உயிரா? மானமா? | அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (969)

தன் மயிர்த் தொகுதியில் ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர்விடும் சுவரி மானைப் போன்றோர், மானத்திற்குக் கேடு வந்தால் உயிரைக்கூட விட்டு விடுவர்.

மிக இன்றியமையாத சிறப்புக்குரிய செயல் என்றாலும் அதில் இழி செயலுக்குரிய தன்மை இருக்கும் என்றால், அதைச் செய்யாது விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால், மலைபோல் உயர்ந்தவர் என்றாலும், ஒருவர் தாம் இழிவானவர் ஆவதற்குரிய செயல்களைக் குன்றிமணி அளவு (மிகச்சிறிய அளவு) செய்தாலும் கூட அவர் தாழ்ந்து விடுவார்; தலையிலிருந்து கழிந்த முடி போன்றவர் ஆகிவிடுவார். எனவே, மானத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். உயிரை விடவும் மானம் மேலானது என்பதனால் அதை உயிரைப் போன்றாவது காப்பாற்ற வேண்டும்.

அந்தக் காட்டில் ஒரு கவரி மானும் ஒரு காகமும் நண்பர்களாக வாழ்ந்தனர். ஒவ்வொரு நாளும் சந்தித்துத் தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

ஒருநாள், மான் தன் அழகான புதுமையான கொம்புகளைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதே வேளையில் ஒல்லியாக இருந்த தன் கால்களைக் குறித்துக் குறைபட்டுக் கொண்டது. காக்கா இதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பா! நேரம் வரும் பொழுது இதிலுள்ள உண்மை உனக்குப் புரியும் என்றது. அதன்பின் தன் வலிய குரலால் விடை பெற்றுக் கொண்டு சென்றது.

ஓரிரு நாள்களுக்குப் பின், காகம் மானைத் தேடி வந்தது. காணவில்லை. 'கலைமான்கள் நீரோடையை ஆர்வத்துடன் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே' என்று பாடிய திருப்பாடல் ஆசிரியரைப் போன்று காகம் ஏக்கம் கொண்டது. மானைத் தேடிக் கொண்டேயிருந்தது.

முட்புதருக்குள் கொம்பு மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் நண்பன் மானைக் கண்டது. 'கவலைப்படாதே' என்றது.

கா... கா... என்று வலிமையாகக் கத்தியதைக் கேட்ட காகங்கள் பலவும் பறந்து வந்தன. முட்புதரின் கொம்புகளை எல்லாம் விலக்கி மானுக்கு வழி அமைத்தன. தப்பியது மான். உன் அழகிய கொம்பினால் ஏற்பட்ட விளைவைப் பார்த்தாயா?

இன்னும் சில நாள்களுக்குப் பிறகு வேடன் விரித்த வலையில் மான் சிக்கிக் கொண்டது. மீண்டும் தேடியது காகம். பட்டது கண்ணில். காதுக்குள் ஒரு கமுக்கச் செய்தியைச் சொன்னது.

வேடன் வந்தான். காக்கையின் ஆலோசனைப்படி மான் செத்ததுபோல் கிடந்தது.

ஆகா... இன்று மான் கறி என்று எண்ணி மகிழ்ந்த வேடன் வலையை மெதுவாக எடுத்துச் சுருட்டி ஓர் ஓரத்தில் வைக்கக் குனிந்ததும், மான் துள்ளியெழுந்து ஓடியது. 'மெலிந்த கால்களாக இருந்தாலும் விரைவாக ஓடுவதற்கு உதவின பார்', என்று காக்கை சுட்டிக்காட்டியது.

இவ்வாறு, பலமுறை உயிர்ப் பாதுகாப்போடு வாழ்ந்து வந்த மான், மரத்து நிழலில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது. காகமும் மரத்தின் மேல் இருந்து கண்ணயர்ந்தது.

திடீரென ஒரு குரங்கு வந்தது; மானின் அருகே சென்றது; குரங்குக் கையில் கிடைத்த பூமாலை என்னவாகும் என்று நமக்குத் தெரியும்? அந்தக் குரங்கு, மானின் அழகிய பொன்னிற முடியைத் தன் கையால் ஒரு கொத்தாகப் பிடுங்கியது.

மான் விழித்தது. 'நண்பா என் மானம் போய் விட்டது. இனி நான் உயிர் வாழேன்' என்றது. காகம், 'வேண்டாம். விரைந்து செயல்பட்டு விடாதே' என்று தடுத்தது. மான் தன் மானம் கருதி உயிர் துறந்தது. மானுக்குப் பல ஆலோசனைகள் சொல்லிக் காப்பாற்றிய காகத்துக்கு மானின் இச்செயலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மானம் மிக்கவர்களின் செயல்களும் பிறரால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நெஞ்சில் அறமும் வீரமும் கொண்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகியின் நீதிக்கான போராட்டக் குரலைக் கேட்டு அரசவையிலேயே உயிர் துறந்தான்.

'மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா?' என்ற பாடல் வரியைக் கேட்டறிந்துள்ளோம். தன்மானத்தின் ஓர் அடையாளமாக முடியைக் (மயிர்) கொண்டுள்ள மான், அம் மானத்தை (மான் என்ற சொல்லிலிருந்து மானம் உருவாகியிருக்கிறது போலும்) இழந்தால், உடனே தன் உயிரை இழந்து விடும். இதைப் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர், பொருட்பாலில் இடம் பெறும் 97-ஆம் அதிகாரத்தில் (மானம்) குறிப்பிட்டு, மாந்தர்க்கு மானத்தின் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

மானம் போன பின் உயிர் வாழ்ந்து பயன் இல்லை. மானம் போகாவண்ணம் உயிர் வாழ்வோம்.

எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image