கிறிஸ்து தரும் நம்பிக்கையும் விடுதலையும் ! | Veritas Tamil
தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார்.
பாஸ்கா காலத்தில், இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பின் ஒளியில் அவரது வார்த்தைகளை மீண்டும் சிந்திக்கிறோம் என்றும், அன்று சீடர்களைக் குழப்பிய அதே வார்த்தைகள், இன்று அவர்களுக்குத் தெளிவையும் நம்பிக்கையையும் தருகின்றன என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 03, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
தந்தையின் இல்லத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இயேசு இறுதி இராவுணவின் போது, "நான் மீண்டும் வந்து உங்களை என்னிடம் அழைத்துச் செல்வேன்; நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்" என வாக்களிக்கிறார் என்ற இயேசுவின் இறுதி இரவு உணவு குறித்த நற்செய்தி பகுதியை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நம் ஒவ்வொருவரையும் மதிப்புடன் வரவேற்க, அவரே அந்த இடத்தைத் தயாரிப்பவராகத் திகழ்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.
தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார் என்று கூறிய திருத்தந்தை, இங்கே, போட்டிக்கு பதிலாக நன்றியுணர்வும், புறக்கணிப்புக்கு பதிலாக அனைவரையும் ஏற்கும் பண்பு மேலோங்குகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் கடவுளால் எவரும் மறக்கப்படுவதோ அல்லது கைவிடப்படுவதோ இல்லை என்று மொழிந்த திருத்தந்தை, அவர் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார் என்றும், நாம் ஒவ்வொருவரும் அவரில் விலைமதிப்பற்றவர்களாக விளங்குகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
கவலைகள், அந்தஸ்து மற்றும் புகழுக்கான தேடல் ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கும் நம்பிக்கைக்கு இயேசு நம்மை அழைக்கிறார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, அவர் நம்மிடம் காட்டிய அதே அன்பை நாம் ஒருவருக்கொருவர் காட்டும் போது, இந்த உண்மையை உலகிற்கு பறைசாற்றுகிறோம் என்றும், இதன் மூலம், சகோதரத்துவமும் அமைதியும் மலரும் ஒரு விண்ணகத்தை இவ்வுலகிலேயே நாம் உருவாக்கத் தொடங்குகிறோம் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு இல்லமாக மாற செபிப்போம் என்று கூறி அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியை திருத்தந்தை நிறைவு செய்தார்.
நன்றி வத்திக்கான் செய்தி