படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் ! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
எசாயா 65: 17-21
யோவான் 4: 43-54

 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்!

முதல் வாசகம்.

இன்றைய நமது வாசகங்களில் சிறந்த வாழ்க்கைக்கான வாக்குறுதி  மையமிடுகிறது. இவ்வாசகப் பகுதியானது ஏசாயா இறைவாக்கு நூலின் மூன்றாம் பகுதிக்கு உட்பட்டது.  பாபிலோனிலிருந்து விடுதலைப்பெற்று  எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு  கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது. இனி,  ஆண்டவர் புதிய வானம் மற்றும் புதிய பூமியைப்  படைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். இந்தப் புதிய இடம் மகிழ்ச்சிக்கும் முழுமை வாழ்வுக்குமான இடமாக இருக்கும். புதிய எருசலேமில் இனி துக்கமோ துயரமோ  இருக்காது என்ற கடவுளின் வாக்குறுதிச் செய்தியை எசாயா விவரிக்கிறார்.  
மேலும், கடவுள், “எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன். நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்” என்கிறார்.

பதிலுரை பாடல்: திபா 30: 1,3. 4-5. 10-11a,12b 
“ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்” என்று பதிலுரையாகப் போடுகிறோம். நன்றி கூறுதல் நமது கடமை. அதிலும் கடவுள் செய்துவரும் நனமைகளுக்கு நன்றி நவில்தல் நமது முதற்கண் கடமை என்பதை இப்பதிலுரை எடுத்துரைக்கிறது.

நற்செய்தி.

இயேசு, நற்செய்தியில், மக்களின் நம்பிக்கையின்மை பற்றிப் பேசுகிறார். யோவானின் நற்செய்தியில்,   இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்கிறார்.  இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட ஓர் அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.  
நற்செய்தியில் இயேசு, இறக்கும் தருவாயில் இருந்த அரச அலுவலரின் மகனை நலமாக்குகின்றார். இதற்கு அடிப்படைக் காரணம் அரச அலுவலர் இயேசுவிடம் கொண்டிருந்த நம்பிக்கைதான். ஏனெனில், “நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அவர் புறப்பட்டுப்போனார். அவர் நம்பியதுபோன்றே அவரது மகன் பிழைத்துக் கொள்கின்றான். 
 
சிந்தனைக்கு.

இன்று தவக்காலத்தின் நான்காவது வாரத்திற்குள் நுழைகிறோம்.  இந்த மண்ணுலகில் நாம் வாழும் வாழ்வானது   கடவுள் வாக்குறுதி அளித்த முழு வாழ்க்கை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மண்ணுலக வாழ்வு ஒரு எதிர்நோக்கின் பயணம். இப்பயணத்தின்  இலக்கு நிலைவாழ்வாகும்.

இன்றைய முதல் வாசகத்தில், யூதேயா மக்கள் பாபிலோனில் அனுபவித்த  அவர்களது அடிமை வாழ்விலிருந்து  தாய்நாடான யூதேயாவுக்கு, குறிப்பாக எருசலேமுக்குத் திரும்பும்போது ஏற்படும் மாற்றத்தைப் பற்றி ஏசாயா இறைவாக்கினர் தெளிவுப்படுத்துகிறார். அவ்வாறே, நமது நாய் நாடான விண்ணகத்திற்கு நாம் திரும்பியதும் நாம் மாறுபட்ட வாழ்வு வாழ்வோம் என்று அறிவுறுத்தப்படுகிறோம். 

இந்த பிற்கால மகிழ்ச்சியை அனுபவிக்க இம்மையில் கிறிஸ்துவின் வார்த்தைகளில் நம்பிக்கை தேவை.   இன்றைய நற்செய்தியில் "அந்த அரச அலுவலர் இயேசு சொன்னதை நம்பி இல்லம் திருப்பினார். மகன் உயிருடன் இருக்கக் கண்டார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர் என்று யோவான் குறிப்பிடுகிறார். 

அந்த அதிகாரியின் நம்பிக்கை  எவ்வளவு உறுதியானதாக இருந்தது என்பதைப் பார்ப்தற்கு  மிகவும் அற்புதமாக இருக்கிறது. 
1.    முதலாவதாக, இயேசுவால் தன் மகனுக்கு உதவ முடியும் என்று அவர் நம்பினார். எனவே அவர் இயேசுவை தன்னுடன் கப்பர்நகூமுக்கு வரும்படி கேட்டார். 
2.    இரண்டாவதாக, தனது மகன் பிழைப்பான் என்ற இயேசுவின் வார்த்தைகளை அவர் நம்பினார். அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தனது வீட்டிற்குத் திரும்பினார். 
3.    மூன்றாவதாக, உயிர் பிழைத்ததைக் கண்டு, அவர் இயேசுவை முழுமையாக நம்பினார், அவரது குடும்பத்தினரும் நம்பினர்.

இயேசு மீதான  நம்பிக்கை படிப்படியாக அதிகரித்ததை  இங்கே அறிகிறோம்.  இந்த அரச அதிகாரி கலிலேயாவின் ஆட்சியாளராக இருந்த ஏரோது அந்திப்பாவிடம் வேலை செய்திருக்கலாம். ஏரோது உரோமை அரசாங்கத்தின் சார்பாக ஆட்சி செய்தார். இந்த அதிகாரிக்கு மிக முக்கியமான பதவி இருந்திருக்கும்.  ஆனால் அந்த அரச அலுவலர் இயேசுவிடம், பணிந்து,  “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்கிறார். இயேசுவிடம் அவர் அவரது அதிகாரத்தைக் காட்டி மிரட்டியிருக்காலம். அவரது பேச்சில் பணிவும், அடக்கமும் இருந்தது.  இயேசுவின் உள்ளத்தில் இடம்பிடித்தார்.
இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் குறித்து  சிந்திக்க வேண்டும். நமது பட்டம் பதவியால்,  அதிகாரத்தால்  இயேசுவிடமிருந்து பெறக்கூடியது எதுவுமில்லை. ஏமாற்றம் மட்டுமே. என்றும், “ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்” என்று ஆண்டவருக்கு நன்றி நவில நாம் நன்றி கடன் பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம்.  அவரில் நம்பிக்கை கொள்வோருக்கு, அவரில் வாழ்வோருக்கு  நிலைவாழ்வு உண்டு.

நம்பிக்கை என்பது மிகவும் விலைமதிப்பற்ற பரிசு, ஏனென்றால் அது உலகம் சார்ந்தவற்றிலிருந்து   விலகி, கடவுளின் ஞானத்திற்குப் பணிய  உதவுகிறது, இது நம்மால் கற்பனை செய்யக்கூடிய எதனையும் விட மேலானது. 

இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் அனைத்திற்கும் மேலாக உம்மில் நம்பிக்கை கொண்டு வாழும்   வாழ்வை எனக்கு அருளும். ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
+6 0122285452