அடுத்த தலைமுறைக்கு எதைக் கடத்துகிறோம்? | Veriats tamil

சமீபத்தில் என் உறவினரிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். எதிர்முனையில் அவரது 17 வயது மகன் யாரிடமோ கோபமாகக் கெட்டவார்த்தைகளில் பேசிக்கொண்டிருப்பது என் காதுகளுக்கு எட்டியது. தன் தாய் மற்றும் சகோதரி முன்னால் கூச்சமின்றிப் பெண்களின் முன்னிலையில் கெட்டவார்த்தையாக பேசிக்கொண்டிருக்கிறானே என்கிற எண்ணத்தில், "இப்படிப் பேசுகிறான், அதுவும் உங்க பக்கத்துல இருந்துக்கிட்டு, அவன் அக்காவும் இதையெல்லாம் கேட்டிட்டு இருக்கா... சற்று கடிந்துகொள்ளக்கூடாதா?" என்றேன். "அவனுட்ட சொல்லப்போனா இப்ப என்ன அவன் தாறுமாறா கூப்பிடுவான். நீங்க கண்டுக்காதீங்க" என்றார். இதுதான் இன்றைய எதார்த்தம்.

கெட்டவார்த்தை பேசுவதைப் பெருங்குற்றச்செயலாகப் பாவித்து வாயில் சூடுபோடுவது,சாப்பாடு தர மறுப்பது, முட்டங்கால்போட வைப்பது, மரத்தில் கட்டிவைத்து எறும்பைக் கடிக்க விடுவது எத்தனை தண்டனைகள் அனுபவித்திருக்கிறோம் கடந்த காலங்களில். இன்னொரு குடும்பத்தில் வேலைக்குப் போய் இரண்டு மாதச் சம்பளம்தான் வாங்கியிருக்கிறான். அதற்குள் தனது தாயிடம் கணக்குக் கேட்கிறான் மகன்; தான் சொல்வதுபோலத்தான் செலவிட வேண்டுமென்று கட்டளையிடுகிறான். அவனைப் படிக்க வைக்கவும், அவன் தந்தைக்கு மருத்துவச் செலவீனத்திற்காக வாங்கிய கடன் பற்றியும் அவனுக்கு அக்கறையில்லை. இப்பவே இப்படி அடக்கி ஆள்கிறான்... என்று ஆதங்கப்பட்டாள் அவன் தாய்.

இன்றளவும் பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தெரிந்து கொள்ள இவ்விரு சாதாரண நிகழ்வுகளுமே நமக்குப் போதும்! பொதுவெளியில் எவ்வளவு சமத்துவம், சமஉரிமை பேசினாலும், ஆட்சி அதிகாரங்களில் பொறுப்புகள் வழங்கினாலும், குடும்ப வாழ்வியல் சூழல்களில் பெண்களை இரண்டாம்தரமாகவே நடத்துகின்றோம்

சமீபத்தில், ஆணாதிக்கத்தை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தும் "எனது ஆண்கள்" என்கிற மலையாள மொழிப்பெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நம் குமரி மாவட்டப் பேராசிரியர் விமலா. அவருக்குப் பாராட்டுகள். பெண்ணுக்குத்தான் இங்குச் சட்டங்களும், திட்டங்களும், கற்புநெறியும் என்கிற உண்மையை ஒரு பாலியல் தொழிலாளியின் அனுபவங்களிலிருந்து பதிவு செய்துள்ளது இந்நூல். இன்றளவும் பெண்கள் மீதான நம் சமூகத்தின் பார்வை பெரிதாக மாறிவிடவில்லை என்பதே எதார்த்தம்.

எண்ணமே செயல் என்பது உண்மை. தங்களுக்குப் பின் அல்லது தாங்கள் உயிரோடு இருக்கையில் தங்களது சொத்துக்களை, வங்கி சேமிப்புகளைக் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெற்றோர், அதற்காகவே பாடுபட்டு உழைக்கிறோம்; தவறில்லை. ஆனால் நீடித்தச் செல்வமான நற்பண்புகளை, நல்ல வார்த்தைகளை, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க பெரும்பாலும் முயற்சிகள் எடுக்க முன்வருவதில்லை. அறம் கற்பிக்கும் பொறுப்பைப் பள்ளிக்கல்லூரிகளிடமும், தேவாலயப் அருட்தந்தியர்களிடம் விட்டுவிடுகிறோம்.

இன்று அதிகம் தேவை, பெற்றோரின் முன்னுதாரணமான வாழ்க்கை முறை. கோபப்பட்டு ஏதாவது செய்துவிடுவானோ என்கிற போலி எண்ணத்திலே கண்டுகொள்ளாமையைப் பெற்றோர் கடைப்பிடிப்பது தவறு. குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல எண்ணங்களோடு பிள்ளைகளை வளர்த்தல் வேண்டும். இரு குழந்தைகளுக்கும் சமஉரிமை, மதிப்பு, சமவாய்ப்புகளோடு வளர்ப்போம் பிள்ளைகள் முன்னால் நாமே கெட்டவார்த்தைகள் பயன்படுத்துவதை, கொச்சைப்படுத்தும் வீடியோக்களைப் பார்த்து ரசிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்; பெண்ணினமே பெண்ணினத்தை இழிவுபடுத்தும் கொடுமைதனை அடியோடு அழிப்போம்.

அருள்பணி. ம. டைட்டஸ் மோகன்