நாம் இறையாட்சியின் பங்காளிகள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 17ஆம் வாரம் – திங்கள்
எரேமியா 13: 1-11
மத்தேயு 13: 31-35

நாம் இறையாட்சியின் பங்காளிகள்!

முதல் வாசகம்.

இவ்வாசகப் பகுதியில், ஆண்டவர் எரேமியாவிடம். ஒரு சணல்
இடைக்கச்சையை வாங்கி இடுப்பில் கட்டிக்கொள்ளும்படியும். பின்னர்
அதை யூப்ராத்து நதிக்கரையில் பாறை இடுக்கில் மறைத்து வைக்கவும்
கட்டளையிடுகிறார். பல நாட்களுக்குப் பிறகு அதை எடுத்தபோது, அது
முற்றிலும் கெட்டு எதற்கும் பயன்படாததாக இருந்தது.
இந்தச் செயலின் மூலம் இறைவன் ஒரு முக்கியமான செய்தியை
வெளிப்படுத்துகிறார். இடைக்கச்சை மனிதனின் இடுப்போடு
நெருக்கமாக இணைந்திருப்பது போல, இஸ்ரயேல் (வட நாட்டு மக்க்ள)
மக்களும் யூதா மக்களும் (தென்னாட்டு மக்க்ள) தம்மோடு நெருக்கமாக
இருக்கும்படி இறைவன் அழைத்தார். ஆனால் அவர்கள் இறைவனின்
வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அகந்தையிலும் சிலை வழிபாட்டிலும்
மூழ்கினர். அதன் விளைவாக, அவர்கள் தங்கள் அழைப்பையும்
மாட்சியையும் இழந்து, பயனற்றவர்களாக மாறினர் என்று
விவரிக்கப்படுகிறது.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியை இரண்டு
உவமைகளின் மூலம் விளக்குகிறார். கடுகு விதை எல்லா விதைகளிலும்
சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து பெரிய மரமாகி பறவைகள் தங்கும்
அளவிற்கு ஆகிறது. அதுபோல, இறையாட்சியும் சிறிய
தொடக்கத்திலிருந்து உலகமெங்கும் பரவும் வல்லமையுடையது.
அதேபோல், புளிப்புமாவை ஒரு பெண் மாவில் கலந்தபோது, அது முழு
மாவையும் புளிக்கச் செய்கிறது. இதுபோல, இறைவனின் வார்த்தையும்
இறையாட்சியும் மனிதரின் இதயத்தில் அமைதியாக செயல்பட்டு,
அவருடைய வாழ்க்கையையும் சமூகத்தையும் மாற்றுகின்றன.
இதுபோன்று, இயேசு மக்களுக்குப் போதிக்க உவமைகளைப்
பயன்படுத்தினார். இதன் மூலம், மறைந்திருந்த இறையாட்சியின்
இரகசியங்களை வெளிப்படுத்தி, இறைவனின் மீட்புத் திட்டத்தை
மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களும் இறைவனோடு உள்ள நமது உறவின்
மதிப்பையும், இறையாட்சியின் வளர்ச்சியின் வல்லமையையும்
மையமாகக் கொண்டுள்ளன.
முதல் வாசகத்தில், எரேமியா இடுப்புக்கச்சையின் அடையாளத்தின் மூலம்,
இஸ்ரயேல் மக்கள் இறைவனோடு நெருக்கமாக இணைந்திருக்க
அழைக்கப்பட்டவர்கள் என்பதை ஆண்டவர் நினைவூட்டுகிறார். ஆனால்
அவர்கள் இறைவனை விட்டு விலகியதால், பயனற்ற
இடுப்புக்கச்சையைப் போல ஆனார்கள். இறைவனோடு
இணைந்திருக்கும் வாழ்க்கையே நம்மை அர்த்தமுள்ளவர்களாகவும்,
பலனுள்ளவர்களாகவும் உண்மைக்குச் சான்று பகர்பவர்காளகவும்
மாற்றும் என்பது தெளிவாகிறது.
நற்செய்தியில், இயேசு கடுகு விதை மற்றும் புளிப்பு மாவின்
உவமைகளைச் கொண்டு இறையரசின் தன்மையைப்பற்றி போதிக்கிறார்.
கடுகு விதை மிகச் சிறியதாக இருந்தாலும் பெரிய மரமாக வளர்கிறது.
சிறிதளவு புளிப்பு மாவு முழு மாவையும் புளிக்கச் செய்கிறது. அதுபோல,

இறையாட்சி அமைதியாகவும் கண்களுக்குப் புலப்படாமலும்
தொடங்கினாலும், அது மனிதர்களின் இதயங்களையும் சமூகத்தையும்
மாற்றும் வல்லமையைக் கொண்டுள்ளதை ஆண்டவர் எடுத்துரைக்கிறார்.

இன்றைய இறைவார்த்தை நம்மை இரண்டு கேள்விகள் கேட்க
அழைக்கிறது: நான் இறைவனோடு நெருக்கமாக இணைந்திருக்கிறேனா?
மேலும், என் சிறிய நற்செயல்கள் இறையாட்சியின் வளர்ச்சிக்குப்
பங்களிக்கிறதா? ஏனெனில் நான் திருமுழுக்குப் பெற்றவன்.

ஆகவே, இறைவனோடு உறுதியான உறவில் நிலைத்திருந்து, சிறிய
நன்மைச் செயல்களால் இறையாட்சியை நம் குடும்பத்திலும் சமூகத்திலும்
விதைக்க வேண்டியது நமக்கான அழைப்பு. அப்போது நம் வாழ்வும்
பிறருக்கு ஆசீர்வாதமாக மாறும் என்பது திண்ணம்.

இயேசுவின் நற்செய்தி (Gospel) மற்றும் ஒருவரின் திருமுழுக்கு (Baptism)
ஆகியவை கிறிஸ்தவ வாழ்வில் பிரிக்க முடியாத வகையில்
ஒன்றோடொன்று இணைந்துள்ளன. திருமுழுக்கு என்பது வெறும் சடங்கு
அல்ல; அது நற்செய்தியை ஏற்றுக்கொண்டு புதிய வாழ்வைத் தொடங்கும்
இறை அருளின் அடையாளமாகும். இயேசு அறிவித்த இறையாட்சிக்குள்
நுழைவதற்கான வாயிலாக திருமுழுக்கு விளங்குகிறது. எனவே, நாம்
கடுகு விதைப்போன்றும், புளிப்பு மாவு போன்றும் நற்செய்திக்கான
பணியாளர்களாக வாழ வேண்டிய அழைப்பைக் கொண்டுள்ளோம்
என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

இறைவேண்டல்.

அன்பின் ஆண்டவரே, கடுகு விதை சிறியதாக இருந்தாலும் அது பெரிய
மரமாக வளர்வதைப் போல, என் இதயத்தில் நீ விதைக்கும்

நம்பிக்கையின் விதை நாளுக்கு நாள் வளரவும், உமது இறையாட்சியின்
மதிப்புகளை என் குடும்பத்திலும், திருஅவையிலும், சமுதாயத்திலும்
வாழ்ந்து சாட்சியாக இருக்கவும் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image