வெற்றியின் தோல்வி.. | அருட்பணி. ஜெயசீலன் சவாரியர்பிச்சை | Veritas tamil

சமீபத்தில் வந்த திரைப்படத்தில் உள்ள இந்த வார்த்தைகள் பசுமரத்தாணிபோல் என் உள்ளத்தில் பதிந்தது:

உங்களால நாங்க நல்லா இருக்கணும்,

ஆனால்

உங்களவிட நாங்க நல்லா இருந்துவிடக் கூடாது.

எனக்குமேல் எவரும் வளரக்கூடாது என்ற எண்ணம் இன்று நம் அனைவரையும் ஆட்சி செய்கிறது என்பது வருத்தமே!

ஆம் நண்பர்களே நாம் வாழும் சமுதாயத்தில், ஒருவனின் வளர்ச்சி மற்றொருவனின் வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. நான் வளர வேண்டுமென்றால், நீ குறுக வேண்டும்; நான் உயர வேண்டுமென்றால், நீ குறைய வேண்டும்; நான் வெற்றி பெற வேண்டுமென்றால், நீ தோல்வி அடைய வேண்டும் என்னும் சித்தாந்தத்தால் நாம் கட்டப்படுகிறோம். ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசை ஒருவர்தான் பெறமுடியும் என்னும் கோட்பாட்டை நமக்கு நாமே வடிவமைத்துக் கொள்கிறோம். கவலை என்னவென்றால், நம்மில் பலர் நான் வளராவிட்டாலும் பரவாயில்லை, அவன் வளரக்கூடாது என்னும் மமதை சிந்தனைகள் நம்மை ஆட்டிப் படைப்பதுதான்; நான் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. அவன் வெற்றிபெறக்கூடாது என்னும் ஆணவ செயல்கள் நம்மை உருவாக்குவதுதான்; எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற தன்னல செருக்குகளால் நாம் கட்டமைக்கப்படுவதுதான். நம்மை அறியாமலேயே, நமது சிந்தனைகள், செயல்கள் இப்படிப்பட்ட குறுகிய மனநிலைக்கு தள்ளப்படுகிறது என்பதுதான் இன்றைய எதார்த்தம். சமீபத்தில் திரைப்படம் ஒன்று பார்த்துவிட்டு நானும் எனது நண்பனும் திரை அரங்கத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். அப்போது அந்த படத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் விமர்சித்து கொண்டிருந்தோம். 

அருமையான படமாக இருந்தாலும் ஒரு சமூகத்தைப்பற்றி இழிவாக பேசியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைப்பற்றி கலந்தாய்வு செய்துகொண்டிருக்கும்போது, அதே படத்தைப் பார்த்த இரு இளையோர் எங்கள் அருகில் பேசிக்கொண்டே சென்றனர். இருவருமே படத்தின் கருவை விட்டுவிட்டு, இழிவாக காட்சிப்படுத்தப்பட்ட சமூகத்தைப்பற்றி தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், இவர்களை நமக்கு மேல் வளர விடக்கூடாது என்ற வன்மம் நிறைந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டே சென்றனர். நம்மைச் சுற்றியுள்ள அனைத்து தளங்களுமே இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு கருத்துக்களையே நாம் உள்வாங்க நம்மை பழக்கப்படுத்துகிறது. குடும்பம். அரசியல், பணித்தளங்கள், சில வேளைகளில் ஆன்மிகத் தளங்களில் கூட அடுத்தவனை மட்டம் தட்டி, தன்னை னை உய உயர்த்திக்கொள்ளவும்: நானா? அவனா? என்ற போட்டி பொறாமைகளால் நம்மைச் செதுக்கவும் துணைபோகிறது என்பதை நினைக்கும்போது பயம் கலந்த கலக்கம் என்னை ஆட்கொள்கிறது.

ஒருவனை கீழே தள்ளிவிட்டு நாம் முன்னுக்கு வருவது அறம் அற்ற செயல் அல்லவா! உண்மையான வெற்றி என்பது அனைவரும் இணைந்து பெறுவதுதானே! மற்றவரின் தோல்வியில் மகிழ்ச்சி கொள்வது. உண்மையான வெற்றி ஆகாது. அப்படிப்பட்ட மனநிலையை நான் தோல்வி என்றே சொல்லுவேன். ஒருவன் பிறரைப் பகைத்து,அவர்களை மிதித்து, அவர்களைப் பின்னுக்கு தள்ளிய பிறகு வாழ்வில் வெற்றி பெறுகிறான் என்றால், அது முழுமையான வெற்றி கிடையாது. அதைத் தோல்வி என்றே நான் கருதுவேன்; அதை நான் வெற்றியின் தோல்வி என்பேன். அனைவரும் இணைந்து பெறுவதுதான் முழுமையான வெற்றி; பிறரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி காண்பவன்தான் உண்மையான வெற்றியாளன்; அனைவரையும் வெற்றிப்பாதைக்கு அழைப்பவனே சரியான வழிகாட்டி. நமது பயணம் தனிமனித வெற்றிக்காக அல்லாமல், அனைவரின் வளர்ச்சிக்கான பயணமாக அமையட்டும்; வெற்றியை விட சோர்ந்து பயணிக்கும் பயணத்தை ரசிப்போம்! இணைந்து வெற்றிக்காக பயணிப்போம்! நமது இணைப் பயணம் வெற்றியின் பயணமாக தொடரட்டும்!

அருட்பணி. ஜெயசீலன் சவாரியர்பிச்சை