நற்செய்தி அறிவிப்பிற்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு மிகவும் அவசியமானது ! | Veritas Tamil

இங்கிலாந்து ஆங்கிலிக்கன் திருஅவையின் கேன்டர்பரி உயர் மறைமாவட்டத்தின் முதல் பெண் பேராயராக பொறுப்பேற்கவுள்ள டேம் சாரா எலிசபெத் முல்லாலி அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், 'உண்மை மற்றும் அன்பின்' அடிப்படையில் தொடர்ந்து உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள ஆங்கிலிக்கன் திருஅவையின் கேன்டர்பரி உயர் மறைமாவட்டத்தின் முதல் பெண் பேராயர் டேம் சாரா எலிசபெத் முல்லாலி அவர்கள் பதவியேற்பதை முன்னிட்டு, தனது இறைவேண்டல் மற்றும் ஆதரவைத் தெரிவித்து செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 26, வியாழக்கிழமையன்று அனுப்பியுள்ள இச்செய்தியில்,  ஆங்கிலிக்கன் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்தப் பதவியின் 'சவாலான' பொறுப்புகளை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, ஆங்கிலிக்கன் திருஅவைக்கு ஒரு கடினமான சூழல் நிலவும் இத்தருணத்தில் சாரா முல்லாலி அவர்கள் இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து தலத்திருஅவைக்கும், உலகளாவிய ஆங்கிலிக்கன் உறவு ஒன்றிப்பிற்கும் பணியாற்றுவதற்குத் தேவையான ஞானத்தையும் வழிநடத்துதலையும் அவர் பெற்றிட, தான் இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.

1966-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலுக்கும், பேராயர் மைக்கேல் ராம்சேவுக்கும் (Michael Ramsey) இடையே இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் திருஅவைகளுக்கு இடையே பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும், குறிப்பாக, தொடர்ந்து இடம்பெற்று வரும் இறையியல் உரையாடல்களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இவ்விரு திருஅவையினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இன்னும் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள அதே வேளையில், "நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட 'ஒரே திருமுழுக்கு' கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து ஒன்றிணைக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், 'உண்மை மற்றும் அன்பின்' அடிப்படையில் தொடர்ந்து உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, "இன்றைய உலகில் நற்செய்தியைப் பயனுள்ள வகையில் அறிவிப்பதற்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு மிகவும் அவசியமானது" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, பேராயர் சாரா முல்லாலி அவர்களின் இந்தப் புதிய திருப்பணியை வழிநடத்த தூய ஆவியாரின்  துணையை வேண்டி தனது திருத்தூது ஆசீருடன் இந்தச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

பேராயர் டேம் சாரா முல்லாலி அவர்களின் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒரு சிறப்புக் கூட்டு வழிபாட்டின் போது, திருத்தந்தை அவர்களால் கையொப்பமிடப்பட்ட இந்தச் செய்தி, கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்களால் பேராயரிடம் முறைப்படி வழங்கப்பட்டது.