நீதி, இரக்கம், நம்பிக்கை – சீடத்துவத்தின் அழகு. | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 21ஆம் வாரம் -செவ்வாய்
25 ஆகஸ்ட் 2026 

2 தெசலோ  2: 1-3a, 14-17
மத்தேயு  23: 23-26

நீதி, இரக்கம், நம்பிக்கை – சீடத்துவத்தின்  அழகு. 

முதல் வாசகம்.
 
இவ்வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி குழப்பமடையாமல், யாருடைய வார்த்தைகளாலும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார்.

நம்பிக்கையாளர்கள்  ஊர் உலகத்தின் செய்திகளைக் கண்டு அஞ்சவோ, லங்கவோ கூடாது என்றும்,  ஆண்டவர் நம்மை நற்செய்தியின் மூலம் அழைத்து, கிறிஸ்துவின் மாட்சியில் பங்குகொள்ளும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றும் தெசலோனிக்கத் திருஅவைக்கு பவுல் அடிகள் எடுத்துரைக்கிறார். 

நிறைவாக,  அவர்கள் கற்றுக்கொண்ட நம்பிக்கையின் போதனைகளில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும், கடவுள்  தமது அருளால் அவர்களுக்கு நிலையான ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்து, அவர்களின் இருதயங்களைத் தேற்றவும், நல்ல செயல்களிலும் வார்த்தைகளிலும் அவர்களைப் திடப்படுத்தவும் வெண்டுமாறு  பவுல் இறைவேண்டல் செய்கிறார்.

நற்செய்தி. 

இந்த வாசகத்தில், இயேசு பரிசேயர்கள் வெளிப்புற சமயச்சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நீதியும் இரக்கமும் விசுவாசமும் போன்ற முக்கியமானவற்றை புறக்கணிப்பதை கண்டிக்கிறார்.

அவர்கள் சிறிய விடயங்களைக்கூட மிகவும் கவனமாகச் செய்கிறார்கள்; ஆனால் கடவுளுக்கு மிகவும் முக்கியமான நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை பொருட்படுத்துவதில்லை, அவற்றுக்குப் பணிவதில்லை என்றும், அவர்களின் செயலை மனதில் கொண்டு, வெளிப்புற செயல்களை மட்டும் செய்வது போதாது; உள்ளத்திலும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டும் என்று இயேசு கற்பித்ததை மத்தேயு எடுத்துரைக்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் பவுல் அடிகள் நம்மை, குழப்பத்திற்கும் அச்சத்திற்கும்  இடமளிக்காமல், கிறிஸ்துவின் போதனையில் உறுதியாக இருந்து, கடவுளின் அருளிலும்  நம்பிக்கையிலும் நிலைத்திருக்க வேண்டும்  என்று அறிவுறுத்தியதை வாசித்தோம்.

அத்துடன் இன்றைய நற்செய்தியும் நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையின் உண்மையான அடித்தளம் என்ன? என்ற முக்கியமான கேள்வியை நமக்கு முன்வைக்கின்றது.
 
நற்செய்தியில் இயேசு பரிசேயர்களை கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்கள் வெளிப்புறத்தில் சமயச்சட்டங்களை மிகவும் கவனமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும்,  ஆனால் நீதி, இரக்கம், நம்பிக்கை போன்ற முக்கியமானவற்றை புறக்கணித்தார்கள் என்பதயும் சுட்டிக்காட்டி,   வெளியில் நாம் எவ்வளவு நல்லவர்களாகத் தோன்றுகிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; நமது உள்ளம் எப்படி இருக்கிறது என்பதே கடவுளுக்கு முக்கியம் என்ற செய்தி வெளிப்படுத்துகிறார். 

அன்று மட்டுமல்ல இன்றும் நம்முடைய வாழ்க்கையில் இதே நிலை இருக்கலாம். நாம் ஆலயத்திற்கு வரலாம், இறைவேண்டலில் ஆழ்ந்திருக்கலாம், சில ஆன்மீகச் செயல்களும் பக்தி முயற்சிகளும் கடைப்பிடிக்கலாம். ஆனால்   நம்மைச் சுற்றியுள்ளோர் மத்தியில்  இரக்கம் இல்லாமலும், அவர்களுக்கான  அநீதியைப் பார்த்தும் அமைதியாக இருப்போமானால், நாம் ஒருவகையில் சுயநலவாதிகள் என்பதே பொருள். ஏனெனில்,  நமது வெளிப்புற பக்திக்கும் உள்ளத்தின் நிலைக்கும் இடையே  முரண்பாடு உள்ளது. இன்றைய இரு வாசகங்களையும் ஆழ்ந்து சிந்நிந்தால் நமக்கு மூன்று முக்கிய படிப்பினைகள் வெளிப்படும். 

முதலாவது — நம்பிக்கையில் உறுதியாக இருத்தல்.

சூழ்நிலைகள் மாறினாலும், பிறர் கூறும் வார்த்தைகள் நம்மை குழப்பினாலும், கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்க வேண்டும். நல்ல நேரம் பார்ப்பதும், அர்த்தமற்ற சடங்குகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதும் முதலில் தவிர்க்க வேண்டும். புறவினத்தாரிடையே நிலவும் அர்த்தமற்ற, மூட நம்பிக்கை கொண்ட சடங்குகளைத் தொடர்வதும், பின்பற்றுவதும், கண் திருஷ்டி போக்க திருஷ்டி சுற்றி போடுவதும்,  இயேசுவில் நாம் கொண்ட நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கும் என்பது திண்ணம்.  நாம் நமது வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு எத்த்கைய நம்பிக்கை வாழ்வை விதைக்கிறோம் என்பது இன்றியமையாதது. எல்லாம் ஒன்றுதான் என்பது வேறு,  இதுதான் நம் நம்பிக்கை என்று வாழ்வது வேறு. 

இரண்டாவது — நீதியையும் இரக்கத்தையும் வாழ்வாக்க வேண்டும். 

நமது பக்தியானது  வாரம் ஒருமுறை ஆலயத்திலும் மட்டும் வெளிப்படுவது பொருளற்றது. குடும்பத்தில், பணியிடத்தில், சமூகத்தில் நாம் காட்டும் அன்பிலும் மன்னிப்பிலும் உதவியிலும் அது வெளிப்பட வேண்டும். 

மூன்றாவது — நமது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல். 

வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், பொறாமை, கோபம், அகந்தை, வெறுப்பு போன்றவற்றிலிருந்து நமது இதயத்தை ஆண்டவர் தூய்மைப்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டிலில் ஒன்றுமாக நமது நம்பிக்கை இருந்தால் அது ஆபத்தானது.

ஆண்டவர், நம்மிடமிருந்து வெறும் வெளிப்புறச் சடங்குகளையோ உடை அலங்காரத்தையோ, வேறு வகை ஆடம்பரங்களையோ எதிர்பார்ப்பதில்லை. அன்பு நிறைந்த இதயத்தையும், நீதியுள்ள வாழ்க்கையையும், நிலைபெயரா நம்பிக்கையையும் எதிர்பார்க்கிறார் என்பதை நினைவில் நிறுத்துவோம். புயல் அடித்தாலும் ஆழ வேரூன்றிய மரம் நிலைபெயராது. 

இறைவேண்டல்.
 
ஆண்டவரே,  என் நம்பிக்கையை  உறுதிப்படுத்தி,  நீதி, இரக்கம், அன்பு ஆகியவற்றை என் வாழ்வில் செயல்படுத்த  என் இதயத்தை உமது அருளால் நிரப்புவீராக. ஆமென்.
  
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image