ஆப்பிரிக்க திருத்தூதுப் பயண நிறைவில் செய்தியாளர்களுடன் திருத்தந்தை சந்திப்பு ! | Veritas Tamil

புலம்பெயர்தல் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது ஒரு உலகளாவிய சவால் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, 'வறுமையின் பிடியில் இருக்கும் நாடுகளுக்குத் தகுந்த ஆதரவையும் வாழ்வாதாரத்தையும் வழங்கச் செல்வந்த நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தனது முதன்மையான பணி மேய்ப்புப்பணி என்றும், அரசியல் முடிவுகளில் கவனம் செலுத்துவதை விட நற்செய்தியை அறிவிப்பதும், மக்களின் மகிழ்ச்சி மற்றும் துன்பங்களில் அவர்களுக்குத் துணையாக இருப்பதுமே தனது நோக்கம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 23, ஆப்பிரிக்காவிற்கான தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக் கொண்டு உரோமைக்கு திரும்பும்போது விமானத்தில் செய்தியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இவ்வாறு திருத்தந்தை தெரிவித்துள்ளார் .

போர் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய திருத்தந்தை, ஒரு மேய்ப்பராக என்னால் ஒருபோதும் போரை ஆதரிக்க முடியாது என்றும், குறிப்பாக ஈரான் மற்றும் லெபனோன் ஆகிய நாடுகளில் நிலவும் மோதல்களால் அப்பாவி மக்களும், பிஞ்சுக் குழந்தைகளும் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தினார்.

மேலும் வன்முறைக்குப் பதிலாக அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடரவும், அனைத்துலக சட்டத்தை மதிக்கவும், அமைதிக் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து புலம்பெயர்தல் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது ஒரு உலகளாவிய சவால் என்று  சுட்டிக்காட்டிய  திருத்தந்தை, 'வறுமையின் பிடியில் இருக்கும் நாடுகளுக்குத் தகுந்த ஆதரவையும் வாழ்வாதாரத்தையும் வழங்கச் செல்வந்த நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

எல்லைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நாடுகளின் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், புலம்பெயர்ந்தோர் எப்போதும் மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

மனிதர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படும் சூழ்நிலைகளைக் கண்டித்த திருத்தந்தை, புலம்பெயர்தலுக்கான மூல காரணங்களைக் கண்டறிய நீதி, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் தலைவர்களுடனான உறவுகள் குறித்துப் பேசுகையில், நீதி மற்றும் மனிதாபிமான நோக்கங்களை மேம்படுத்துவதற்காக திருஅவை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முடிவை ஆதரிப்பதாகவும் திருத்தந்தை விளக்கியுள்ளார்.

இறுதியாக, மரண தண்டனை மற்றும்  அநீதியான முறையில் இடம்பெறும் அனைத்து கொலைகளையும் கடுமையாகக் கண்டித்த திருத்தந்தை, கருவுற்றது முதல் இயற்கையான மரணம் வரையில மனித வாழ்வின் புனிதத்தை  உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி வத்திக்கான் செய்தி