தடைகளைத் தாண்டி தடம் பதிப்போம் ! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil
நாம் ஒவ்வொருவரும் சிறந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதற்கு ஏராளமான அவமானங்களை சந்திக்க வேண்டும். அப்படி அவமானங்களை சந்திக்க நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளவில்லையென்றால் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்பு இல்லை. எந்த ஒரு நபரும் அவமானங்களை சந்திக்காமல் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை அடைந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி அவமானங்களை சந்திக்கவில்லையென்றால் தவறான வழியில் அல்லது குறுக்கு வழியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முதலில் நமக்கென ஒரு குறிக்கோளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நமது கவனத்தை முழுவதுமாக அதில் செலுத்த வேண்டும். பல சமயங்களில் நாம் ஒரே நேரத்தில் அனைத்து செயல்களையும் செய்து மற்றவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக பலவற்றில் நமது கவனத்தை செலுத்திவிட்டு ஒன்றையும் முழுமையாக செய்ய முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையை தவிர்த்து சிந்தனைகளை சிதறவிடாமல் குறிக்கோளில் நமது கவனத்தை செலுத்துவோம்.
நாம் ஒவ்வொருநாளும் எத்தனையோ விதமான மனிதர்களை சந்திக்கிறோம். அத்தனை மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் வித்தியாசமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். யானை ஓரிடத்தில் காலூன்றி நிற்காமல் அசைந்து கொண்டே இருப்பதுபோல நம்மில சிலர் ஒரு செயலைச் செய்வதில் முனைப்போடு இல்லாமல் தேவையில்லாமல் மனம் குழம்பி பல விடயங்களில் மூக்கை நுழைத்து அறுபட்டுப் போவார்கள். ஒரு சிலர் ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தற்காப்புக்காக தன் தலையைத் தொங்கப்போடுவதைப் போல, நமது குறைகளைச் சுட்டிக்காட்டியவர்களைக் கண்டால், முகத்தை திருப்பிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை பார்க்காமல் இருப்பது நல்லது என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் பசுவின் தோலைத் தொட்ட உடனே அது எதிர்வினை ஆற்றுவது போல மற்றவர்கள் அவர்களைப்பற்றி வைக்கும் விமர்சனங்களை மனதார ஏற்றுக்கொண்டு அதிலிருந்து திருந்த முயற்சி செய்வார்கள். இவர்களில் யாராக நாம் இருந்தால் நம் வாழ்வு நலமாகும் என்று நாமே முடிவு செய்வோம். நம்மை உயரிய பாதைக்கு இட்டுச் செல்லும் முடிவை நாமே தேர்வு செய்வோம்.
ஒரு ஏழைக் கொல்லரின் மகனாகப் பிறந்து, முறையான கல்வி கற்க வசதியின்றி புத்தகங்களுக்கு பைண்டிங் செய்யும் தொழிலாளியாகத் தன் வாழ்வைத் தொடங்கினார். அவ்வாறு வேலை செய்யும் போது கிடைத்த அறிவைக் கொண்டு, புகழ்பெற்ற சர் ஹம்ப்ரி டேவியின் உதவியாளராகத் தனது 21-ஆம் வயதில் சேர்ந்தார். 1821 ஆம் ஆண்டு மின்காந்தச் சுழற்சியைக் கண்டறிந்தார். மின்பகுப்பியல், மின்காந்தத் தூண்டல் என நவீன உலகை மாற்றியமைத்த பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். தன் வாழ்வில் ஏற்பட்ட வறுமையையும் தடைகளையும் தனது உழைப்பால் தகர்த்து, உலகப்புகழ் பெற்ற அறிவியல் மேதையாக உயர்ந்தார். விமர்சனங்களை பெரிதாக்காமல் தேடலைத் தொடர்ந்தால் விஞ்ஞானியாகலாம். தடைகளைத் தாண்டினால் வெற்றி நிச்சயம்!
சிந்தனைகளை சிதறவிடாமல் குறிக்கோளில் நமது கவனத்தை செலுத்துவோம். தடைகளைத் தாண்டினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்வோம்.