மாறாத அன்பு | Veritas Tamil

பியாட்சா சான் பியத்ரோ (Piazza San Pietro) இதழில் வெளியான ஒரு கடிதத்தின் வழியாக, ரெஜியோ கலாப்ரியாவைச் சேர்ந்த பியத்ரோ என்ற மாணவர் தனது மனப் போராட்டங்களைத் திருத்தந்தையிடம் வெளிப்படுத்தியுள்ளார். பள்ளிப் பருவம் மற்றும் பங்குச் சமூகத்தின் ஊடாகத் தான் வளர்த்தெடுத்த நட்புறவுகள் காலப்போக்கில் சிதைந்துவிடுமோ என்ற கவலையும், பிரிவின் அச்சமும் தனக்கு இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இளைஞனின் கடிதத்திற்குப் பதிலளித்த திருத்தந்தை, நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் வார்த்தைகளால் அவரைத் தேற்றியதுடன், “இயேசு உன்னை அன்பு செய்கிறார்” என்றும், கிறிஸ்துவின் அன்பு தனிப்பட்ட ஒருவருக்கானது என்றும், நமது வாழ்வின் தெரிவுகளுக்கோ அல்லது எதிர்கால மாற்றங்களுக்கோ அப்பாற்பட்டு, இறைவனின் அன்பு எக்காலத்திலும் மாறாதது என்றும் வலியுறுத்தினார்.

இயேசுவும் தன் வாழ்வில் உன்னதமான நட்பின் இனிமையையும், அதே சமயம் பிரிவின் துயரையும் துரோகத்தின் வலியையும் நேரில் சந்தித்தவர் என்பதை பியத்ரோவுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, எனவே, உண்மையான உறவுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தை இயேசு நன்கு புரிந்துகொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் அனைத்தையும் உடனடியாகப் புரிந்துகொள்ள அவசரப்பட வேண்டாம் என்று இளைஞனை கேட்டுக்கொண்ட திருத்தந்தை, காலத்தை "ஒரு பொறுமையான ஆசிரியர்" என்றும், அது காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

எத்தகைய உறவுகள் உண்மையானவை என்பதை தேர்ந்து தெளிய, அன்றாடச் செபம், இறைவார்த்தைக்குச் செவிமடுப்பது, அருட்சாதனங்கள் மற்றும் ஞானமுள்ளவர்களின் வழிகாட்டுதல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் காட்டினார்.இறுதியாக, கிறிஸ்துவின் அன்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு குடும்பத்தைப் பற்றிய கனவை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுமாறு பியத்ரோவைத் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தனது இதயத்தில் பல கேள்விகள் இருந்தபோதும் இறைவனை முழுமையாக நம்பிய அன்னை மரியாவின் பாதுகாப்பில் அந்த இளைஞனை அர்ப்பணித்தார்.