இயேசுவுக்கு உற்ற நண்பர்களாவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் - நினைவு
எரேமியா 15: 10, 16-21
யோவான் 11: 19-27
இயேசுவுக்கு உற்ற நண்பர்களாவோம்!
முதல் வாசகம்.
இன்று நேற்றைய தொடர்ச்சியாக, இறைவாக்கினர் எரேமியா, தாம்
எதிர்கொள்ளும் துன்பம், தனிமை, எதிர்ப்பு ஆகியவற்றால்
வேதனைப்படுகிறார். ஆனால் இறைவனுடைய வார்த்தையைப்
பெற்றபோது, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.
இறைவனுக்காகத் துன்புறுத்தப்பட்டாலும், அவர் இறைவனை விட்டு
விலகவில்லை என்ற தெளிவான செய்தியை அருள்கிறார்.
மேலும், எரேமியா தமது துயரத்தை இறைவனிடம் வெளிப்படையாக
எடுத்துரைத்து மன்றாடுகிறார். அதற்கு ஆண்டவர், “நீ என்னிடம்
திரும்பினால், நான் உன்னை மீண்டும் என் பணிக்குத் தகுதியானவனாக
நிறுத்துவேன்” என்று உறுதியளிக்கிறார். எதிரிகளிடமிருந்து அவரைக்
காப்பாற்றுவதாகவும் ஆண்டவர் வாக்களித்ததை அவரே பகிர்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், லாசரின் சகோதரியான மார்த்தா, தன்
சகோதரன் இறந்த துயரத்தில் இயேசுவைச் சந்திக்கிறார். இயேசு, “உன்
சகோதரன் உயிர்த்தெழுவான்” என்று கூறுகிறார். அதற்கு மார்த்தா,
இறுதிநாளில் உயிர்த்தெழுதல் உண்டு என்பதை நம்புவதாகச்
சொல்கிறார்.
அப்போது இயேசு மிக முக்கியமான உண்மையை மார்த்தாவுக்கு
வெளிப்படுத்துகிறார்: “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வும்” என்று
அறிவிக்கிறார். மேலும், தம்மில் நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்வைப்
பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறார். மார்த்தா, இயேசுவை
மெசியாவாகவும் இறைமகனாகவும் நம்பிக்கை அறிக்கையாக
ஏற்றுக்கொண்டதை யோவான் நற்செய்தியாளர் தெளிவுப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்று நாம் புனித மரியா, மார்த்தா, லாசர் ஆகிய மூவரையும்
நினைவுகூர்கிறோம். இவர்கள் இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக
இருந்தனர். பெத்தானியாவில் இருந்த இவர்களின் இல்லம், இயேசுவுக்கு
அன்பும் நட்பும் நிறைந்த இல்லமாக இருந்தது.
இன்றைய நினைவுத் திருநாளுக்கான நற்செய்தி வாசகம் ஒரு துயர
நிகழ்வுடன் தொடங்குகிறது. இயேசு மாரத்தா மற்றும் மரியாவின்
இல்லத்தை நெருங்கும்போதி அவரும் துயரத்தையே எதிர்கொள்கிறார்.
ஆனால், அந்தத் துயரத்தை நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த
இல்லமாக அவர் பின்னர் மாற்றுகிறார்.
நமக்கு இலாசரைப் பற்றி அதிகம் தெரியாது. இயேசு லாசரின்
கல்லறையை அடைந்தபோது, ஆழ்ந்த மனவேதனை அடைந்தார்:
“இயேசு கண்ணீர் விட்டு அழுதார்” (யோவான் 11:35). இது
திருவிவிலியத்தில் மிகக் குறுகிய வசனமாக இருந்தாலும், மிகவும்
ஆழமான பொருளைக் கொண்ட வசனங்களில் ஒன்றாக நாம்
எடுத்துக்கொள்ளலாம்.
மார்த்தா இயேசுவை அன்புடன் வரவேற்று பணிவிடை செய்தார். மரியா
இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்டார்.
லாசரின் மரணத்தின்போது இயேசு கண்ணீர் விட்டார். “இயேசு கண்ணீர்
விட்டார்” (யோவான் 11:35) என்ற மிகச் சிறிய வசனம், இயேசுவின்
ஆழமான மனித அன்பை வெளிப்படுத்துகிறது.
இலாசரின் மரணத்திலும் இயேசு நம்பிக்கையை ஊட்டுகிறார். “நானே
உயிர்த்தெழுதலும் வாழ்வும்” என்று கூறினார் (யோவான் 11:25). எனவே,
துன்பம், இழப்பு, ஏமாற்றம் ஆகிய நேரங்களிலும் கிறிஸ்துவின் மீது நமது
நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பது நமக்கான படிப்பினையாக
இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது.
முதல் வாசகத்தில், எரேமியா தமது துயரத்தை இறைவனிடம்
வெளிப்படையாக எடுத்துரைத்து மன்றாடியபோது, ஆண்டவர், “நீ
என்னிடம் திரும்பினால், நான் உன்னை மீண்டும் என் பணிக்குத்
தகுதியானவனாக நிறுத்துவேன்” என்று வாக்களித்தார். நமது வீடுகளும்
பெத்தானியாவில் இருந்த அந்த இல்லத்தைப் போல இயேசுவை
வரவேற்கும் இல்லங்களாக மாறப்பட வேண்டும். நமது குடும்பங்களில்
அன்பு, சேவை, இறைவார்த்தை, நம்பிக்கை ஆகியவை நிறைந்திருக்க
வேண்டும். அத்தகைய சாட்சிய வாழ்வு வாழ்வோமானால், நமது
கல்லறை மீதும் இயேசுவின் பார்வைபடும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, எனது குடும்பமும் உமது அன்பின் சாட்சிகளாக வாழ
அருள் புரிவாராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
