மன்னிப்பே தாய்மை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

ஈரான் நாட்டில் இடம்பெற்ற உண்மை நிகழ்வு இது. 2014-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15 - ஆம் தேதி, அந்நாட்டில் ஒரு மரணதண்டனை மக்கள் பார்வையில் நடைபெறவிருந்தது. 27 வயதான பலால்  என்ற இளையவர், தூக்குமேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியின் மீது நிறுத்தப்பட்டார். அவரது கண்கள், கறுப்புத் துணியால் கட்டப்பட்டு, கழுத்தைச் சுற்றித் தூக்குக் கயிறும் மாட்டப்பட்டது.

ஏழு ஆண்டுகளுக்கு முன் இரு இளைஞரிடையே ஏற்பட்ட ஒரு சண்டையில், 20 வயது நிறைந்த இளையவர் பலால், கத்தியால் குத்தியதால், அபிடோல்லாஹ் என்ற 18 வயது இளைஞர் இறந்தார். ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கின் இறுதியில், பலாலுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், தூக்குமேடையில், பலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நாற்காலியை உதைத்துத் தள்ளி, அந்த இளைஞனைக் கொல்லும் உரிமை, அபிடோல்லாஹ் வின் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஈரான் நாட்டின் பல பகுதிகளில் பின்பற்றப்படும் ஒரு வரைமுறை இது.

தூக்குமேடையைச் சூழ்ந்து நின்றவர்களில், பலாலின் தாய் கோப்ரா அவர்களும் ஒருவர். நடக்கப்போகும் கொடுமையைத் தடுக்கமுடியாமல், கண்களில் கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் அவர் காத்திருந்தார். இறந்துபோன அபிடோல்லாஹ்வின் தாய் சமீரா  அவர்கள், அந்த நாற்காலியை நெருங்கியபோது, ஓர் அற்புதம் நிகழ்ந்தது. தாய் சமீரா அவர்கள், இளைஞன் பலாலின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர், அவன் கழுத்தைச் சுற்றி மாட்டப்பட்டிருந்த தூக்குக் கயிறை அவிழ்த்துவிட்டார். அருகில் நின்ற அபிடோல்லாஹ்வின் தந்தை, பலாலின் கண் கட்டுகளை அவிழ்த்து, அவனை அந்த நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டார்.

முற்றிலும் எதிர்பாராத வகையில் தன் மகனுக்கு வாழ்வுப் பிச்சை வழங்கப்பட்ட அற்புதத்தைக் கண்டு, ஆனந்த அதிர்ச்சி அடைந்த பலாலின் தாய், தூக்குமேடையை நோக்கி ஓடினார். மேடையிலிருந்து இறங்கிவந்த தாய் சமீரா அவர்களைக் கட்டியணைத்தார். இரு அன்னையரும் கண்ணீரில் கரைந்தனர். "தன் மகனைக் கொன்றவனை, மரண தண்டனையிலிருந்து விடுவித்த தாய்" என்ற தலைப்பில், அடுத்த நாள் உலக ஊடகங்களில் இச்செய்தி வெளியானது.

'பழிக்குப் பழி' என்ற உரிமையை, தன் நாட்டு அரசே தனக்கு வழங்கியிருந்தாலும், அதை மீறி இரக்கத்தை, மன்னிப்பை வழங்க முடியும் என்பதை ஓர் அன்னை நிரூபித்தார். மன்னிப்பு, மரணத்தையும் வெல்லும் சக்தி கொண்டது என்பதை இந்தத் தாய் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

சுயநலம் இல்லாத ஓர் உறவு என்றால்
இந்த உலகில் தாய் மட்டும்தான்.
அம்மா என்ற ஒரு வார்த்தையில் முழு உலகமே அடங்கிவிடும்!

“மனித குலத்தின் உதடுகள் உச்சரிக்கும்
 மிக அழகான வார்த்தை அம்மா 
 நம்பிக்கையும் அன்பும் நிறைந்த வார்த்தை அம்மா துயரத்தின் போது ஆறுதல் துன்பத்தில் நம்பிக்கை பலமின்மையில் பலம் அம்மா 
அவளே அன்பு, கருணை, இரக்கம், 
மன்னிக்கும் பண்பு எல்லாவற்றிற்கும் மூலம் 
தன் தாயை இழப்பவன் அவனைக் காக்கின்ற 
ஓர் ஆன்மாவை இழக்கின்றான்.”

                                                   - கலீல் ஜிப்ரான்

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image