இறைவனே நம் அடைக்கலமும் பலமும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 15ஆம் வாரம் – செவ்வாய்
எசாயா  7: 1-9
மத்தேயு  11: 20-24

இறைவனே நம் அடைக்கலமும் பலமும்!

முதல் வாசகம்.

யூதாவின் அரசனான ஆகாசு ஆட்சிக்காலத்தில், இரு அன்னிய
அரசர்களான சிரியா நாட்டு அரசன் இரட்சினும் வடநாடான
இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் போர்
தொடுக்க விழைந்தனர்.

இதனால் ஆகாசும் யூதா மக்களும் அச்சத்தில் நடுங்குகின்றனர்.
அச்சூழலில் எசாயாவை இறைவன் அனுப்பி, "அஞ்சாதே; மனம்
தளராதே" என்று அரசனுக்கு ஆறுதல் கூறுகிறார். எதிரிகளின் திட்டம்
நிறைவேறாது; அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று இறைவன்
உறுதியளிக்கிறார். இறுதியாக, "நீங்கள் உறுதியான நம்பிக்கையோடு
நிலைத்திருக்காவிட்டால், நிலைத்து நிற்கமாட்டீர்கள்" என்றும் இறைவன்
அவர்களை எசாயா மூலம் எச்சரிக்கிறார்.

நற்செய்தி.

இந்த நற்செய்திப் பகுதியில், இயேசு தாம் பல வல்ல செயல்களைச்
செய்திருந்தும் மனம் திருந்தாத நகரங்களான கொராசின், பெத்சாயிதா,
கப்பர்நாகூம் ஆகியவற்றைக் கண்டிக்கிறார். அவர்கள் இறைவனின்

அருளையும் அடையாளங்களையும் கண்டும் மனந்திரும்பவில்லை. அதே
அற்புதங்கள் தீர், சீதோன், சோதோம் போன்ற புறவினத்தார் நகரங்களில்
நிகழ்ந்திருந்தால், அவர்கள் மனம் திருந்தியிருப்பார்கள் என்று இயேசு
கூறுகிறார்.

எனவே, தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட
உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களும் கடவுளின் தயவில் நம்பிக்கை வைக்க
அழைக்கின்றன. இறைவனிடமிருந்து அதிக அருளையும்
வாய்ப்புகளையும் பெற்றவர்கள் அதற்கேற்ப பதிலளிக்க வேண்டும்
என்பதையும், மனமாற்றமின்றி வாழ்வது கடவுளின் தீர்ப்பிற்கு
வழிவகுக்கும் என்பதையும் இயேசு வலியுறுத்துகிறார். குறிப்பாக, முதல்
வாசகத்தில் எதிரிகளைக் கண்டு அஞ்சுவதற்குப் பதிலாக கடவுளின்
தயவிலும் இரக்கத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற் படிப்பினை
வேரைன்றியுள்ளது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது
இங்கே தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
\இறைவன் தம் மக்களைப் பாதுகாக்கிறார். அச்சம் அல்லது மனித
வலிமையை அல்ல, இறைவன்மீது உறுதியான நம்பிக்கையையே நாம்
கொண்டிருக்க வேண்டும். ‘

அடையாத கதவிருக்கும்
ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும்
அவனிடத்திலே

மகளே(மகனே) உன் மனக் குறையை
அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு.. என்ற பாடல் வரிகள் நமக்குக் கடவுளின் மேல் முழு
நம்பிக்கை வைக்கவும் அவரை நம்பியிருக்கவும் ஊக்குவிக்கிறது.

நற்செய்திகளில், சில வேளைகளில் இயேசு மென்மையாகவும்,
ஆறுதலளிப்பவராகவும், இரக்கமுள்ளவராகவும் காணப்பட்டார். வேறு
சில வேளைகளில் அவர் கடிந்தும் பேசினார். சில சமயங்களில் அவர்
அடையாளங்களையும் வல்ல செயல்களையும் செய்யாமல் இருந்தார்;
மற்ற சில சமயங்களில் மக்கள்மேல் ஏராளமான அற்புதங்களை
அருளினார்.

இன்று, கலிலேயா கடலின் வடகரையில் அமைந்திருந்த மூன்று
நகரங்களின் மக்களை இயேசு கடிந்துகொண்டதை மத்தேயு
குறிப்பிடிருந்தார் இந்நகரங்கள் அனைத்தும் அவருடைய பொது
ஊழியத்தின் முக்கிய மையங்களாக இருந்தன. கப்பர்நாகூம் அவருடைய
பணியின் தலைமையிடமாக இருந்தது; கொராசீன் மற்றும் பெத்சாயிதா
ஆகிய நகரங்களுக்கும் அவர் அடிக்கடி சென்று மக்களுக்குப் போதித்தும்,
பணியாற்றியும் வந்தார்.

இருப்பினும், அவர் இடைவிடாது இறையாட்சிப் போதித்தும், எண்ணற்ற
வல்ல செயல்களைச் செய்தும், மிகச் சிலரே மனந்திரும்பினர்.
மனந்திரும்புதலே அவரது பணி நோக்கத்தின் மையமாக இருந்தது.
எனவே, “உங்களுக்கு ஐயோ!” என்று அவர்களைக் கடிந்துகொண்டதன்
மூலம், அவர்கள் அலட்சியமான ஆன்மிக நிலையிலிருந்து
விழித்தெழும்பவும், மனந்திரும்பி, தாமும் தமது தந்தையும் அளிக்க
ஆவலாயிருந்த அளவற்ற இரக்கத்தைப் பெறவும், இயேசு அன்போடு
அவர்களைத் தூண்டினார். அந்த நேரத்தில், அந்த நகரங்களுக்கு

தேவையான அன்பின் மிகச் சரியான வெளிப்பாடாகவே இந்தக்
கடிந்துரைத்தலை நாம் பார்க்க வேண்டும்.

இறைவேண்டல்.

அன்பின் இயேசுவே, என் வாழ்வில் நீர் அளிக்கும் எண்ணற்ற
அருள்களையும் வாய்ப்புகளையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளும்
மனதையும், உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, உம்மை
மாட்சிபடுத்தும் மனத்திடனையும் எனக்கு அருள்வீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image