முழு உள்ளத்தோடு நம்புவோருக்கு நிலைவாழ்வு தடையில்லை | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பாஸ்கா3-ம் வாரம் – வியாழன்
தி.பணிகள் 8: 26-40
யோவான் 6: 44-51
முழு உள்ளத்தோடு நம்புவோருக்கு நிலைவாழ்வு தடையில்லை.
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் தான் வாசிப்பதன் பொருளை உணர்ந்து கொள்ளாத எத்தியோப்பிய அமைச்சர், திருத்தொண்டர் பிலிப்புடன் தன்னை இணைத்துக் கொண்டதால், அவருக்குச் செவிகொடுப்பதால் வாசிப்பதன் பொருளை உணர்ந்துகொள்கின்றார். அந்த நிதியமைச்சர் ஓர் அலி (திருநங்கை)
ஆம், ஓர் இறைத்தூதரால் பிலிப்பு எனும் திருத்தொண்டர் பாலைநிலைப் பாதைக்கு அழைக்கப்படுகிறார். அங்கே எத்தியோப்பிய அரசியின் அதிகாரி (நிதி பொறுப்பாளர்) தேரில் அமர்ந்தபடி ஏசாயா இறைவாக்கினர் நூலை வாசித்து கொண்டிருக்கக் காண்கிறார். தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, பிலிப்பு அவரிடம் சென்று, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று பதில் அளிக்கிறார்.
அவர் எசாயாவின் வாசகப் பகுதியை விளக்கி, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறார். அந்த அதிகாரி இயேசுவில் நம்பிக்கைக்கொண்டு, பின்னர் தண்ணீர் இருந்த ஓர் இடத்தில் திருமுழுக்குப் பெற்ற நிகழ்வை யோவான் விவரிக்கிறார்.
நற்செய்தி.
நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியை இன்று வாசிக்கிறோம். இன்றைய பகுதியில், இயேசு நம்பிக்கை என்பது மனித முயற்சியால் மட்டும் கிடைப்பதல்ல; அது கடவுளின் அருளால் வருகிறது என்று வலியுறுத்துகிறார். நம்முடைய உள்ளத்தில் நல்லதை நாடும் எண்ணமும், உண்மையைத் தேடும் மனமும் தந்தை விடுக்கும் அழைப்பு என்கிறார். மேலும் இயேசு கிறிஸ்துவின் இரு முக்கிய வாக்குறுதிகளை இங்கே மீண்டும் வாசிக்கிறோம். அவை:
1 “என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்”
2 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
கடவுளுடனான நமது உறவை வலுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது புரிந்துகொள்ள வேண்டிய ஓர இன்றியமையாத ஆன்மீகக் கொள்கையை மேற்கண்ட பகுதி வெளிப்படுத்துகிறது. நம்பிக்கை என்பது கடவுளின் அழைப்பை ஏற்பதால் நமக்கு வழங்கப்படும் கொடை. தந்தையாம் கடவுள் திருமுழுக்கால் நிலைவாழ்வுக்கு இயேசுவின் வழியாக அழைக்கிறார்.
சற்று ஆழந்து சிந்தித்தால், இந்த இறை நம்பிக்கை கோட்பாடு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நம்பிக்கை என்பது விண்ணக வாழ்வை அடைவதற்கான அழைப்பு. அந்த விண்ணக வாழ்வு என்பது நாம் இறந்தப் பிறகு தொடங்கும் ஒன்றல்ல. திருமுழுக்கால் அவ்வாழ்வை இந்த மண்ணுலகிலேயே தொடங்குகிறோம். மேலும், விண்ணுலக வாழ்வின் முன்சுவையாக இயேசு வழங்கியதே ‘நற்கருணை’
எனவே, திருப்பலியில் நாம் பங்கேற்பது, கடவுளைத் திருப்திப்படுத்த அல்ல. மாறாக, நிலைவாழ்வை அடைவதற்கு நமக்குத் தேவையான ஆன்மீக உணவாக, தம்முடைய ஒரே மகனாகிய இயேசுவின் திருவுடல், திருஇரத்தம், ஆன்மா மற்றும் தெய்வீகத்தை நமக்கு வழங்கும் தந்தைக்கு நாம் காட்டும் அன்பு செயலாகும். எனவே, திருப்பலியில் நமது அலட்சியம் கூடாது. திருப்பலியில் நாம் கடவுளை மாட்சிபடுத்துகிறோம், அவர் நம்மைப் புனிதப்படுத்துகிறார். இந்தப் புனிதம் நமது நிலைவாழ்வுக்கு வழிவகுக்கிறது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, மனுக்குலம் இழந்த நிலைவாழ்வை எங்களுக்கு மீண்டும் பெற்றுத் தந்ததிற்கு உமக்கு நன்றி நவில்கிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452