சேவைக்கு ஓய்வு இல்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
1940ஆம் ஆண்டு இராமநாதபுரம், தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தவர் 'பி. எம். ஜி' என அறியப்படும் பி. எம். குருசாமி. 1942ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். இதனால் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டவர். ஆனால், அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. எனவே இவர் சிறுவனாக இருக்கிறார் என்றெண்ணி, சிறைக்காவலர் இவர்மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் 1943ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் குருசாமி தமது அஞ்சல் பணியைத் தொடர்ந்தார். வேலையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட குருசாமி 1985ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற பிறகும் அவரால் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பவில்லை.
பணி ஓய்விற்குப் பிறகும் ஒவ்வொரு நாளும் தனுஸ்கோடியில் தபால் நிலையத்துக்கு வந்து காலை இரண்டு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் பொது மக்களுக்கு உதவி செய்கிறார். எழுதத் தெரியாதவர்களுக்குப் படிவங்களை நிரப்பிக்கொடுப்பது, பணத்தைக் கணக்கில் போடுவது, பணத்தை எடுப்பதற்கு உதவி செய்வது, அரசின் அஞ்சலகத் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆர். டி. ஆரம்பித்துக் கொடுப்பது என இவரின் சேவை 32 ஆண்டுகளாகத் தொடர்கின்றது.
ஓய்வுக்குப் பிறகு யாருமே பழைய அலுவலகத்துக்குச் செல்ல விரும்பமாட்டார்கள். ஆனால், 91 வயதிலும் ஆர்வத்துடன் குருசாமி செய்யும் பணிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. "கடவுள் எனக்கு நல்ல உடல் நிலையைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய உட ஒத்துழைக்கும்வரை என்னால் முடிந்த சேவைகளைத் தொடர்வேன்" என்கிறார் குருசாமி. இவரின் சேவைகளைப் பாராட்டி 2017ஆம் ஆண்டு, காரைக்குடி கம்பன் கழகம் இவருக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
இறைவன் கொடுத்த திறமைகளை ஏழைகளின் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறவர்கள் சூரியனாக ஒளிர்வார்கள்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.