ரோமில் 2-வது நாடாளுமன்றங்களுக்கு இடையேயான மாநாடு! | Veritas Tamil
சட்டத்தின் ஆட்சி, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் திருப்பீடம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், மேலும், ஒரு ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு இந்த கூறுகள் அத்தியாவசியமானவை என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
மே 15, வெள்ளியன்று, போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இரண்டாவது நாடாளுமன்றங்களுக்கு இடையேயான மாநாட்டில் பங்கேற்றவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தனிநபர்களின் தன்னிச்சையான விருப்பம் அல்லாமல், சட்டமே மேலோங்கி இருக்கும் வரை மட்டுமே உண்மையிலேயே ஒரு நீதியான சமூகம் நிலைபெற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சட்ட அமலாக்கத் துறையினரும் ஒட்டுமொத்த சமூகமும், உலகளாவிய மனித உரிமைகளை மதிக்கும் அதே வேளையில், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
குற்றம் செய்தவர்கள் உட்பட ஒவ்வொரு நபரின் இயல்பான மாண்பையும் மதிக்க வேண்டும் என்றும், அதே மரியாதை, மரண தண்டனை, சித்திரவதை மற்றும் அனைத்து வகையான கொடூரமான அல்லது இழிவான தண்டனைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.சமூக ஊடகங்கள் போதைப்பொருள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பும் நிலையில், அவற்றின் அழிவுகரமான விளைவுகள் பற்றிய துல்லியமான அறிவியல் அறிவைக் குடும்பங்களும் பள்ளிகளும் வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இது மூளை, உடல் மற்றும் சமூக நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க அவசியம் என்றும் எடுத்துக்காட்டினார்.
பாதுகாப்பான, நீதியான மற்றும் நிலையான சமூகங்களை உருவாக்குவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தலும் அவற்றுக்கு எதிராகப் போராடுவதும் ஒரு முக்கிய அங்கமாகும் என்று கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார் .ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த 57 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பினால் (OSCE) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.