பசிக் கொடுமையை ஒழிப்பதற்கு திருஅவையின் முழு ஆதரவு உண்டுஎன திருஅவை தெரிவித்துள்ளது. | Veritas News

இக்காலத்தின் மிகப்பெரும் சவால்களுள் ஒன்றான உணவு பாதுகாப்பின்மை, சத்துணவின்மை போன்றவைவற்றை சமாளிக்க தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் பணிகளைப் பாராட்டுவதாக அந்நிறுவனத்தின் 44வது பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் துவக்கப்பட்டதன் 80ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவரும் இந்நாட்களில் இப்பேரவை இடம்பெறுவதன் முக்கியத்துவம் குறித்து தன் பாராட்டுக்களை அச்செய்தியில் வெளியிட்டுள்ள திருத்தந்தை, பசி என்னும் கொடுமையை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திருஅவையும் தன் முழு ஆதரவை வழங்குவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு அப்பங்களை பலுகச் செய்த புதுமையில் பசியைத் தோற்கடிக்க முடிந்தது, பகிர்வின் மூலமாகத்தானேயொழிய பேராசையால் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புவதால் அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம் என்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2030க்குள் பசிக்கொடுமையை முற்றிலுமாக ஒழித்துவிடவேண்டும் என்ற குறிக்கோள் இயலாததாகத் தெரிகின்றது என்ற கவலையையும் அதில் வெளியிட்டுள்ளார்.இவ்வுலகின் மக்களனைவருக்கும் தேவையான உணவைத் தயாரிக்கும் சக்தி இங்கு இருப்பினும் இன்னும் எண்ணற்ற மக்கள் பசியால் வாடுவது, வருத்தம் தருவதாகவும், வெட்கத்துக்குரியதாகவும் இருக்கிறது என்ற திருத்தந்தை, மறுபக்கம் நாம் பசியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதையும், ஆயுதம் தாங்கிய குழுக்கள் அப்பாவி மக்களின் நிலங்களை எரிப்பது, கால்நடைகளைத் திருடுவது, உணவு உதவிகளைத் தடுப்பது போன்றவைகளையும் குறிப்பிட்டு தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மோதல் முறைகளால் தண்ணீர் விநியோக முறைகளும், தகவல் தொடர்பு அமைப்புக்களும் தாக்கப்படுவதும் தொடர்கின்றது என்ற திருத்தந்தை, மக்களின் துன்பங்கள் அதிகரிக்கும்போது அரசியல் தலைவர்களோ, சுரண்டல்களாலும், தண்டனையிலிருந்து விலக்கீடு பெறுவதாலும் கொழுக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.அரசியல் பதட்டநிலைகள், ஆயுதம் தாங்கிய மோதல்கள், மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் உணவு நெருக்கடிக்கு பெரும்பங்கு வகித்து, மனிதாபிமான உதவிகளைத் தடைச் செய்து, மனிதன் மாண்புடன் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றன எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
உணவு அமைப்புமுறைக்கும், தட்ப வெப்ப நிலைக்கும் இடையேயான தொடர்பு, இயற்கைப் பேரிடர்கள் சமாளிப்பு, பூர்வீகக் குடிமக்கள் உட்பட அனைத்து ஏழை மக்களுக்கான நீதி, நிலத்தை வளம்மாக்குவதற்கான அரசின் கடமைகள், பயிரிடும் உணவு அனைவருக்கும் கிடைக்க வழி செய்தல், எழ்மையை அகற்றுவதற்கான நிதி முதலீடுகள் ஆயுத தயாரிப்புக்கு திருப்பப்படுதல் போன்றவை குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை லியோ.
Daily Program
