திருத்தந்தை: நற்செய்தியை அறிவிப்பதும் அமைதியை மேம்படுத்துவதுமே திருஅவையின் பணி ! | Veritas Tamil

 திருத்தந்தை பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே தான் அமைதியை வலியுறுத்தி வருவதாகக் கூறி "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற தனது செய்தியையும் மீண்டும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

நற்செய்தியை அறிவிப்பதும் அமைதியை மேம்படுத்துவதுமே திருஅவையின் பணி என்பதை உறுதிப்படுத்தியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், “ நற்செய்தியை அறிவிப்பதற்காக என் மீது விமர்சனங்களை வைப்பவர்கள், அந்த விமர்சனங்களை நேர்மையுடனும் உண்மையுடனும் முன்வைக்கட்டும்" என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவிலிருந்து  செவ்வாய்க்கிழமை மாலை உரோமைக்கு திரும்புவதற்கு முன்னதாக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை தான் ஆதரிப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த திருத்தந்தை, இந்த விடயத்தில் திருஅவையின் நிலைப்பாடு தெளிவாகவும் மாறாததாகவும் இருப்பதை விளக்கியுள்ளார்.

இறைவார்த்தை அதன் உள்ளார்ந்த மதிப்பிற்காகவே செவிமடுக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, தனது  பணிப்பொறுப்பின் தொடக்கத்திலிருந்தே தான் அமைதியை வலியுறுத்தி வருவதாகக் கூறி "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற தனது செய்தியையும் மீண்டும் வலியுறுத்தினார்.

மே 7, வியாழனன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ அவர்களுடன் இடம்பெறவிருக்கும் சந்திப்பைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, இந்தச் சந்திப்பு நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆக்கபூர்வமான உரையாடலாகவும், இருதரப்பு புரிதலுக்கு வழிவகுப்பதாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

"இந்த கலந்துரையாடலில் இடம்பெறும் தலைப்புகள் தற்போதைய சர்ச்சைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை" என்றும், "பரந்த அளவிலான கவலைகளைக் குறித்துப் பேச இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும்" என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

நன்றி வத்திக்கான் செய்தி