைதிக்கானது; இறையாட்சியை மண்ணில் மலரச் செய்ய விரும்பியது;
அது உலகை மீட்கக் கொண்ட உயிர்த் தாகம்!
அறிவை ஆர்வமுடன் நாடித் தேடுவோரின் அறிவுத் தாகம் தணிவதே இல்லை; அறிவென்னும் கடலில் பருகப் பருகத் தாகம் அதிகரிக்கிறதே அன்றி குறைவதே இல்லையே!
அன்பைப் பெற விழையும் இதயத்தின் தாகம் தணிய வழிதான் என்னே?
அன்பை வாரி வாரி வழங்குவதால் அன்றோ தணியும் இதயத்தின் ஈடில்லா தாகம்!
உடைந்த உள்ளத்தின் தாகம் தணிக்கும் மருந்து: பொய்மைக்கு உண்மை; வெறுப்புக்கு அன்பு; துரோகத்துக்கு நட்பு;
துயரத்துக்கு ஆறுதல்; கவலைக்குக் கனிவு; ஏமாற்றத்துக்குப் புரிந்து கொள்ளும் உள்ளம்!
அதிகாரம், பணம், பதவி போன்றவற்றுக்காகத் தாகம் கொண்டு அலைவோர் தாகம் தீராமல் பிறரின் உரிமைகளைப் பறித்து, உணர்வுகளைச் சிதைத்து, தங்களின் தாண்மையை இழந்து வாடுவதுதான் ஏனோ?
'தாகமாய் இருப்போரே வாருங்கள்; வந்து பருகுங்கள்' என்றழைக்கும் இறைவனிடம் செல்லுங்கள்!