பசுமை ஆட்டோ குமார் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
இயற்கையோடு நெருங்கி வருவது இறைவனோடு நெருங்கி வருவதாகும்.
ஆட்டோவின் பின்புறத்தில் 'பிரசவத்திற்கு இலவசம்', 'ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18', 'வளைவில் முந்தாதே' என்றெல்லாம் எழுதி வைத்திருப்பதை வாசித்திருப்போம். ஆனால், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த முத்தையா என்ற ஆட்டோ குமாரின் ஆட்டோ ஒரு பசுமை ஆட்டோவாகவும், இயற்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஓர் ஆட்டோவாகவும் உலா வருகின்றது.
ஆட்டோ குமாரின் ஆட்டோவின் சிறப்பு என்னவென்றால், ஆட்டோவின் பின்புறம் ஓர் அறிவிப்புப் பலகையில் எப்போதும் ஒரு பொன்மொழி உலகுக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு வெப்பம் தெரியக் கூடாது என்பதற்காக ஆட்டோவின் மேற்பகுதியில் தென்னங்கீற்று ஒலை எப்போதும் இருக்கும். அது மட்டுமன்றி ஆட்டோவில் ஐந்து மரக்கன்றுகள் பயணிகளுக்குக் கொடுப்பதற்காகவே எப்போதும் தயாராக இருக்கும்.
சில நேரங்களில் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குகின்ற இவர், பயணிகளை வீட்டிலேயே இறக்கிவிட்டு, அவர்கள் அனுமதியுடன் மரக்கன்றுகளை நட்டு, அதைப் பராமரிப்பது பற்றி விளக்கமும் கொடுக்கிறார். பள்ளிக் குழந்தைகளுக்கும் மரக்கன்றுகளை வழங்கி மரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கின்றார்.
பூமியைக் குளிர்வித்து மழை பொழியச்செய்ய இவர் செய்கின்ற செயல்கள் ஒரு தன்னலமற்ற சேவையாக அமைகின்றது. ஒரு புறம் மரத்தை வெட்டுகின்றார்கள். இன்னொரு புறம் ஏழை மனிதர்கள் மரத்தை நடுகிறார்கள். ஆதலால்தான் நாம் உயிரோடு வாழ்கின்றோம்.
"ஒருவர் ஒட்டு மொத்த உலகத்தைத் தனியாளாக நின்று மாற்றிவிட முடியாது. ஆனால், ஓர் ஊரை மாற்றிவிட முடியும். எனவே என்னால் இந்த உலகத்தைத் தனியாளாக நின்று மாற்றிவிட முடியாவிட்டாலும், நான் வாழ்கின்ற சின்னாளபட்டி கிராமத்தைச் சோலைவனமாக மாற்ற முடியும்" என்பது ஆட்டோ குமாரின் நம்பிக்கை.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.