திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மீதான தாக்குதலும் இறைசாட்சியமும்! | Veritas Tamil

1981 மே 13 அன்று புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி நடந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை திருஅவை நினைவுகூர்கிறது. பனிப்போர் கால பதற்றங்களுக்கு மத்தியில் படுகாயமடைந்த அவர், கன்னி மரியாளின் பரிந்துரையால் உயிர் பிழைத்ததாக நம்பினார்.

1981 ஆம் ஆண்டு மே 13, அன்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மீதான கொலை முயற்சி நடந்து நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நவீன வரலாற்றில் ஆழமான தழும்பை ஏற்படுத்திய அந்தத் தருணத்தை திரு இன்றும் திருஅவை நினைவுகூர்கிறது.

புனித பேதுரு  பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற  புதன் மறைக்கல்வி உரையின்போது, திருத்தந்தை தனது வாகனத்தில் (popemobile) இருந்து பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில், மிக அருகாமையிலிருந்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக ரோமின் ஜெமெல்லி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலானது பனிப்போர் பதற்றங்கள், கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் இத்தாலியில் பல ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு மத்தியில் நிகழ்ந்தது.திருத்தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய நம்பிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில்,  புனித பேதுரு  பெருங்கோவில் வளாகத்தில் நிலவிய அமைதியையும், அங்கு எழுந்த இறைவேண்டல்களையும் வத்திக்கான் வானொலி செய்தியாளர் பெனடெட்டோ நார்டாச்சி அவர்கள் விவரித்தார். பின்னர், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வயிற்றுப் பகுதியில் காயமடைந்துள்ள போதிலும், அவர் "குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று திருப்பீடம் உறுதிப்படுத்தியது.

சரியாக நான்கு நாட்களுக்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்தே திருத்தந்தை தன்னைத் தாக்கிய மெஹ்மெட் அலி ஆக்னாவை (Mehmet Ali Ağca) மன்னித்தார். மேலும், நான் முற்றிலும் உமக்குரியவன் என்ற வார்த்தைகளுடன் மீண்டும் ஒருமுறை கன்னி மரியாளிடம் தன்னை ஒப்படைத்தார். தான் உயிர் பிழைத்ததை பாத்திமா அன்னையின் (Our Lady of Fatima) பரிந்துரையோடு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் பின்னர் தொடர்புபடுத்திக் கூறினார்.

இறைப்பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு மற்றும் கடவுள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றிற்கு அவர் பகர்ந்த சாட்சியம், இன்றும் திருஅவைக்கு ஊக்கமளிப்பதாகத் திகழ்கிறது. அண்மையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இளைஞர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்" என விடுத்த அறைகூவலில் இந்த உயரிய விழுமியங்களே மீண்டும் எதிரொலித்தன.