துன்பத்திலும் இறை நம்பிக்கையே கைகொடுக்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 17ஆம் வாரம் – செவ்வாய்
எரேமியா 14: 17-22
மத்தேயு 13: 36-43

துன்பத்திலும் இறை நம்பிக்கையே கைகொடுக்கும்!

முதல் வாசகம்.

இவ்வாசகத்தில் எரேமியா தொடர்ந்து, யூதா மக்களின் பாவத்தினாலும்
கீழ்ப்படியாமையினாலும் ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு ஆழ்ந்த
வேதனையுடன் இறைவனிடம் மன்றாடுகிறார். மக்களும் வறட்சியாலும்
துயரத்தாலும் துன்புறுகின்ற நிலையில், தங்களுடைய தவறை உணர்ந்து,
“நாங்கள் பாவம் செய்தோம்” என்று இறைவனிடம்
அறிக்கையிடுகின்றனர்.
எரேமியா, தம் மக்களின் நிலையை மாற்றி, அவர்களை மன்னித்து
மீண்டும் அருள்புரியுமாறு ஆண்டவரிடம் பரிந்து பேசி வேண்டுகிறார்.

நற்செய்தி.

இப்பகுதியில், இயேசு வயலில் விதைக்கப்பட்ட நல்ல விதை மற்றும்
களையின் உவமையை தம் சீடர்களுக்கு விளக்குகிறார். நல்ல விதையை
விதைப்பவர் மானிடமகன் இயேசு; வயல் உலகம்; நல்ல விதை
இறையாட்சியின் மக்கள்; களை தீயவனுக்குரியவர்கள்; அறுவடை உலக
முடிவு; அறுவடை செய்பவர்கள்வானதூதர்கள் என்று விவரிக்கிறார்.

உலக முடிவில் நல்லவர்களும் தீயவர்களும் பிரிக்கப்படுவார்கள். தீமை
செய்தவர்கள் தண்டனையைச் சந்திப்பார்கள்; ஆனால் இறைவனின்
விருப்பப்படி வாழ்ந்த நீதியாளர்கள் தந்தையின் ஆட்சியில் சூரியனைப்
போல ஒளிர்வார்கள் என்ற இயேசுவின் படிப்பினையை மத்தேயு
எடுத்துரைக்கிறார்.

சிந்தனைக்கு.

நல்லதும் தீமையும் கலந்துள்ள இவ்வுலகில், நாம் பொறுமையுடன்
நன்மையில் நிலைத்திருந்து, இறுதியில் இறைவனின் ஆட்சியில்
பங்குபெறும் மக்களாக வாழ வேண்டும் என்பது இன்றைய அழைப்பாக
உள்ளது. நமக்கு நாமே மீட்பு வழங்க முடியாது; உண்மையான மீட்பும்
நம்பிக்கையும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்பதை
உணர்ந்தால்தான் நம்மில் தூய ஆவியார் தாராளமாகச் செயல்படுவார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, மக்களின்
துன்பத்தையும் பாவநிலையையும் கண்டு இறைவனிடம் மன்றாடுகிறார்.
“எங்கள் இறைவா, எங்களை கைவிடாதீர்” என்ற நம்பிக்கையோடு அவர்
இறைவனை நோக்கித் திரும்புகிறார். மனிதர்கள் தவறு செய்தாலும்,
இறைவனின் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாடுவதே அவருடைய
வேண்டுதலின் மையமாக இருந்ததை அறிய்நோம்.

நற்செய்தியிலோ, வயலில் நல்ல விதையும் களையும் பற்றிய உவமையை
இயேசு விளக்குகிறார். நல்ல விதை இறைவார்த்தையைக் குறிக்கிறது;
நல்ல விதையிலிருந்து பிறக்கும் மக்கள் இறையாட்சியின் பிள்ளைகள்.
களை தீமையையும் தீமையைப் பின்பற்றுவோரையும் குறிக்கிறது.
நல்லதும் தீயதும் இவ்வுலகில் ஒன்றோடொன்று காணப்பட்டாலும்,

இறுதியில் இறைவன் நீதியான தீர்ப்பை வழங்குவார் என்று இயேசு
தெளிவுபடுத்துகிறார்.

இந்த இரு வாசகங்களும் நமக்கு ஒரு முக்கியமான செய்தியைத்
தருகின்றன: “நமது இதயத்தில் எந்த விதையை வளர்த்துக்
கொண்டிருக்கிறோம்?” என்று நம்மை நாமே கேட்க வேண்டி நிலையில்
நாம் உள்ளோம்.

மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பார்த்து உடனடியாக
தீர்ப்பளிப்பதைவிட, முதலில் நமது உள்ளத்தை ஆராய்வோம்.
எரேமியாவைப் போல இறைவனிடம் திரும்பி, “ஆண்டவரே, எனது
குற்றங்களை மன்னித்து, என்னைப் புதுப்பித்தருளும்” என்று மன்றாடுவது
நமது மீட்புக்கு வழிவகுக்ம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, என் உள்ளத்தில் உள்ள தீமையின் களைகளை அகற்றி,
உமது அன்பு, இரக்கம், உண்மை ஆகியவற்றின் விதைகளை
வளர்த்தருள்வீராக. ஆமென்.”

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image