ஆர்வம் மட்டும் அல்ல, உண்மையான தேடல் வேண்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 25-ம் வாரம்-வியாழன்
24 செப்டம்பர் 2026
சபை உரையாளர் 1: 2-11
லூக்கா 9: 7-9
ஆர்வம் மட்டும் அல்ல, உண்மையான தேடல் வேண்டும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் காணப்பட்ட இப்பாடலில், ஆசிரியர் உலகத்தின் வாழ்க்கை மற்றும் அதன் சஞ்சலங்களின் வெறுப்பை பகிர்கிறார். இப்பாடலில், "உலகம் வெறுக்கத்தக்கது" என்று கூறப்படுகிறது மற்றும் மனிதர்களின் முயற்சிகள், பணம், செல்வம் போன்றவை காலத்தால் அழியக்கூடியவை என விளக்கப்படுகிறது.
உலக வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களின் செயல்கள் மற்றும் நினைவுகள் காலத்தால் மறைந்து போய்விடும் எனப் பதிவு செய்கிறது. இப்பாடல், எதுவும் நிலையானதில்லை, உலக வாழ்க்கை மாறக்கூடியது என்பதை வலியுறுத்துகிறது. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஆகவே, வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண் என்பது பொது படிப்பினையாக உள்ளது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு செய்த அற்புதங்கள் மற்றும் போதனைகள் பற்றிய செய்தி ஆளுநர் ஏரோதுவின் காதுகளுக்கு எட்டியதால், இயேசு யார் என்பது குறித்து ஏரோது குழப்பமடைந்தார். அவருடைய கேள்விக்கு, சிலர், “யோவான் உயிர்த்தெழுந்திருக்கிறார்” என்றும், சிலர் “எலியா தோன்றியிருக்கிறார்” என்றும், வேறு சிலர் பழைய இறைவாக்கினர்களில் ஒருவர் உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றும் கூறினர்.
ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டினேனே; அப்படியானால் இவர் யார்?” என்று ஆச்சரியப்பட்டார். பின்னர், இயேசுவைக் காண அவர் விரும்பினார் என்று லூக்கா கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பற்றிய உண்மையை அறியாமல், மக்கள் பலவிதமாக அவரைச் சித்தரித்தனர் என்றும், இதனால், ஏரோதுவுக்குள் இயேசுவை நேரில் அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது என்றும் லூக்கா குறிப்பிடுகிறார்.
ஏரோதுவின் குழப்பம், இயேசுவைப் பற்றிய உண்மையை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் விருப்பத்திலிருந்து எழவில்லை; மாறாக, அது அச்சம், மற்றும் குற்றவுணர்வு ஆகிநவற்றிலிருந்து தோன்றியது. இவன் திருமுழுக்கு யோவானைக ்கொன்றவன். அந்த பாவம் அவனுடைய இருதயத்தை மிகவும் இருளடையச் செய்திருந்ததால், கிறிஸ்துவில் வெளிப்பட்ட இறையருளை அவனால் உணர முடியவில்லை.
இருப்பினும், ஏரோதுவின் உள்ளத்தில் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தின் மத்தியிலும், “அவரைக் காண அவன் தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தான்” என்று நற்செய்தி கூறுகிறது. இந்த விருப்பம், உண்மையை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தும், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பிளவுபட்ட உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் ஒருமித்துச் சிந்தித்தால், இறைவார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும் எனும் படிப்பினை மேலொங்கி உள்ளது.
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மக்களிடம் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கிறார். மக்கள் அதை ஏற்றுக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை இறைவனுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது அழைப்பாக உள்ளது. நற்செய்தியில், ஏரோது இயேசுவைப் பற்றி கேள்விப்படுகிறான். இயேசுவின் போதனைகளும் செயல்களும் அவனுடைய மனதில் கேள்வியை எழுப்புகின்றன: “இவர் யார்?” ஆனால் அந்தக் கேள்வி அவனுடைய வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவனுள் மனமாற்றம் ஏற்படவில்லை.
நாமும் அடிக்கடி இறைவார்த்தையை வாசிக்கிறோம், திருப்பலியில் அறிக்கையிடக் கேட்கிறோம், சிந்திக்கிறோம். ஆனால் இன்று நாம் “இறைவார்த்தை என் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?” என்று கேட்டால், ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலோர் மௌனமாகிவிடுவோம். சினிமா தியேட்டரில் கூட சில வசனங்கள் மனதில் தங்கும், ஆனால், ஆலயத்தில் கேட்கப்படும் இறைவார்த்தை வசனங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்துவிடுகிறது.
மன்னிக்க வேண்டியவரை மன்னிப்பது, தேவையில் இருப்பவருக்கு உதவுவது, உண்மையைப் பேசுவது, அன்புடன் வாழ்வது, இயேசுவுக்கான சாட்சிய வாழ்வு வாழ்வது போன்றவை நாம் கேட்ட இறைவார்த்தைக்கு அளிக்கும் உண்மையான பதில்கள் எனலாம். இறைவாரத்தை நம்மில் தங்கி பலன் தரும் நிலமாக நம் இதயம் இருக்கட்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது வார்த்தையை கேட்கும் காதுகளையும், அதை ஏற்றுக்கொள்ளும் இதயத்தையும், அதை வாழ்வாக்கும் துணிவையும் எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி
