உயர்ந்த திருமணப் பரிசு | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
நீ செய்யும் நற்செயல்கள் உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்யும்.
இந்தியாவில் இராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் என்பவர் தனது இரு மகன்களான அருண் மற்றும் அல்பேஷ் ஆகிய இருவருக்கும் அண்மையில் திருமணம் நடத்தினார். திருமணத்திற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அழைப்பிதழ் கொடுப்பது வழக்கம். இவரும் அழைப்பிதழ் கொடுப்பதற்காக தமது உறவினர்கள் இல்லங்களுக்குச் சென்றார். ஆனால், இங்கு இவர் செய்த செயல்தான் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.
ஒவ்வொரு வீட்டிற்கும் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, “நீங்கள் யாரும் அன்பளிப்புகள் வழங்க வேண்டாம். விருப்பம் இருந்தால் இரத்த தானம் செய்யுங்கள். இதுவே நீங்கள் செய்யும் சிறந்த அன்பளிப்பு” என்று ராகேஷ் வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இவரது அழைப்பு பிறரைக் கவர்ந்ததால் திருமணத்துக்கு வந்தவர்கள் பலரும் இரத்த தானம் செய்தனர். தனது இளம் வயதில் விபத்தில் காயமடைந்த அவரது உறவினருக்குச் சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் அவர் உயிரிழக்க நேர்ந்தது. அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் கொடுக்க இவர் மறந்ததே இல்லை.
ராகேஷ் வைஷ்ணவ் இல்லத்தில் நடந்த இந்த நற்செயல் நமது இல்ல நிகழ்வுகளிலும் நடைபெற்றால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும். வாழ்க்கையில் இதுவரைக்கும் இரத்த தானமே செய்யாமல் எத்தனை பேர் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!
நாம் இந்த உலகில் பிறந்ததன் அடையாளமாக ஏதேனும் ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். அது நமது இரத்த தானமாக இருக்கட்டுமே. அதுவே நமது இறுதி ஊர்வலத்தில் கலந்து நமக்குப் பெருமை சேர்க்கும்.
நம்மை உலகம் பார்க்க வேண்டும் என்று மலையில் ஏறவேண்டாம். உலகை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக மலையில் ஏற வேண்டும். மலையில் ஏறியவுடன் உலகம் நம்மை உற்று நோக்கும். நற்செயல்களைக் கண்டு உலகம் மாறும்.
எழுத்து
ஜெ.ஞானசேகரன்