திருத்தூதர் மத்தேயு நம் முன் மாதிரியா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா 
I: எபே:  4: 1-7, 11-13
II: திபா: 19: 1-2. 3-4
III: மத்: 9: 9-13

இந்த நம் தாய்த்திருஅவையோடு இணைந்து திருத்தூதரும் நற்செய்தியாளருமாகிய  புனித மத்தேயுவின் திருவிழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம்.  மத்தேயு  என்ற சொல்லுக்கு "யாவேயின் அருங்கொடை "என்று பொருள் . இவர் தனது பெயருக்கேற்ற வாழ்வை ஆண்டவர் இயேசுவின் அழைப்பைப் பெற்ற     பிறகு வாழ்ந்தார். ஆண்டவர் இயேசு மத்தேயுவை  அழைத்தபோது சுங்கச்சாவடியில் சுங்கவரி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் வரி வசூல் செய்பவர்கள் பாவிகளாகக் கருதப்பட்டனர். இருந்தபோதிலும் இயேசு மத்தேயுவை அழைத்து அவரின் சீடராக ஏற்றுக் கொண்டார். இயேசுவின் அழைப்பை உணர்ந்த மத்தேயு அவருக்கு பெரியதொரு விருந்து வைத்தார். இயேசு அவர் வீட்டில் உணவு உண்பதைக்  கண்ட பரிசேயர்களால்  இந்த செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஆண்டவர் இயேசு இவற்றைப்  பொருட்படுத்தாமல் பாவியாகிய மத்தேயுவை அன்பு செய்தார். அவருக்கு புதுவாழ்வு வழங்கி தூய இறையாட்சிப் பணியைச் செய்யத் திருத்தூதர் என்கின்ற  சிறப்பு அங்கீகாரம் கொடுத்தார்.

மனமாற்றம் பெற்று இயேசுவின் அழைப்பை பெற்ற மத்தேயு தன் அழைத்தல் வாழ்வில் நிலைத்திருந்தார். யாவேயின் அருங்கொடையாக இருந்து இயேசுவின் உண்மைச் சீடராக வாழ்ந்தார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி பணியில் தான் நேரில் கண்டவை, கேட்டவை மற்ற திருத்தூதர்களுக்கு போதித்தவை ஆகிய அனைத்தையும் தன் மனதில் வைத்து இயேசுவின் வரலாற்றை ஒரு நற்செய்தியாக எழுதியுள்ளார். அந்த அளவிற்கு இயேசுவோடு இணைந்து வாழ்ந்தார்.

மத்தேயு நற்செய்தியாளர் யூதமறையிலிருந்து கிறிஸ்தவ மறைக்கு திரும்பிய யூதக்கிறிஸ்தவர்களுக்காகத் தனது நற்செய்தியை எழுதினார். யூதத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய  யூதர்களுக்கு ஒருவகையான மனக்குழப்பம் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப்பிறகு இருந்தது . இத்தகையச் சூழலில் இயேசு தான் உண்மையான மெசியா என்பதை விளக்கும் விதமாக அவர் நற்செய்தி எழுதியுள்ளார். இவர் எழுதிய இந்த நற்செய்தி யூதக் கிறிஸ்தவர்களுக்கு இறைநம்பிக்கையைக் கொடுக்கக்கூடியதாக இருந்தது.  இது யூதக் கிறிஸ்தவர்கள் மீது நற்செய்தியாளர் மத்தேயு  கொண்ட அளவுகடந்த அன்பினை சுட்டிக்காட்டுகின்றது. யூதர்கள் அனைவரும் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளின்படி   நடக்கவும் அனைத்து யூதர்களும் மீட்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நற்செய்தியை எழுதியுள்ளார். கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு என்பதைச் சுட்டிக் காட்டுவதன் வழியாக திருச்சட்டத்தை கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற பின்னணியிலும் இந்த நற்செய்தியானது எழுதப்பட்டுள்ளது. இதன் மூலமாக யூதக் கிறிஸ்தவர்களும் யூதர் அல்லாத பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் திருச்சட்டத்தின் படி வாழ  நற்செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார். இது கிறிஸ்தவர்கள் அனைவரும் மீதும் அவர் கொண்டிருந்த அன்பினைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. 

ஒரு சமயத்தில் பாவியாக சுயநலத்தோடு வாழ்ந்த மத்தேயு இயேசுவின் அழைப்பை பெற்றபிறகு இயேசுவின் உண்மைச் சீடராக மாறினார். இயேசுவிடம் தான் கண்டதையும் அனுபவித்ததையும் நற்செய்தி நூலாக எழுதி எல்லா கிறிஸ்தவர்களையும் இறைநம்பிக்கையில் திடப்படுத்தினார்.

புனித மத்தேயுவின் திருவிழா நாளில் அவரின் பண்புகளை வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவின் அழைப்பை பெறுகின்றோம். வரி வசூலிப்பதன் வழியாக பாவியாய் வாழ்ந்த புனித மத்தேயு இயேசுவின் அழைப்பை பெற்றபிறகு மிகச்சிறந்த உண்மை சீடராகவும் நற்செய்தியாளகவும் மாறினார். அதேபோல திருமுழுக்கின் வழியாக இயேசுவின் அழைப்பை பெற்றுள்ள கிறிஸ்தவர்களாகிய நாமும் அந்த அழைப்பில் நிலைத்திருந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.

மத்தேயு தன்னுடைய அனுபவத்தை நற்செய்தியாக எழுதி கிறிஸ்தவர்களை இறைநம்பிக்கையில் திடப் படுத்தினார். அதே போல நாமும் நம்மையும் பிறரையும் இறைநம்பிக்கையில் திடப்படுத்த இயேசுவின் அனுபவத்தைச் செபத்தின் வழியாக பெற்றுக்கொள்வோம். இயேசு திருச்சட்டத்தின் நிறைவு என்பதை மேற்கோள் காட்ட திருச்சட்டத்தை பற்றி நற்செய்தி வழியாக போதித்தார். அதைப்போல நாமும் திருச்சட்டத்தின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் பொழுது   திருச்சட்டத்தின் நிறைவாகிய இயேசுவை நம் வாழ்வின் வழியாக நற்செய்தியாகப்  பறைசாற்ற முடியும். 

"என்னைப் பின்செல் "என்று ஆண்டவர் இயேசு மத்தேயுவைப் பார்த்து கூறினார். அப்பொழுது அவரும் எழுந்து அவரைப் பின்தொடர்ந்தார். பணமே வாழ்க்கை என்று நினைத்த மத்தேயு நிலையான செல்வமாகிய இயேசுவை அறிந்தவுடன் அனைத்தையும்  விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார். இயேசுவின் அழைப்பை திருமுழுக்கு வழியாக பெற்ற நாமும் இவ்வுலகம் சார்ந்த செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விண்ணகம் சார்ந்த நிலையான செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இன்றைய நாளிலே புனித மத்தேயுவைப் போல பாவத்திலிருந்து மனமாற்ற வாழ்விலே நிலைத்து தூய்மையாக வாழ தேவையான அருளை வேண்டுவோம். தூய உள்ளத்தோடு இறைவேண்டல் வழியாக இயேசுவை அனுபவித்து அதை வாழ்ந்து காட்டி நமக்கும் பிறருக்கும் நற்செய்தியாக வாழ தேவையான அருளை வேண்டுவோம். அப்படிப்பட்ட அருளைப் பெறும் பொழுது நாமும் பிறரும் இறைநம்பிக்கையில் வளரமுடியும்.

 இறைவேண்டல் : 
வல்லமையுள்ள இறைவா! பாவிகளாகிய நாங்கள் எங்கள் பலவீனத்திலே மூழ்கிவிடாமல் புனித மத்தேயவைப் போல மனம் திரும்பி தூய்மையான வாழ்வில் நிலைத்திருக்க அருள்தாரும். நாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பின் படி வாழவும் அதன்வழியாக இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகிரவும் அருளைத் தாரும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்