நற்செய்தி அறிவிப்பும் நல்வாழ்வுக்கான அழைப்பும் ! | Veritas Tamil
திருத்தந்தை இந்த மண்ணில் 170 ஆண்டுகால விசுவாசப் பயணத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார். பல மறைபரப்புப் பணியாளர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, மக்களின் துயரங்களுக்கு நற்செய்தியின் மூலம் ஒளியேற்றியதை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
ஏப்ரல் 22, புதனன்று, எக்குவடோரியல் கினியாவில் மொங்கோமோவில் உள்ள அமல உற்பவ அன்னை பேராலயத்தில் இடம் பெற்ற திருப்பலியின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய மறையுரை:
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
மனிதராக உருவெடுத்த இறைவார்த்தையின் அன்னையும், ஈக்குவடோரியல் கினியாவின் பாதுகாவலியுமான அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அழகிய பேராலயத்தில், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்கவும், திருஅவையின் வாழ்வு மற்றும் பணியின் ஊற்றும் சிகரமுமான நற்கருணையை கொண்டாடவும் ஒன்றுகூடி வந்துள்ளோம். நற்கருணையில் கிறிஸ்து நம் ஒவ்வொருவர் மீதும் கடவுள் கொண்டுள்ள எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தி, வாழ்வு தரும் அப்பமாக தன்னையே நமக்கு அளிக்கிறார்.
170 ஆண்டுகால விசுவாசப் பயணம்
உங்களுடன் இணைந்து இதனை கொண்டாடுவதிலும், இந்த மண்ணில் 170 ஆண்டுகால நற்செய்தி அறிவிப்பு பணிக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இறைவன் செய்த அனைத்து நன்மைகளையும் நினைவுகூரவும், நற்செய்திக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பல மறைபரப்புப் பணியாளர்கள், அருள்பணியாளர்கள், மறைக்கல்வியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கவும் இது ஒரு நல்வாய்ப்பாகும். அவர்கள் தங்கள் சான்று வாழ்வின் மூலம், உங்கள் மக்களின் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் காயங்களுக்கு ஒளியைக் கொண்டு வந்தனர், கடவுளின் அன்பின் அடையாளங்களாக மாறி, துணிவுடன் கிறிஸ்துவுக்குப் பணியாற்றினர்.
இந்த வளமான வரலாறு உங்களை அகில உலகத் திருஅவையுடன் இணைக்கிறது. ஆப்பிரிக்க மக்களே இப்போது தங்களின் சொந்த மண்ணில் மறைபரப்புப் பணியாளர்களாக உள்ளனர் என்று கூறிய திருத்தந்தை ஆறாம் பவுலின் வார்த்தைகளை எதிரொலிக்கும் வகையில், நற்செய்தியை அறிவிப்பதில் நீங்கள் முதன்மையானவர்களாக இருக்க இது உங்களை அழைக்கிறது. இன்று நீங்கள் போற்றும் நம்பிக்கையும் அன்பும், சமூகப் பொறுப்புணர்வையும் பொதுநலத்தையும் வளர்த்தெடுக்க உங்களை ஊக்கப்படுத்தட்டும். தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய இந்தப் பயணத்தைத் தடையின்றித் தொடர நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்."
நற்செய்திப் பணியில் விடாமுயற்சியும் தியாகமும்
இத்தகைய அர்ப்பணிப்புக்கு விடாமுயற்சியும் தியாகமும் தேவை. திருத்தூதர் பணிகள் நூலில் நாம் வாசிக்கக் கேட்டது போல, நற்செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் ஒரு திருஅவை துன்புறுத்தல்களைச் சந்திக்க நேரிடலாம், இருப்பினும் கடவுளின் இருப்பு குணப்படுத்துதலையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. கடினமான தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக சூழ்நிலைகளிலும், இருள் சூழ்ந்த காலங்களிலும் கூட தனது அரசை வளரச் செய்யும் ஆண்டவர் மீது நாம் நம்பிக்கை கொள்கிறோம். கிறிஸ்து நமது ஆழமான பசியைத் தீர்க்கும் வாழ்வு தரும் அப்பமாக நிலைத்திருக்கிறார். பசி என்பது இன்றைய தினத்தில் எதனை உணர்த்துகிறது? நம்பிக்கை, நீதி, அமைதி மற்றும் சகோதரத்துவம் நிறைந்த எதிர்காலத்திற்கான பசி உள்ளது. இந்த எதிர்காலம் என்பது செயலற்றுக் காத்திருக்க வேண்டிய ஒன்றல்ல; கடவுளின் அருளால் நாம் கட்டியெழுப்ப அழைக்கப்படும் ஒன்றாகும். ஈக்குவடோரியல் கினியாவின் எதிர்காலம் உங்கள் தேர்வுகள்,பொறுப்புணர்வு மற்றும் ஒவ்வொரு நபரின் மாண்பிற்கான உங்கள் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்துள்ளது.
சமூக வளர்ச்சியில் திருமுழுக்குப் பெற்றவர்களின் பங்கு
திருமுழுக்கு பெற்ற அனைவரும் அன்பின் திருத்தூதர்களாகவும், புதுப்பிக்கப்பட்ட மனிதகுலத்தின் சாட்சிகளாகவும் இருக்க அழைக்கப்படுகிறார்கள், இதன் மூலம் இந்த நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். உங்கள் இயற்கை வளங்கள் அனைவருக்கும் பயனளிக்கட்டும், சமத்துவமின்மையைக் கடந்து பொது நலனுக்குச் சேவை செய்யட்டும். குறிப்பாக ஏழைகள், போராடும் குடும்பங்கள் மற்றும் கைதிகளுக்கான மனித மாண்பைப் பாதுகாத்திடுங்கள். நற்செய்தி அறிவிக்க அஞ்சாதிருங்கள். நம்பிக்கையை விதைப்பவராகவும், அமைதியை நிலைநாட்டுபவராகவும், உறவுகளை இணைக்கும் சிற்பியாகவும் உருவெடுங்கள். அமல அன்னை மரியா உங்களை வழிநடத்தி, உங்களை கிறிஸ்துவின் மகிழ்ச்சியான மற்றும் தாராள மனமுள்ள சீடர்களாக ஆக்குவாராக.