ஆணவப் பேய் நம்மை ஆட்கொள்ளாதிருக்கட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

2 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – புதன்
தொடக்க நூல் 21: 5, 8-20
மத்தேயு  8: 28-34
 
ஆணவப் பேய் நம்மை ஆட்கொள்ளாதிருக்கட்டும்!
 
முதல் வாசகம்.

ஆபிரகாம் தொடர்புடைய இன்றைய முதல் ஆவசகத்தில்  ஆகாருக்கும் (பணிப்பெண்) ஆபிரகாமுக்கும் இடையிலான உறவைப் பார்த்து சாரா  பொறாமைப்படுகிறாள்.  ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது அவருக்கு 100 வயது, ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் வயதான காலத்தில் ஒரு மகன் பிறப்பான் என்ற   வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றினார்.

ஈசாக்கின் பிறப்புக்குப் பின் ஏற்படும் விளைவுகளை, ஈசாக்குக்கும் ஆகாரின் மகன் இஸ்மயேலுக்கும் இடையிலான போட்டியையும் வசனங்கள் 8-20 விவரிக்கின்றன. ஈசாக்கு பால் மறக்கச் செய்தபோது, இஸ்மயேல் ஈசாக்கை கேலி செய்வதை சாரா பார்த்து, ஆகாரையும் இஸ்மயேலையும் ஊரை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறாள். ஆபிரகாம் வருத்தப்படுகிறார், ஆனால் கடவுள் அவருக்கு உறுதியளித்து, சாராவின் பேச்சைக் கேட்கும்படி அறிவுறுத்துகிறார். 

ஆகாரும் இஸ்மவேலும் பெயேர்செபா எனும் பாலைநிலப்பகுதிக்கு அனுப்பப்படுகிறார்கள்.  அங்கு அவர்களுக்கு தண்ணீர் இல்லை. கடவுள் ஆகாரின் அழுகையைக் கேட்டு, அங்கே ஒரு தண்ணீர் ஊற்றை (கிணறை) வழங்குகிறார், மேலும் இஸ்மயேல் ஒரு பெரிய இனமாக மாறுவார் என்று அவளுக்கு உறுதியளிக்கிறார்.  

நற்செய்தி.

இயேசு கலிலேயா கடலின் தென்கிழக்கில் உள்ள கதரேனர் என்ற புறவினத்தார் வாழும் பகுதிக்குச் சென்றபோது, அங்கே அவர் இரு பேய் பிடித்தவர்களைச் சந்திக்கிறார். அந்த தீய ஆவிகள் இயேசு யார் என்பதை ஓரளவு அறிந்திருக்கின்றன. 
மேலும், அவ்விருவரும் மனித கோலத்தில் இல்லை என்றும் ஏன், மனிதர்களாகவே நடத்தப்படவில்லை என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.  அந்த தீய ஆவிகளோ, இயேசுவை நோக்கி, “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?'' என்று கூச்சலிட்டு, அவற்றை  அங்கிருந்த  பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்புமாறு, கெஞ்சவே, அவரும் பன்றிகள் கூட்டத்தற்குள் விரட்டி விடுகிறார்.  பின்னர், அப்பன்றிகள் மேலிருந்து கடலில் வீழ்ந்து மடிந்தன. இச்செய்தி அறிந்த ஊர் மக்கள் அவர்களது பன்றி வியாபாரம் பாழானதால், இயேசுவை ஊரை விட்டு வெளியேர பணிக்கிறார்க்ள.
 
சிந்தனைக்கு.

நற்செய்தியில் கண்ட பேய் பிடித்திருந்த இருவரும் காட்டுமிராண்டிதனமாக நடத்தப்பட்ட நிகழ்வை மத்தேயு சித்தரிக்கிறார். அந்த இரு நபர்களும் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு, மனிதநேயமிழந்து, மனிதர்களாகவே நடத்தப்படாத நிலையில் இயேசுவின் பார்வையில் பட்டனர். இயேசு, இருவர்மீதும் பரிவிரக்கம் கொண்டு தீய ஆவிகளை விரட்டி, அவர்களுக்கு நலவாழ்வு தருகின்றார். இங்கே புறவினத்தாரும் இயேசுவால் நலம் பெற்றதை அறிகிறோம்.

பேய்கள் (பிசாசு) மீதான நம்பிக்கை கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். பிசாசு ஒரு கட்டுக்கதை அல்ல. அவன் இருக்கிறான். அவன் உண்மையானவன். இயேசு அவனை "பொய்களின் தந்தை" (யோவான் 8:44) என்று அழைக்கிறார். அவன் ஒரு தீய ஆவி, அவன் கடவுளுக்கு சேவை செய்ய மறுத்தவன்.   இயேசுவையும் கவிழ்க்கப் போராடியவன், இறையாட்சிக்கு எதிரானவன். நமது எதிர்நோக்குக்கொண்ட விண்ணகப் பயணத்திற்கு இடையூராக இருப்பவன். 

நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.  பேய்கள் இயேசுவுக்கு இணையானவை அல்ல, அவற்றின் வல்லமை அவருடைய வல்லமைக்கு மேலானவையும் அல்ல.  அவன் இயேசுவிடம் தோற்றுப்போனவன். ஆனாலும், முதல் வாசகத்தில், ஆபிரகாமின் குடும்பதிலிருந்து விரட்டப்பட்ட ஆகாருக்கும் கடவுள் இரக்கம் காட்டி தண்ணர் வழங்கியதைப்போல, இயேசு பேய்களுக்கும் இரக்கம் காட்டியதை இன்றைய நற்செய்தியில்  காண்கிறோம். அவற்றை அழிக்காமல், விரட்டிவிடுகிறார். அவற்றின் மேல் வெற்றிகொள்ளும் நேரத்திற்கு அவர் காத்திருந்தார்.   

மறுபுறம், ஊர் மக்களோ அந்த இருவரின் குணமடைதலைக் கொண்டாடவில்லை, மாறாக, அவர்களது வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தைக் கணக்குப்போட்டனர். ஊருக்குள் வந்த நற்செய்தியை (இயேசுவை) விரட்டினர். அவர்கள் ஆன்மீக நன்மைக்கு குருடர்களாக இருந்தனர். தொழிலில் இலாபம் இன்றியமையாதது. ஆனால். தொழிலில் இலாபம் என்பது மனிதநேயத்தை மிஞ்சியதல்ல. 

'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) இயேசுவின் செயல்கள் வெளிபட்டதால்  தீய ஆவிகள் வெகுண்டன. மனிதருக்குள், சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.

மேலும், நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால் அதில் இரு தரப்பினர் இயேசுவை நோக்கி கேள்வி கேட்டதை அறியாலாம். முதலில  'ஏன் இங்கு வந்தீர்?' எனக் கேட்டனர் பேய் பிடித்தவர்கள். இறுதியில் 'எப்போது இங்கிருந்து செல்வீர்?' எனக் கேட்டனர் அந்த ஊர் மக்கள். இக்கேள்விகள் இன்றும் மக்கள்  உள்ளத்தில்  இருப்பதைக் காண்கிறோம். செல்வாக்கோடு வாழும் போது, இயேசு புறக்கணிக்கப்படுகிறார், துன்புறும் வேளையில் தேடப்படுகிறார். 


இறைவேண்டல். 

'ஏன் இங்கு வந்தீர்?' எனக் கேட்ட பேய்களை விரட்டிய ஆண்டவரே, என்னிலும் உள்ள ‘ஆணவப் பேயை’ நீர் விரட்டி என்னை விடுவிப்பீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452