போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம் ! | Veritas Tamil

கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், அதற்குப் பதிலாக அனைத்து நாடுகளின் பேராலயத்தில் வழிபாட்டுச் சடங்குகளை நிகழ்த்தியது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைமைப்பீடம்.

புனித பூமியில் தொடரும் துயரங்களைச் சுட்டிக்காட்டி, அமைதிக்காக மீண்டும் இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா.

மார்ச் 29, ஞாயிறன்று, எருசலேமில் உள்ள கெத்சமனித் தோட்டத்தில் நிகழ்ந்த குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டத்தின் போது இந்த அழைப்பை விடுத்த கர்தினால் பித்தசபாலா அவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் போரின் காரணமாக, திருப்பயணிகள் இன்றி இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற வேளையில், பாரம்பரிய சடங்குகள் இல்லாவிட்டாலும் நம்பிக்கை நிலைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டினார்.

குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டைத் தலைமை தாங்கி சிறப்பித்த கர்தினால் பித்தசபாலா அவர்கள், எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் வடித்த நிகழ்வை எடுத்துக்காட்டி, இதனை இன்றைய மோதல்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அதைவேளை, "இந்த நகர் இன்றும் போர், பிளவு மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளைத் தவறவிடுதல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது" என்று விவரித்தார்.

மேலும், "புறத்தோற்ற வெளிப்பாடுகளை விட, தற்போதைய கடினமான சூழல் ஆன்மிக உண்மையை  ஆழப்படுத்தும்" என்று  குறிப்பிட்ட கர்தினால் பித்தசபாலா அவர்கள், நம்பிக்கை என்பது வெளிப்படையான சடங்குகளை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து கிறிஸ்துவின் திருப்பாடுகளை மேற்கோள் காட்டி, மனிதரின் தோல்விகளுடன் இறைவனின் அன்பு மற்றும் தியாகம் ஆகியவற்றை ஒப்பிட்டுக்காட்டிய கர்தினால் பித்தசபாலா அவர்கள், உண்மையான அமைதி என்பது அதிகாரத்தால் வருவதல்ல, மாறாகத் தன்னைத்தானே அர்ப்பணிக்கும் அன்பினால் மட்டுமே வருகிறது என்பதை விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார்.

இந்த நகரில் வன்முறைத் தொடர்ந்து நீடித்து வரும் போதிலும், விசுவாசிகள் நம்பிக்கையுடன் இருக்கவும், அன்பு மற்றும் ஒப்புரவாக்குதலின் சாட்சிகளாகச் செயல்படவும் ஊக்குவித்து  தனது உரையை நிறைவு செய்தார் கர்தினால் பித்தசபாலா.

கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், அதற்குப் பதிலாக அனைத்து நாடுகளின் பேராலயத்தில் வழிபாட்டுச் சடங்குகளை நிகழ்த்தியது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைமைப்பீடம்.
நன்றி வத்திக்கான் செய்தி