மனித வர்த்தகத்தைத் தடுக்க கென்ய அரசுடன் கைகோர்க்கும் தலிதா கும் ! | Veritas Tamil

கடந்த 2016-இல் தொடங்கப்பட்ட 'தலிதா கும் கென்யா' என்ற அமைப்பு, கான்ராட் ஹில்டன் அறக்கட்டளை போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும் அனைத்துலக அளவில் வழங்கி வருகிறது.
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அதிகரித்து வரும் இணையவழி மனித வர்த்தகத்திறகு எதிராக, கென்யாவிலுள்ள தலிதா கும் எனப்படும்  மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் துறவுசபை சகோதரிகளின் உலகளாவிய வலையமைப்பு அந்நாட்டில் போராடி வருகிறது.

கடந்த 2016-இல் தொடங்கப்பட்ட 'தலிதா கும் கென்யா' என்ற அமைப்பு, கான்ராட் ஹில்டன் அறக்கட்டளை போன்ற நிறுவனங்களின் ஆதரவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும் அனைத்துலக அளவில் வழங்கி வருகிறது.

மேலும், தலிதா கும் கென்யா அமைப்பின் இயக்குநர் அருள்சகோதரி மெர்சி முவாய், மனித வர்த்தகத்தின் உலகளாவியத் தன்மையை வலியுறுத்தியதுடன், இது எளிய நிலையில் உள்ள சமூகங்களையும் மற்றும் இணையவழி தளங்களையும் ஒருசேரச் சுரண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த அளவிலான வளங்கள் மற்றும் கடத்தல்காரர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்தப் பரவலானப் பிரச்சனைக்கு எதிராகப் போராட உலகளாவிய ஒத்துழைப்பிற்கு அருள்சகோதரி மெர்சி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், சுதந்திரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்த அமைப்பு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், காவல்துறையினருக்கு இது குறித்த கல்வியை வழங்குகிறது. மேலும், எல்லைப்பகுதிகளிலும் இணையவழியிலும் நடைபெறும் மனித வர்த்தகத்தைத் தடுக்க அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தலிதா கும் அமைப்பு மூலம் மீட்கப்பட்டவர்கள், முழுமையான மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைவதற்காக மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் தொழிற்பயிற்சி ஆகியவற்றைப் பெறுகின்றனர்.

மலிண்டி மற்றும் மொம்பாசா போன்ற பகுதிகளில், அருள்சகோதரிகள் களத்தில் முன்னின்று பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொழிற்பயிற்சி, ஆலோசனைகள் மற்றும் நேரடித் தலையீடு (direct intervention) ஆகிய உதவிகளை வழங்குகின்றனர்.

Talitha Kum என்பது, அனைத்துலகத் துறவற சபைத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட (UISG), உரோமையை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பாகும். இது மனித வர்த்தகம், சுரண்டல் மற்றும் அனைத்து வகையான அடிமைத்தனத்தை ஒழிப்பதில் அயராது உழைத்து வருகின்றது.

நன்றி வத்திக்கான் செய்தி