இயற்கை மனிதர் | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மனிதர்களின்றி மரங்கள் வாழும்-ஆனால், மரங்களின்றி மனிதர்களால் வாழ இயலாது.

தெலுங்கானா மாநிலம் தாரிப்பள்ளி என்னும் ஊரைச் சார்ந்தவர் ராமையா. இந்தப் பகுதி மக்கள் இவரை 'சேட்லா ராமையா' என்று அழைக்கின்றனர். 'சேட்டு' என்றால் மரம் எனப் பொருள்படும். மரத்துக்கும் இவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால் இவர் 'சேட்லா ராமையா' என்று அழைக்கப்படுகின்றார்.

நமது வாழ்வில் எத்தனை மரங்களை நாம் நட்டிருப்போம் ? இதுவரை இந்த மாமனிதர் நட்ட மரங்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. 

எழுபது வயதான ராமையா கடந்த முப்பது ஆண்டுகளாகச் சோர்வின்றி இப்பணியைச் செய்து வருகிறார். மிதிவண்டியில் சென்று வெட்டவெளியாகக் காணப்படும் இடங்களில் மரக்கன்றுகளை ஊன்றுகின்றார். மரக்கன்றுகளை நடுவதோடு தமது பணி முடிந்துவிட்டது. என்று எண்ணாமல், நட்டுவைத்த செடிகளுக்குத் தண்ணீரையும் ஊற்றுகிறார். சிலவேளைகளில் சாலையில் செல்லுகின்றபோது இருபுறங்களிலும் விதைகளைத் தூவிக்கொண்டே சென்றுவிடுகிறார். இத்தனைக்கும் இவர் வசதியான மனிதர் இல்லை.

"என் கணவரது தோற்றத்தைக் கண்டும், இவர் இருசக்கர வாகனத்தில் செடிகளோடு செல்கின்றபோதும் பலரும் இவரை ஏளனம் செய்துள்ளனர். இருந்தாலும் நானும், என் கணவரோடு சேர்ந்து செல்லும் இடமெல்லாம் மரங்களை நடுகிறோம்” என்று இவரது மனைவி ஞானம்மா கூறுகிறார்.

"உயிருள்ளவரை நான் இந்தப் பணியைச் செய்துகொண்டுதான் இருப்பேன்" என்று உற்சாகத்தோடு சொல்கிறார் எழுபது வயதான ராமையா. நம் தலைமுறைகளுக்காக இறைவன் வழங்கிய இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இவரது ஏக்கம்.

2017ஆம் ஆண்டு இவர் செய்த பணியைப் பாராட்டும் விதத்தில், மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

ஒருபுறம் மரத்தை வெட்டுகிறார்கள். இன்னொரு புறம் ஒருவர் மரத்தை ஊன்றிக்கொண்டு செல்கிறார். இதனால்தான் மனிதர் வாழ்கிறார்.

எழுத்து 
ஜெ.ஞானசேகரன்