தாய் இதயம் கனிவானது | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

பிறரை வெல்ல அன்பைத் தவிர வேறு ஆயுதம் ஏதும் இருக்க முடியுமோ?

2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லிபியா கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் 21 இளைஞர்கள் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலையுண்டார்கள். கொலையுண்ட 21 இளையோரில் தம் இரண்டு மகன்களையும் இழந்த தாயும் அவரது கடைசி மகன் பெஷீரும் ஊடகங்களுக்குப் பகிர்ந்துகொண்ட செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன.

பெஷீரின் இரு சகோதரர்களான பிஷாய் மற்றும் சாமுவேல் இருவரும் இறப்பதற்குமுன் இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர். இச்செயல் இறைவன்மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வைப்பதற்கு உதவியாக அமைகின்றது என்று பெஷீர் கூறுகிறார்.

இளையவர் பெஷீர் தன் தாயிடம் கேட்ட கேள்விக்கு அவரது தாய் சொன்ன வார்த்தைகள் நம் நெஞ்சை நெகிழ வைக்கின்றன. அவை எத்துணை இறைநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பெஷீர் தம் தாயிடம்,"அம்மா,ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகளில் ஒருவரைச் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டதற்கு அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்க வேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை நம் வீட்டிற்கு அழைத்து வந்து உபசரிப்பேன்" என்று அந்தத் தாய் கூறியதிலிருந்து, இன்னும் மனிதம் சாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அன்னை தெரசா கூறியது போன்று, “ஒருவரைத் தண்டிக்கத் தாமதம் செய்யலாம். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு ஒருபோதும் தாமதம் செய்யக் கூடாது". இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் மன்னிக்க மட்டும் கற்றுக்கொண்டால் நமது வாழ்க்கை எவ்வளவு எளிதாகிவிடும். மன்னிப்பை ஒவ்வொரு தாயும் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் இவ்வையகம் வெறுப்பில் மூழ்கிவிடாமல் காப்பாற்றப்படும்.

பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கலாம். ஆனால், அது நம்மையே பழிதீர்க்கும் மனநோயாக மாறிவிடலாம்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image