துணிந்து நில், தொடர்ந்து செல்! துணிவே சாட்சியம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா 2ஆம் வாரம் – வியாழன்
 
தி.பணிகள்    5: 27-33
யோவான்  3: 31-36


 துணிந்து நில், தொடர்ந்து செல்! துணிவே சாட்சியம்!
 
 முதல் வாசகம்.
 
நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய வாசகத்தில்,   புனித பேதுருவின்  மற்ற துரத்தூதர்களின் துணிவைக் காண்கிறோம்.  இயேசுவின் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க அவர்கள் ஆலயத்திற்குத் திரும்பியது மட்டுமல்லாமல், தலைமைச் சங்கத்தார் தடை செய்த இயேசுவின் திருப்பெயரை உயிர் மூச்செனக் கருதி  பெருமையுடன் அறிவிக்கிறார்கள். 

கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது, மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை விட முக்கியமானது என்றும், தலைமைச் சங்கத்தார் சமய  அதிகாரிகளாக இருந்தாலும் கூட. இயேசு பாவ மன்னிப்புக்காக இறந்து உயிர்த்தெழுந்தார் என்று சாட்சியமளிப்பது திருத்தூதர்களுக்கும் சீடர்களும் மட்டுமல்ல; தூய ஆவியானவரும் உடனிருந்து  சாட்சியமளிக்கிறார் என்று லூக்கா விவரிக்கிறார். 

நற்செய்தி.

இந்த பகுதியில், இயேசுவின் உயர் நிலையையும்  அவரை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுவதை அறிகிறோம். குறிப்பாக வசனம் 31-ல், இயேசு “மேலிருந்து வருகிறவர்” என்று சொல்லப்படுகிறது. அவர் கடவுளிடமிருந்து வந்தவர்; ஆகவே எல்லாருக்கும் மேலானவர். உலகத்திலிருந்து வரும் மனிதர்கள் உலக விடயங்களையே பேசுகிறார்கள், ஆனால் இயேசுவோ விண்ணக உண்மைகளை அறிவிக்கிறார்.

உலக மக்களில் யார் இயேசுவின் விண்ணக சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் இயேசுவை ஏற்குவது தந்தையாகிய கடவுளை ஏற்பதாகும் என்ற பேருண்மை இங்கே வலியுறுத்தப்படுகிறது. தந்தை மகனை அன்பு செய்கிறார்; எல்லாவற்றையும் அவருடைய கைகளில் ஒப்படைத்துள்ளார். இதன் மூலம் இயேசுவின் தெய்வீக அதிகாரம் வெளிப்படுகிறது என்றும், மகனில் நம்பிக்கை கொள்பவன் நிலைவாழ்வை அடைவான். ஆனால் மகனாகிய இயேசுவை நிராகரிப்பவன் நிலைவாழ்வை காணமாட்டான் என்ற படிப்பினையை யோவான் முன்வைக்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்கள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையான உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம்முடன் இருப்பார்; நாமும் அவருடைய சாட்சிகளாக வாழ வேண்டும் என்பதை  நினைவூட்டுகின்றன.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் துணிவுடன்  “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? ” என்று குரல் எழுப்பினர்.
அவர்கள் உலகோருக்கு அஞ்சவில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவை அனுபவித்தவர்கள். அவர்கள் முன்பு தொடை நடுங்கிகளாக   இருந்தார்கள். ஆனால் உயிர்த்தெழுந்த ஆண்டவரைச் சந்தித்தபின், துணிவு அவர்களை ஆட்கொண்டது. துணிவுமிகு சாட்சிகளாக மாறினர்.

ஆம், இத்தகையத் துணிவு நமக்கு வேண்டுமெனில்,  நாம் கிறிஸ்துவை வெறும் அறிவாகத் தெரிந்தவர்களாக இருப்பதைவிடுத்து அவரை அனுதினம் அனுபவிப்பவர்களாக  மாற வேண்டும். அவரில் வாழ்தலே இன்றியமையாத ஒன்றிப்பு. இதனை வலியுறுத்தியே,  “நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” (யோவான் 15:5) என்றார். 

மேலும், இயேசு மீது நம்பிக்கை வைத்தவர் நிலைவாழ்வுக்கு உரியவராவார்.  நம்பிக்கை என்பது வெறும் சொல் அல்ல; அது வாழ்வில் உண்மையாக எச்சூழலிலும் வெளிப்பட வேண்டியதொன்று.

உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு துணிவைக் கொடையாக அளிக்கிறார். இதனிமித்தம்,  “நீங்களும் என் சாட்சிகளாக இருங்கள்” என்று பணிக்கிறார். கடவுள் மீதான நம்பிக்கை என்பது, அவருக்குச் செவிகொடுப்பது, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது மற்றும் நமது அன்றாடச் செயல்களில் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வெளிப்படுவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது


எனவே, என்றும
•    உண்மைக்காக நிற்போம் 
•    கடவுளுக்குக் கீழ்ப்படிவோம் 
•    நம் வாழ்வால் கிறிஸ்துவை அறிவிப்போம்

இறைவேண்டல்.

ஆண்டவரே, என் வாழ்வு எப்போதும் உமது உயிர்ப்பில் மையமிட்டிருக்க எனக்கு அருள்தாரும். ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452