நம்மில் பணிந்தவன் உயர்வான் | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 20ஆம் வாரம் -சனி
22 ஆகஸ்ட் 2026 
எசேக்கியேல்  43: 1-7ab
மத்தேயு 23: 1-12

‘நம்மில் பணிந்தவன் உயர்வான்’

முதல் வாசகம். 

எசேக்கியேல் இறைவாக்கினர் பாபிலோனிய நாடுகடத்தலில் இருந்த காலத்தில் இந்த காட்சி அவருக்கு அருளப்படுகிறது.  இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களினால் எருசலேம் அழிக்கப்பட்டு, ஆலயமும் இடிக்கப்பட்டு, தங்கள் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தனர். இதனால், “இறைவன் நம்மை விட்டு விலகிவிட்டாரா?” என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருந்தது.

இன்று, இறைவனுடைய மாட்சி ஆலயத்தை விட்டு விலகிச் சென்றதாக எசேக்கியேல் கண்டித்து வந்தார்.  இப்போது அதே இறைவனுடைய மாட்சியானது மீண்டும் ஆலயத்திற்குள் திரும்பி வருவதைக் காட்சியாகக் கண்டதை விவரிக்கிறார். 
காட்சியில் எருசலேம் ஆலயத்தின் கிழக்கு வாயில் வழியாக ஆண்டவரின் மாட்சியானது வரும்போது, கடவுளின் உடனிருப்பால் ஆலயம் நிறைகிறது. இது விரைவில், நாடுகடத்தலுக்குப் பிறகு இறைவன் தமது மக்களை மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடையே மீண்டும் குடியிருக்கிறார் என்பதற்கான நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது.
மேலும், “மானிடா! இது என் அரியணையின் இடம்; என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன்.”என்று ஆண்டவர் கூறுகிறார். எனவே, இந்த வாசகம் வெறும் ஆலயத்தைப் பற்றிய காட்சி மட்டுமல்ல; மனந்திரும்புதல், இறைவனின் உடனிருப்பு, மீட்பு மற்றும் புதிய வாழ்வு ஆகியவற்றை அறிவிக்கும் நம்பிக்கையின் செய்தியாக உள்ளது.

 நற்செய்தி.

இந்த வாசகத்தில், இயேசு பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களுக்குச் சட்டங்களைக் கற்பித்தாலும், அவர்கள் சொல்வதைத் தாங்களே கடைப்பிடிக்கவில்லை என்று எச்சரிக்கிறார்.
அவர்கள் பிறர்மீது கடினமான சுமைகளைச் சுமத்தினார்கள்; ஆனால் தாங்களோ அவற்றைச் செய்ய முன்வரவில்லை. மேலும், மக்கள் தங்களைப் பெரியவர்களாகவும் மதிப்புக்குரியவர்களாகவும் கருத வேண்டும் என்பதற்காக வெளிப்படையான சமயச் சடங்குகளை நிறைவேற்றுகிறாரகள் என்று வெளிப்படையாக விவரிக்கிறார்.

இயேசு தம் சீடர்களிடம் பரிசேயர்கள்,  மறைநூல் அறிஞர்கள் போலன்றி  தாழ்மையுடன் வாழ வேண்டும் என்றும், மனிதர்களிடமிருந்து பட்டங்களையும் புகழையும் தேடக்கூடாது என்றும் கூறுகிறார். உண்மையான தலைமை என்பது மற்றவர்களைவிட உயர்ந்திருப்பது அல்ல; மற்றவர்களுக்குச் சேவை செய்வதே என்று கற்பிக்கிறார்.

சிந்தனைக்கு.

“உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்” என்ற அறைகூவலோடு இயேசு இன்றைய நற்செய்திப் பக்தியை நிறைவு செய்கிறார். 

இங்கே “பெரியவர்” என்று இயேசு குறிப்பிட்டு சொல்வது,  அதிகாரம், பதவி, செல்வம் அல்லது புகழ் கொண்டவர் என்று பொருள்படாது.   நமது இயல்பில்  பெரியவர் என்றால் மற்றவர்கள் தமக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். ஆனால் இயேசுவின் பார்வையில், பெரியவர் என்பவர் மற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்களின் தேவைகளை கவனித்து, அன்புடன் சேவை செய்பவராவார்.

இந்த அழைப்பின் வாயிலாக  இயேசு நமக்கு மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்:
1.    தாழ்மை — நாம் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பெருமை கொள்ளக்கூடாது. 
2.    சேவை — பிறர் நமக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, நாம் பிறருக்குச் சேவை செய்ய வேண்டும். 
3.    அன்பு — உண்மையான தலைமை என்பது அதிகாரம் செலுத்துவது அல்ல; அன்புடன் பிறரை உயர்த்துவது. 

ஆகவே, ‘பெரியவர்’ என்பதற்கு உலகப் பார்வையில் நாம் பொருள் கொள்ளாமல், நாம் பெரியவ்கள் என்று கருதப்பட வேண்டுமானால்,  மற்றவர்களை நமக்குக் கீழே வைக்காமல்  அவர்களுக்காக, அவர்களோடு  தாழ்மையுடன் பணி  செய்ய வேண்டும். 

‘பணிந்தவன் உயர்வான்’, ‘குனிந்த மரமே காய்க்கும்’ என்பது போல நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் போது நாம் உயர்த்தப்படுவோம். கடவுளை ஆலயத்தில் மட்டும் காண முயற்சிப்பது தவறு,  நம் இதயமும் இறைவன் தங்கும் இடமாக இருக்க வேண்டும். நம்முடைய உள்ளத்தில் இறைவனுக்கு இடம் கொடுக்கும்போது, நம் வாழ்க்கையும் அவருடைய மாட்சியை வெளிப்படுத்தும் நமது இதயம் தாழ்ச்சியால் நிரப்பப்படும்.

நற்செய்தியில் இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் சுட்டிக்காட்டி, அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள்; ஆனால் அவர்கள் செய்வதைப் பின்பற்றாதீர்கள் என்று கூறுகிறார். ஏனெனில் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடு கொண்டிருந்தார்கள். பிறருக்கு நல்லவற்றைக் கற்பித்தாலும், தாங்கள் அதை வாழ்ந்து காட்டவில்லை. எனவேதான் இயேசு அவரது சீடத்துவத்திற்கான வாழ்வை வேறுபடுத்திக் காட்டுகிறார். 
  
எனவே, நாம் குடும்பத்திலும், பணியிடத்திலும், திருஅவையிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும், “என்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும்” என்று எதிர்பார்ப்பதைவிட, “நான் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?” என்று சிந்திப்போம்.  நான் பிறரிடம் எதிர்பார்ப்பதை நானே என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேனா? என்ற கேள்வியை மனக்கண்முன் வைப்போம்.

இறைவேண்டல்.
என் ஆண்டவராகிய இயேசுவே, என் இதயத்தில் குடியிருந்து, பெருமையை அகற்றி, பணிவையும் அன்பையும் நிரப்புவீராக. நான் பதவி அல்லது புகழுக்காக அல்ல, அன்பினால் சேவை செய்யும் உண்மையான சீடராகத் திகழ அருள் புரிவீராக. ஆமென்.
     


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image