அருள்பணியாளர்கள் நம்பிக்கையின் கதவுகளைத் திறக்கும் தூதுவர்கள் ! | Veritas Tamil

குருத்துவ அழைப்பு என்பது தனிமையிலிருந்து விடுவித்து, கிறிஸ்துவோடும் பிற மனிதர்களோடும் நம்மைப் பிணைக்கும் ஒரு திருப்பணியாகும்.

குருத்துவ அழைப்பு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியாகும் என்றும், கிறிஸ்துவோடு நாம் கொண்டிருக்கும் ஆழமான உறவு, எல்லா மனிதர்களையும் அன்பு செய்ய நம் இதயத்தைத் தூண்டுகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 26, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு திருப்பலியின்போது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

நல்லாயன் ஞாயிறு மரணத்தின் மத்தியிலும் வாழ்வு உண்டு என்பதைப் பறைசாற்றுகிறது என்றும், "மக்கள் வாழ்வைப் பெறவும், அதை மிகுதியாகப் பெறவும் வந்தேன்" (யோவான் 10:10) என்ற இயேசுவின் வாக்குறுதியை இது நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும் புதிய அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு, உயிருள்ள நம்பிக்கையையும் தூய ஆவியாரின் பணியையும் வெளிப்படுத்துகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தூய ஆவியார் நம்மைத் தனிமையிலிருந்து விடுவித்து, ஒன்றிணைந்த வாழ்விற்கு அழைத்து, உயிர்த்த ஆண்டவரோடு நம்மை இணைக்கிறார் என்றும் தெரிவித்தார்.

அருள்பணியாளர்கள் தங்களது சுதந்திரமான பணியின் வழியாக, நம்பிக்கையான மற்றும் தன்னலமற்ற அன்பை வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும், இதன் மூலம் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குபவர்களாகத் திகழ்கிறார்கள் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நல்ல ஆயரான இயேசு, தீங்கிழைக்கின்ற மற்றும் பிரிவினையைத் தூண்டும் குரல்கள் குறித்து எச்சரிக்கும் அதேவேளை, அருள்பணியாளர்கள் சவால்களைக் கண்டு அஞ்சாமல், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து அமைதியுடன் செயல்பட வேண்டும் என்றும், அவர்களது பாதுகாப்பு பதவியில் இல்லை, மாறாக கிறிஸ்துவின் சிலுவைச் சாவிலும் உயிர்ப்பிலுமே உள்ளது என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

அருள்பணியாளர்கள் நம்பிக்கையின் கதவைத் திறந்து வைக்க அழைக்கப்படுகிறார்கள் என்று கூறிய திருத்தந்தை, மற்றவர்கள் கிறிஸ்துவை சந்திப்பதற்கு அவர்கள் ஒருபோதும் தடையாக  இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அருள்பணியாளர்கள் அனைவரையும் வரவேற்கவும், ஒற்றுமையை வளர்க்கவும், மக்களின் வாழ்வுப் பயணத்தில் அவர்களுக்குத் துணையாக இருக்கவும் வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, அவர்கள் உலகெங்கும் நற்செய்தி அறிவிக்க அனுப்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட  திருத்தந்தை,  வாழ்வின் உன்னதங்களைக் கண்டறியவும், நல்ல ஆயனைப் பின்பற்றி பிறரை வழிநடத்தவும், அமைதி, நம்பிக்கை மற்றும் கடவுள் வழங்கும் நிறைவான வாழ்வை நோக்கி மக்களை இட்டுச் செல்லவும் அவர்கள் பணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார். 

நன்றி வத்திக்கான் செய்தி