இறைவனின் திருஉளம் நிறைவேற்ற ....மனம் மாற வேண்டும் | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Veritas Tamil
அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு
இன்றைய வாசகங்கள் (27.09.2026) பொதுக்காலத்தின் 26 ஆம் ஞாயிறு
மு.வா: எசே: 18: 25-28
ப.பா: திபா: 25: 4-5. 6-7. 8-9
இ.வா: பிலி: 2: 1-11
ந.வா: மத்: 21: 28-32
இறைவனின் திருஉளம் நிறைவேற்ற ....மனம் மாற வேண்டும்
இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் ஆழமாக கவனமாக வாசித்து பார்த்தோமென்றால் அது நமது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது போல தோன்றும் உண்மைதான். நாம் அவ்வாசகத்திலே சொல்லப்பட்டிருக்கிற இரு மகன்களின் குணங்களையும் பெற்றிருக்கிறோம். சில வேளையில் மூத்த மகனைப்போல செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு பின் மனம் மாறி நம்மிடம் ஒப்பபடைக்க பட்ட செயல்களை செய்வோம். சில வேளைகளில் முழு மனதோடும் பல நேரங்களில் அரைகுறை மனத்தோடும் நம் பணிகள் இருக்கும்.
அதே போல இளைய மகனைப்போல செய்கிறேன் என சொல்லிவிட்டு அசட்டைத் தனமாய் இருந்துவிடுகிறோம்.புத்தாண்டு அன்று நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் எல்லாம் இத்தகையது தான்.
ஆனால் கடவுளின் திருஉளத்தை நிறைவேற்ற நாம் கொண்டிருக்க வேண்டியது முதல் மகனின் மனநிலையோ அல்லது இரண்டாவது மகனின் மனநிலையையோ அல்ல. புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் மிகத்தெளிவாக சொல்கிறார்...."கிறிஸ்து கொண்டிருந்த மனநிலை உங்களில் இருக்கட்டும்" என்று.
கடவுளின் மீட்பு திட்டத்த நிறைவேற்ற கடவுளின் மகனான இயேசு மனிதனாய் அடிமையாய் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு தன்னை பணித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
பணிக்கு அவரே சொன்ன ஒரே பதில் செய்கிறேன் என்பதே. அதையும் அரைகுறை மனதோடு அல்ல முழுமனதோடு.
அன்புக்குரியவர்களே நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணி எதுவானாலும்....ஆன்மீகப்பணியோ அல்லது பொது வாழ்வு சார்ந்த பணியோ முழுமனதோடு செய்ய கற்று கொள்ள வேண்டும். அப்போதுதான் அப்பணி அதற்கான முழு பலனை கொடுக்கும். நம் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாமல் மனமாற்றத்தோடு வாழ முயற்சிப்போமா!
இறைவேண்டல்
இறைவா உமது திருமகன் இயேசுவின் மனநிலையோடு எங்கள் பணிகளை முழுமனத்தோடு முரண்பாடின்றி செய்திட அருள் தாரும். ஆமென்
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்
