மிரி மறைமாவட்ட இளைஞர் நாள் 2026 882 இளைஞர்கள் பங்கேற்பு | Veritas Tamil
மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மிரி மறைமாவட்டத்தில், ஆகஸ்ட் 28 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற மிரி இளைஞர் நாள் 2026 நிகழ்வில் 14 பங்குகளைச் சேர்ந்த 882 இளம் கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வு செபம், மறைக்கல்வி, ஆன்மீக உருவாக்கம் மற்றும் சமூகச் செயல்பாடுகள் வழியாக இளைஞர்களின் நம்பிக்கையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தியது.
“துணிவுடன் இருங்கள்; நான் உலகை வென்றுவிட்டேன்” (யோவான் 16:33) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, கிறிஸ்துவுடனான உறவை ஆழப்படுத்தவும், தங்களது அழைப்பைத் தேர்ந்து தெளியவும், திருஅவையின் மீதான அர்ப்பணிப்பில் வளரவும் இளைஞர்களை ஊக்குவித்தது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி திருப்பலியுடன் நிகழ்வு தொடங்கியது. முந்தைய இளைஞர் நாள் நிகழ்வை நடத்திய லாப்போக் பங்கிலிருந்து, 2026 நிகழ்வை நடத்தும் புனித தோமினிக் மற்றும் செபமாலை அன்னை பங்கிற்கு மிரி இளைஞர் நாள் சிலுவை ஒப்படைக்கப்பட்டது. 14 பங்குகளின் கொடிகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன. அவை பல்வேறு பங்குகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரே மறைமாவட்டத் திருஅவையாக ஒன்றிணைந்திருப்பதை வெளிப்படுத்தின.
ஆகஸ்ட் 29ஆம் தேதி உருவாக்க நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பலியைத் தொடர்ந்து, அருள்பணி சில்வெஸ்டர் ங்காவ் அவர்கள் “ஆழத்திற்குச் செல்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றி, மேலோட்டமான நம்பிக்கையைக் கடந்து கிறிஸ்துவில் ஆழமான நம்பிக்கை வைக்கவும், இறைவனின் அழைப்புக்குத் திறந்த மனதுடன் இருக்கவும் இளைஞர்களை ஊக்குவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இறையழைப்பு, பணியாளர் தலைமைத்துவம் மற்றும் தாய்சே சமூகத்தின் செப மரபு குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. திருத்தொண்டர் ஜோயல் ரூட், குறிப்பாக குருத்துவ அழைப்பைக் குறித்து எடுத்துரைத்து, இறைவனின் அழைப்பை செபத்துடன் தேர்ந்து தெளிய இளைஞர்களை ஊக்குவித்தார். அருட்சகோதரி டெலிசியா குளூமாய், கிறிஸ்தவத் தலைமைத்துவம் அதிகாரம் அல்லது பதவியை அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, சேவையை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்தினார்.
அன்றைய மாலை, இளைஞர்கள் தாய்சே செபத்திலும் நற்கருணை ஆராதனையிலும் பங்கேற்றனர். அமைதி, செபம் மற்றும் பாடல்கள் வழியாக தங்களது வாழ்க்கை, நம்பிக்கைகள் மற்றும் இறைவனிடம் முன்வைக்க வேண்டிய வேண்டுதல்கள் குறித்து சிந்திக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி “இறைவனுக்கான அன்புக் கடிதம்” என்ற தனிப்பட்ட சிந்தனை நிகழ்வுடன் நாள் தொடங்கியது. இதில் இளைஞர்கள் தங்களது நன்றிகள், நம்பிக்கைகள் மற்றும் செபங்களை இறைவனிடம் கடிதமாக எழுதினர். பின்னர் மிரி மறைமாவட்ட ஆயர் ரிச்சர்ட் ங் அவர்கள் தலைமையில் ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் ஆயர் இளைஞர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாலையில் “சிலுவையின் கொண்டாட்டம்” எனப்படும் Pesta Salib நிகழ்வு நடைபெற்றது. புனித யோசேப்பு பேராலயத்திலிருந்து சிலுவை, புனித தோமினிக் மற்றும் செபமாலை அன்னை பங்கிற்கு ஒப்படைக்கப்பட்டு, 14 பங்குகளின் கொடிகளுடன் சிலுவைப் பவனி நடைபெற்றது. பல்வேறு பங்குகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரே சிலுவையின் கீழ் ஒன்றிணைந்து பயணிப்பதை இப்பவனி எடுத்துக்காட்டியது.
புகழ்பாடல் மற்றும் ஆராதனையைத் தொடர்ந்து, கிறிஸ்துவுக்கான தங்களது அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கும் வகையில் செபிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆயர் ரிச்சர்ட்ங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலி மற்றும் இளைஞர்களின் அர்ப்பணிப்பு நிகழ்வுடன் மிரி இளைஞர் நாள் 2026 நிறைவடைந்தது. அதேவேளை, அடுத்த மறைமாவட்ட இளைஞர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளும் தொடங்கின. 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மிரி இளைஞர் நாள் நிகழ்வை சுங்காய் ஆசாப் பகுதியில் உள்ள புனித சிலுவை பங்கு நடத்தும் என அறிவிக்கப்பட்டது.
செபம், ஆன்மீக உருவாக்கம், சகோதரத்துவம் மற்றும் சிந்தனை ஆகியவற்றின் வழியாக மிரி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இளம் கத்தோலிக்கர்களை ஒன்றிணைத்த இந்நிகழ்வு, சிலுவையை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்து, 2028ஆம் ஆண்டை நோக்கிய இளைஞர்களின் மறைமாவட்டப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது.
