துணிவுடன் நமது நம்பிக்கைக்குச் சாட்சியாக வாழ்வோம். | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 21ஆம் வாரம் -திங்கள்
24 ஆகஸ்ட் 2026
புனித பர்த்தலமேயு – திருத்தூதர்-விழா
திருவெளிபாடு 21: 9b-14 யோவான்1: 45-51
முதல் வாசகம்.
இந்த வாசகப்பகுதியில் புதிய எருசலேம் என்ற தூய நகரத்தின் மாட்சியை யோவான் காண்கிறார். வானத்தூதர் ஒருவர் அவரை ஒரு பெரிய மலையின் மேல் அழைத்துச் சென்று, வானத்திலிருந்து இறங்கி வரும் தூய நகரமான எருசலேமை காட்டுகிறார்.
அந்த நகரமானது கடவுளின் மாட்சியால் ஒளிர்ந்தது என்றும், அதன் சுவர் பெரியதும் உயரமானதுமாகவும், பன்னிரண்டு வாயில்களும், வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள் என்று விவிக்கிறார்.
வாசல்களில் இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும், அடிக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததாக அவர் கண்ட காட்சியை மேலும் விவரிக்கிறார் யோவான்.
நற்செய்தி.
இன்றைய யோவான் நற்செய்தியில், பிலிப்பு, நத்தனியேலைச் சந்தித்து, மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர்களும் எழுதியவருமான இயேசுவைக் கண்டோம் என்று கூறுகிறார். ஆனால் நத்தனியேல் சந்தேகப்பட்டு, “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வருமா?” என்று கேட்கிறார்.
பிலிப்பு, “வந்து பாரும்” என்று அவரை இயேசுவிடம் அழைத்துச் செல்கிறார். இயேசு நத்தனியேலைக் கண்டு, அவருடைய உள்ளத்தை அறிந்தவராகப் பேசுகிறார். இதனால் நத்தனியேல், “நீர் இறைவனுடைய மகன்; இஸ்ரயேலின் அரசர்” என்று தன் நம்பிக்கையை அறிக்கை செய்கிறார். இயேசு, நத்தனியேல் தம்மை நம்பியதைக் காட்டிலும் இன்னும் பெரியவற்றைக் காண்பார் என்று கூறுகிறார். மேலும், வானம் திறந்து, வானதூதர்கள் மானிட மகன்மீது ஏறி இறங்குவதைக் காண்பீர்கள் என்று அறிவிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்று இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவரான புனித பர்த்தலோமேயு அவர்களின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவர் நத்தனியேல் எனவும் அழைக்கப்படுகிறார். இயேசுவைச் சந்தித்தபோது, “நீர் இறைவனுடைய மகன்; இஸ்ரயேலின் அரசர்” என்று விசுவாச அறிக்கை செய்தார் (யோவான் 1:49).
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி நூல்களிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் உள்ள சீடர்களின் பட்டியலில் பர்த்தலமேயு என்ற பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், யோவான் நற்செய்தியில் பர்த்தலமேயு என்ற பெயரே இல்லை; அதற்குப் பதிலாக நத்தனியேல் என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதை அறிகிறோம்.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இவர் பல இடங்களில் சென்று நற்செய்தியை அறிவித்தார். திருஅவை பாரம்பரியத்தின்படி, தனது விசுவாசத்திற்காக தியாகச் சாட்சியாக உயிர் நீத்தார் என்று அறிகிறோம்.
இன்றைய வாசகங்களில் ஓர் அழகான அழைப்பு நமக்குக் கிடைக்கிறது. பிலிப்பு, நத்தனியேலைச் சந்தித்து, “நாங்கள் இயேசுவைக் கண்டோம்” என்று சொல்கிறார். நத்தனியேல் சந்தேகத்துடன், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?” என்று கேட்கிறார். ஆனால் பிலிப்பு அவருடன் விவாதிக்கவில்லை; “வந்து பார்” என்று அழைக்கிறார்.
இந்த இருவர் உரையாடலில் இருந்து, நம்பிக்கை என்பது மற்றவர்களிடம் ருந்து கேள்விப்படுவதில் மட்டும் இல்லை; இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்தித்து அறிந்து கொள்வதில் உள்ளது. நத்தனியேல் இயேசுவைச் சந்தித்தபோது, தனது சந்தேகம் அவரில் நம்பிக்கையாக மாறியது. “ரபி, நீர் இறைவனுடைய மகன்; நீரே இஸ்ரயேலின் அரசர்” என்று அறிக்கையிடுகிறார்.
திருவெளிப்பாடு வாசகத்திலும், இறைவனுடைய மாட்சியில் நிறைந்த புதிய எருசலேமை யோவான் வெளிப்படுத்துகிறார். அதன் அடித்தளங்களில் திருத்தூதர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது: கிறிஸ்துவில் கட்டப்பட்ட வாழ்க்கை நிலையானது; நம்பிக்கையின் அடிக்கல்லாக, அசைக்க முடியாததொன்றாக உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.
இன்று நம்மிடமும் பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். “இறைவன் உண்மையிலேயே என்னோடு இருக்கிறாரா?” என்று நாம் கேட்கலாம். அப்போது இயேசு நம்மைத் தள்ளிவிடுவதில்லை. மாறாக, “வந்து பார்” என்று அழைக்கிறார். நாம் அவரோடு வாழும்போதுதான் அவரை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எனவேதான் பட்டும் படாமல் வாழும் கிறிஸ்தவ வாழ்வால் நாம் ஒருபோதும் ஒளிர முடியாது.
அவ்வாறே, பிலிப்புவைப் போல் பிறரை இயேசுவிடன் நாம் அழைத்துவர தயங்கக்கூடாது. அழைத்து வருவது நமது கடமை. அடுத்த செயலை தூய ஆவியார் கவனித்துக்கொள்வார். ஆகவே, இன்று நாம் இயேசுவை வெறுமனே அறிந்தவர்களாக அல்ல, அவரைச் சந்தித்தவர்களாகவும், அவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், பிறரையும் அவரிடம் அழைத்துச் செல்பவர்களாகவும் வாழ்வோம். நம்மில் இருந்து எதுவும் நல்லது வர இயலுமா? சிந்திப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, “வந்து பாரும்” என்ற பிலிப்புவின் அழைப்பு, இன்று என் வாழ்வில் பிறருக்கான அழைப்பாக மாறுவதாக, ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
