யாரும் மது அருந்தாதீர் | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மதுக்கடை வாசலிலே முழுநேரக் குடிநோயாளிகள்: வீட்டுவாசலிலே கடன்காரர்கள்;

சேலத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் 1330 நாள்கள் பலர் கால்களில் விழுந்தார். எதற்காக விழுந்தார் என்ற ஆவல் உங்களிடம் எழுகிறதா'

83 வயது பாலகிருஷ்ணன் என்கிற பிராங்கிளின் ஆசாத் காந்தி அவர்கள், மதுவுக்கு எதிரான தமது போராட்டத்தின் ஒரு முயற்சியாகச் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து, கைகளைப் பிடித்துக்கொண்டு கதறியிருக்கிறார்.

பலர் இவர்மீது எச்சில் துப்பியிருக்கிறார்கள், கல் வீசியிருக்கிறார்கள். ஆனாலும் பதிலுக்கு இவர் செய்தது அவர்களின் காலில் விழுந்தது மட்டுமே. பல சமூக ஆர்வலர்கள், “25 நாள்களில் 66 முடித்துக்கொள்ளுங்கள்" என்று கேட்டார்கள். 'முடியாது' என்று சொன்ன ஆசாத் காந்தி அவர்கள் 50, 100, 1000 எனத் தாண்டி திருக்குறள் எண்ணிக்கையைக் குறிக்கின்ற வகையில் 1330வது நாளில் முடித்திருக்கிறார்.

இவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் வந்திருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 125 பேர்தான். “ஐயா நீங்க குடிக்காதீங்க. குடி உங்க உடலைக் கெடுக்கும். உங்க குடும்பத்தை அழிக்கும்" என்று சொல்லி அவமானங்கள் பட்டு, பலருடைய காலில் விழுந்த நல்லவருக்கு வந்த கூட்டம் இத்தனை பேர்தான். நல்லவர்களை இந்த உலகம் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. ஆயிரம் கோடி ஊழல் செய்தவனுக்குத்தான் இந்த உலகம் தலை வணங்குகிறது.

ஓர் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் சாலை விபத்துகளால் கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை ஓர் இலட்சத்தைத் தொடுகிறது. இதில் 70 விழுக்காடு விபத்துகள் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்றன.

மதுக்கடைகளுக்குள் சரணடைந்து நோயாளிகளாக மாறுபவர்கள், குடும்பம் நொறுங்கிச் சிதைவதைக் கவனிப்பதில்லை.

எழுத்து 
ஜெ.ஞானசேகரன்