பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு ! | Veritas Tamil

வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும், வலிமைவாய்ந்த கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அமைப்புகளை (Accountability systems) உருவாக்குமாறு திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

நியூயார்க்கில் இடம்பெற்ற பெண்களின் நிலை குறித்த 70-வது ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் கூட்டத்தில் வறுமை, பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவற்றை எதிர்கொள்வதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப் பாதுகாப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல என்று தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ள அக்குழு, பெண்கள் நீதியைத் தேடுவதைத் தடுக்கும் மற்றும் அவர்களின் மாண்பைச் சிதைக்கும் அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வலிமை படைத்த நிறுவனங்கள், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழுவின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

வன்முறை மற்றும் மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், "பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள்" என்றும், "அவர்கள் பெரும்பாலும் பாலியல் தொழில், கட்டாயத் திருமணங்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்" என்றும் அதன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும், வலிமைவாய்ந்த கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அமைப்புகளை (Accountability systems) உருவாக்குமாறு  அதன் அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

இறுதியாக, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள அதன் அறிக்கை, இதில் நியாயமான விசாரணை, முறையான சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பான சிறைச்சாலை சூழல்கள் ஆகியவை அடங்கும் என்பதையும் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

Tamil Survey Popup Image