அதிகாரம் அல்ல, தியாகமே கிறிஸ்தவ தலைமையின் அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 16ஆம் வாரம் – சனி
புனித யாக்கோபு - திருத்தூதர்-விழா
2 கொரி  4: 7-15
மத்தேயு 20: 20-28

அதிகாரம் அல்ல, தியாகமே கிறிஸ்தவ தலைமையின் அடையாளம்!

முதல் வாசகம்.

இந்தப் பகுதியில், புனித பவுல் மனிதர்களாகிய நாம் "மண் பாண்டங்கள்"
போன்று பலவீனமானவர்கள் என்றாலும், நம்முள் இருக்கும் இறைவனின்
அருள் மற்றும் நற்செய்தி என்னும் விலைமதிப்பற்ற செல்வம்
இறைவனிடமிருந்து வந்தது என்பதை எடுத்துரைக்கிறார். இதனால்
எல்லா மாட்சியும் நம்மைச் சார்ந்தவை அல்ல, மாறாக, இறைவனுக்கே
உரியது என்பதை வலியுறுத்துகிறார்.
பவுலும் அவரது தோழர்களும் பலவிதமான துன்பங்களையும்
சோதனைகளையும் அனுபவித்தாலும், அவர்கள் மனம் தளரவில்லை.
அவர்கள் நெருக்கப்பட்டாலும் நசுக்கப்படவில்லை; குழப்பமடைந்தாலும்
நம்பிக்கையை இழக்கவில்லை; துன்புற்ற வேளையில் இறைவனால்
கைவிடப்படவில்லை என்கிறார்.
இயேசுவின் துன்பங்களிலும் மரணத்திலும் பங்கு பெறுவதன் மூலம்,
அவருடைய உயிர்த்தெழுந்த வாழ்வும் தங்களுள் வெளிப்படுகிறது என்று
பவுல் கூறுகிறார்.

நற்செய்தி.

இந்த நற்செய்திப் பகுதியில், செபதேயுவின் மக்களான யாக்கோபும்
யோவானும் இயேசுவின் அரசில் சிறப்பான இடங்களைப் பெற வேண்டும்
என்று அவர்களின் தாய் இயேசுவிடம் வேண்டுகிறார். அதற்கு இயேசு,
அந்த மாட்சியை அடைவதற்கு முன் துன்பத்தின் கிண்ணத்தைப் பருகத்
தயாராக இருக்க வேண்டுமென்று கூறுகிறார். மேலும், வலது மற்றும்
இடது பக்கங்களில் அமரும் இடத்தை வழங்குவது தமது தந்தையின்
விருப்பம் என்று விளக்குகிறார்.
இதைக் கேட்ட மற்ற பத்து சீடர்கள் கோபமடைந்தபோது, இயேசு
உண்மையான தலைமைத்துவத்தின் அர்த்தத்தை அவர்களுக்கு
போதிக்கிறார். உலகத்தில் தலைவர்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள்;
ஆனால் இறையாட்சியில் பெரியவனாக இருக்க விரும்புபவன்
மற்றவர்களுக்கு பணியாளனாகவும், முதல்வனாக இருக்க விரும்புபவன்
அனைவருக்கும் அடிமையாகவும் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்துகிறார்.
இறுதியாக, "மானிடமகன் பணிவிடை பெற வரவில்லை; மாறாக,
பணிவிடை செய்யவும், பலருக்காகத் தம் உயிரை மீட்புத் தொகையாகக்
கொடுக்கவும் வந்தார்" என்று கூறி, தமது வாழ்க்கையே தன்னலமற்ற
சேவையின் உன்னத முன்மாதிரி என்பதை வெளிப்படுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்று நாம் திருத்தூதர் யாக்கோபின் திருவிழாவைக்
கொண்டாடுகிறோம். இன்றைய இரு வாசகங்களும் கிறிஸ்துவின்
சீடனாக இருப்பதென்பது பெருமையையும் பதவியையும் தேடுவது
அல்ல; மாறாக, தியாகத்தையும் பணிவான சேவையையும் உட்படுத்தியது
என்று அறிவுறுத்தப்படுகிறோம்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் துன்பங்கள், சோதனைகள் தவிர்க்க
முடியாதவை. பவுல் அடிகளின் இன்றைய பகிர்வை கூர்ந்து வாசித்தால்,
துன்பங்கள் அவரை இறைவனிடமிருந்து விலக்கவில்லை; மாறாக,

அவற்றை கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வாழ்வை உலகிற்கு
வெளிப்படுத்தும் வாய்ப்பாகக் கொண்டு செயல்பட்டார் என்பதை
அறியலாம்.

நற்செய்தியில், யாக்கோபும் யோவானும் இயேசுவின் அரசில் உயர்ந்த
இடங்களை விரும்புகின்றனர். அவர்களது தாயின் வேண்டுகோள், மனித
மனத்தின் இயல்பான ஆசையை வெளிப்படுத்துகிறது. ஆனால் இயேசு
அவர்களது சிந்தனையை மாற்றுகிறார். "உங்களுள் பெரியவனாக இருக்க
விரும்புபவன் உங்களுக்குப் பணியாளனாக இருக்க வேண்டும்" என்று
அவர் போதிக்கிறார்.

இந்த நற்செய்தியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவது
இன்று நாம் கொண்டாடும் புனித யாக்கோபின் வாழ்க்கை. ஆரம்பத்தில்
அவர் சிறப்பான இடத்தை நாடினார். ஆனால் பெந்தெகொஸ்தே
அனுபவத்திற்குப் பிறகு அவர் முற்றிலும் மாறினார். கிறிஸ்துவின்
நற்செய்தியை அறிவிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார். இறுதியில்,
திருஅவையின் முதல் திருத்தூதர் மறைசாட்சியாக தனது இரத்தத்தைச்
சிந்தினார். அவர் நாடியது அதிகாரம் அல்ல; ஆண்டவருக்காக உயிரைக்
கொடுக்கும் அளவுக்கு உண்மையான சீடத்துவத்தை வாழ்க்கையாகும்.
நமது குடும்பத்தில், பங்கில், சமுதாயத்தில் நாம் அங்கீகாரத்தை, முதலிடம்
தேடுகிறோம், நமது திறமைகள், பதவி, செல்வாக்கு ஆகியவை பிறருக்கு
உதவ பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி சுயநலத்துக்கானது அல்ல.
அதிகாரமும் செல்வமும் இறைவனின் கொடை; அவை பிறருக்கு நன்மை
செய்யவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தவிர்த்தால் நாம் ஏற்ற
சீடத்துவம் பலனற்றதாகும்.
இன்றைய புனித யாக்கோபின் விழா நமக்கு ஒரு அழைப்பாக இருக்கிறது.
கிறிஸ்துவைப் பின்பற்றுவது வசதிக்கான தேர்வு அல்ல; அது தியாகம்,
பணிவு, நம்பிக்கை மற்றும் சேவைக்கான அழைப்பு. மண்
பாத்திரங்களைப் போன்ற பலவீனமானவர்களாக இருந்தாலும்,
இறைவன் நம்மைத் தனது மாட்சியை வெளிப்படுத்தும் கருவிகளாக
வளங்க அழைத்துள்ளார்.

இறுதியாக, புனித யாக்கோபைப் போல, ஆண்டவர் தரும் "கிண்ணத்தை"
நம்பிக்கை ஏற்றுக்கொண்டு, அதிகாரத்தை அல்ல, சேவையைத்
தேர்ந்தெடுப்போம். எல்லா புகழும் மாட்சியும் அவருக்கே என்று
வாழ்வோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எனது வாழ்வின் ஒவ்வொரு நாளும், பிறருக்காக அன்புடன்
வாழ்ந்து, உமது உண்மையான சீடராக ஒளிர எனக்கு அருள் புரிவீராக.
ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image