சீடத்துவம்: தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் உரியது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 26-ம் வாரம்-புதன்
30 செப்டம்பர் 2026
 
யோபு  9: 1-12, 14-16
லூக்கா 9: 57-62


 சீடத்துவம்: தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் உரியது!

முதல் வாசகம்.


முதல் வாசகத்தில்,  யோபு, கடவுளின் மாட்சியையும்  மனிதனின் சிறுமையையும் பற்றி உரைக்கறார். அவர், கடவுளானவர்  நீதியுள்ளவர் என்றும், அவருக்கு முன்பாக மனிதன் தன்னை நீதிமான் என்று நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்தவராக யோபு பேசுகிறார். தொடரந்து, கடவுள்  மிகுந்த வல்லமையுள்ளவர் என்றும்  மலைகளை அசைக்கவும், பூமியை அசைக்கவும், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தவும் அவரால் முடியும் என்கிறார்.


அடுத்து, கடவுள் செய்யும் செயல்களை மனிதனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது எற்பதோடு, அவருடைய வழிகள் மனித அறிவுக்கு எட்டாத அளவுக்கு ஆழமானவை என்கிறார்.  கடவுளோடு வழக்காட வேண்டியிருந்தாலும், அவரைப் போன்ற ஒரு மனிதனால் கடவுளுக்கு பதில் சொல்லவோ, தன் நிலையை முழுமையாக விளக்கவோ முடியாது என்பதை மேலும் விவிக்கிறார்.  

நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், இயேசுவைப் பின்பற்றுவதற்கான உண்மையான அர்ப்பணிப்பு பற்றி லூக்கா விவரிக்கிறார்,   இயேசுவைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு  இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவருக்கு உலகத்தில் நிலையான வசதிகள் அல்லது பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்த்துகிறார். ஏனெனில், இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.


முதலில் ஒருவரை இயேசு அழைக்கிறார். ஆனால் அவர் முதலில் தன் தந்தையை அடக்கம் செய்யச் செல்ல அனுமதி கேட்கிறார். இயேசு, கடவுளின் அரசை, அறிவிப்பதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வேளையில், “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

இன்னொருவர், முதலில் தன் குடும்பத்தினரிடம் விடைபெற அனுமதி கேட்கிறார். அதற்கு இயேசு, கலப்பையில் கை வைத்த பின் பின்னால் திரும்பிப் பார்ப்பவன் கடவுளின் அரசிற்கு தகுதியானவன் அல்ல என்று கூறுகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில், இயேசுவைப் பின்பற்ற விரும்பிய சிலர் தங்கள் வாழ்க்கையில் பல காரணங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் இயேசு, அவரைப் பின்பற்றுவது என்பது முழுமையான அர்ப்பணிப்புக்கு உட்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். “கலப்பையில் கை வைத்தபின் பின்னிட்டுப் பார்ப்பவன் கடவுளின் ஆட்சிக்குத் தகுதியானவன் அல்ல” என்று கூறுகிறார். ஆம், நாம் உலகில் வாழ்ந்தாலும் நாம் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல என்பது இயேசுவின் பதிலில் பிரதிபலிக்கிறது.


நற்செய்தியின் படி, ஒரு கிறிஸ்தவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்திற்குரியவராக இல்லாமல், கடவுளின் நெறிமுறைகளின்படி வாழ அழைக்கப்படுகிறார். இயேசுவும், “நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல” (யோவான் 17:16) என்றதை நாம் மறக்கலாகாது. இதனு பொருள், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உலகத்தை வெறுத்து ஓடி காடுகளில் வாழ்வது அல்ல. மாறாக, இந்த உலகத்தில் வாழ்ந்து அதை நல்வழிப்படுத்துவதாகும்.


மேலும், கிறிஸ்தவக் கோட்பாட்டின்படி, உலக வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த ஒரு கொடை. அதை நம்பிக்கையோடும், தூய்மையோடும், பிறருக்கு அன்பு செலுத்தியும் வாழ வேண்டும். உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல், ஆன்மீக இலக்கை நோக்கி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை ஆகும்.  ஆகவே, நமது முதற்பணி, உதவ வேண்டியவர்களுக்கு உதவுவது, பணிவிடை தேவைப்படுவோருக்கு பணிவிடை செய்வது. இதில், என் குடும்பம், என் பெற்றோர், எனக்கு வேண்டிய உறவுகள் என்ற வட்டத்தில் வாழ்வுது சுயநலம். இயேசு உலக இன்பங்களை, சுகபோகங்களை எதிர்ப்பார்த்து மனுவுரு எடுக்கவில்லை. இதன்பொருட்டே,  “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.


யோபுவின் துன்பத்தின் நடுவிலும், கடவுளின் மாட்சியும், வல்லமை, நீதிமை மற்றும் மனிதனின் வரம்புகள் ஆகியவற்றை அவர் உணர்கிறார். தேவனுடைய செயல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவருக்கு முன்பாக மனிதன் தாழ்மையுடன் நிற்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் முக்கிய செய்தியாகும். ஆம், கடவுள் பணி நமக்கு முதன்மை என்றால், அவரில் நம்பிக்கை வைத்து நகர வேண்டும். , “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார் இயேசு. இங்கே ‘இறந்தோர்’ என்பது கடவுளின் திட்டத்தில், நம்பிக்கை அற்றவர்களைக் குறிப்பாதகப் பொருள் கொள்ளலாம். 


கடவுளின் திட்டத்தில் பங்குபெற்று அவரது மீட்புப் பணியில் பீடுநடை போடவேண்டியவர்கள் நாம். இதில் சாக்குப் போக்குக்கு இடமில்லை. இயேசு கூறியதைப்போல், கலப்பையில் கை வைத்த பின் பின்னால் திரும்பிப் பார்ப்பவன் கடவுளின் அரசிற்கு அல்லது சீடத்துவத்திற்கு தகுதியானவன் அல்ல.  கிறிஸ்தவ சீடத்துவம் என்பது கழுத்தில் சிலுவையை அணிந்துக்கொண்டு, கிறிஸ்த பெயரை சூட்டிக்கொண்டு, “ வசதியாக இருக்கும்போது மட்டும்” இயேசுவைப் பின்பற்றுவது அல்ல; எந்தச் சூழ்நிலையிலும் அவருக்கு முதலிடம் கொடுப்பதே சீடத்துவம் என்பதை மனதில் கொள்வோம்.

இறைவேண்டல்.


ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன், உமது அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ விரும்புகிறேன்,   என்னை வழிநடத்துவீராக, ஆமென்.

 

ஆர்.கே. சாமி 

Tamil Survey Popup Image